உலக தாய்மொழி தினம் - International Mother Language Day- FEBRUARY 21
மொழி ஒரு கருவி. மனிதன் மொழிகொண்டுதான் வாழ்கின்றான். மொழியால் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றான். உலகில் 4000-5000 மொழிகளிருப்பதாக ஆய்வுநிலை மொழிநூல்கள் கூறுகின்றன.
பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே பிறந்த மொழி எம் தாய்மொழியாம் தமிழ் மொழி. அனைவருக்கும் உலக தாய்மொழிதின வாழ்த்துகள்.
ஒருவன் சிறுவயதில் கற்றுக்கொண்டதும் சிந்திக்கவும் கருத்துக்கள பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உகந்ததும் தாய்மொழி எனலாம்.
ஒருவரின் தாய்மொழி தனது பெற்றோரின் மொழியா? அல்லது தனது தாயின் மொழியா? என்பதில் சிக்கல் உள்ளது. எமது தாய் மொழி தமிழ். எமது புலம்பெயர் வாழ்வில் பிறந்த பிள்ளைகளுக்கும் தமிழ்தான் தாய்மொழியா?
புலம்பெயர் வாழ்வில் தாய்மொழி எது என்பதை வரையறுப்பதில் சிக்கல்கள் உள்ளன.
ஒருவரின் தாய்மொழி என்பது அவரின் பெற்றோரின் தாய்மொழியாக எப்போது அமையுமெனின் அவரின் பெற்றோரின் தாய்நாட்டில் அவர் வாழும்போதும் அல்லது அவரின் தாய்நாட்டுமொழி மற்றொரு நாட்டுமொழியாக இருக்கும்போதுமேயாகும்.
எனவேதான் யுனெஸ்கோ தாய்மொழி என்றால் என்ன என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றது.
(The use of vernacular languages in Education ,Report of the UNESCO ,Paris 1953)
1.பெற்றோர்களுடைய தாய்மொழியும் பிள்ளைகளின் தாய்மொழியும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நியதி இல்லை.
2.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழியும் ஒருவனுக்குத் தாய்மொழியாக அல்லது தாய்மொழிகளாக அமையும்.
3.ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழி மாறிக்கொண்டே போகலாம்
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார்
பெற்ற தாயைவிட சிறந்தது தாய்மொழியாகும். எந்நாட்டவராக இருப்பினும் அவரவர் தாய் மொழியிலேயே கல்வி கற்பதுதான் மிகச் சிறந்ததாகும்.

உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம் மாகாணம். நாடு கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு தாய்மொழி இருக்கும்.
இவற்றின் தனித்தன்மை பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும் அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பெப். 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.
உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பெப்.21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.தாய்மொழி தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும் என அறிஞர்கள் கூறுவர்.
ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும் வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும் மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது.தமிழ் மொழி 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும் புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ் செம்மொழி ஆக்கப்பட்ட பின் ஓரளவு புரிதல் வந்தது.
மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்த சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும். தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை குழந்தை கற்றுக் கொள்கிறது.
தாய்மொழியை அறிமுகப்படுத்துவது தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள் வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே குழந்தைகளால் கற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின் மூன்றரை வயதுக்கு மேல்ரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.
நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.
தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- ஞா.தேவநேயப் பாவாணர்
உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்என்று பாரதியார்.கூறியுள்ளார். பல மொழிகளை கற்றறிந்தவர் பாரதியார். அவர்கள் கற்ற அத்தனை மொழிகளிலும் இனிமை உள்ளது என்று பாரதி கூறியுள்ளார். தன் தாய்மொழியின் மீது இருந்த பற்றினையும் உயர்வினையும் எவ்வளவு அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.
ஒருநாள் போதுமா?
தாய்மொழியின் உயர்வை உன்னதத்தைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் ஒருநாள் போதுமா?
மொழி என்பது வெறும் கருத்து பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி அது மக்களின் கலாச்சாரங்களைத் தாங்கி நிற்கும் சாதனமாக உள்ளது. அது மக்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. தாய்மொழிக் கல்வியால் கலாச்சாரங்களை ஒட்டி கல்வி கற்க முடிகிறது. மக்கள் தங்கள் கலாச்சாரங்களைத் தழுவி வாழ்கின்றனர். இதனால் உலகில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்க முடிகிறது.

உலக நாடுகள் அனைத்தும் தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்துள்ளன. நம் நாட்டிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் மொழி கல்வியை ஆதரித்தால் தான் ஒரு வலிமையான தலைநிமிர்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்.
மொத்தத்தில் உலகத்தை புரிந்துகொள்ள வழிசெய்கிறது இம் மொழி. அறியாமையை அகலச்செய்து அறிவின் அளவை அகலச்செய்கிறது மொழி எனலாம்.