உலக புன்னகை தினம்(World Smile Day)
புன்னகை என்பது மனிதனோடு கூடப் பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு.எதிரிகளைக்கூட நண்பர்களாக்கி உறவுகளைப்
பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை.
மனிதனால் எதை வேண்டுமானாலும் சம்பாதித்து வாங்கி விடலாம் மகிழ்ச்சியைத் தவிர. ஒருவரை அழ வைப்பது சுலபம், அதுவே சிரிக்க வைப்பது கடினம்.
ஹார்வே பால் என்பவர் 1963-ல் புன்னகை முகம் (smiley face) என்பதை அறிமுகம் செய்தார். இதனையடுத்து இந்த ஸ்மைலிக்கள் நம் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே மாறியது. 1999-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அக்டோபர் முதல் வெள்ளியான இன்று(அக்டோபர் 1 2021) உலக புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.

மேக்கப் இல்லாமலே நம் முகத்தை வசீகரமாக மாற்றக்கூடிய சக்தி, இந்தப் புன்னகைக்கு இருக்கிறது. ஒரு சிறு புன்னகை போதும், புன்னகை முகத்தைப் பார்க்கும்போது, நமக்கும் புன்னகைக்கத் தோன்றும். வீடாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மெல்லிய புன்னகை ஒன்றைப் பூத்திடுங்கள். புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு ‘வணக்கம்’ சொல்லி கை குலுக்கி நம் பெயருடன் அறிமுகம் ஆகிறோம்.
இதனுடன் புன்சிரிப்பையும் வெளிப்படுத்தினால், அந்தச் சந்திப்பு நம்மால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிடும்.நமது முகத்தை எப்போதும் ஆங்ரி பேர்டு(Angry Bird)மாதிரி சிவப்பாக வைத்திருக்காமல், ஸ்மைலி மாதிரி சிரித்த முகத்தோடு வைத்திருப்பது நல்லது.

புன்னகை என்பது அன்பின் வெளிப்பாடு.
காதலின் மொழி.
இது மனிதனை, உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
வருடங்கள் ஓடினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புன்னகைக்கு மாற்றாக எதுவும் இந்த உலகில் இல்லை.
தாயின் முகம் கண்டு புன்னகை செய்யும் குழந்தையின் முகம் அன்பின் வெளிப்பாடு.
வாருங்கள் புன்னகையுடன் உலக புன்னகை தினத்தை கொண்டாடுவோம்.
அன்புடன் முனைவர் ஸ்ரீரோகிணி (ஈரோடு) உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் துபாய்,அமீரகம்