top of page

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள்


#நடிகர்திலகம்

#சிவாஜிகணேசன்

#பிறந்தநாள்

பணம் என்னடா பணம் பணம்,குணம் தானடா நிரந்தரம்...!

இன்று அக்டோபர் 1ந்தேதி செவாலியே நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் ..! சினிமாவிலும் சரி...! வாழ்க்கையிலும் சரி...! யாராவது கொஞ்சம் நடித்துவிட்டால்...! ‘பெரிய சிவாஜிகணேசன்னு நெனைப்பு’ என்றுதான் சொல்லுவார்கள்...! சொல்லுவோம். சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொன்னவர்கள் கூட, நடிப்புக்கான முகவரியாக, நடிப்பின் கூகுளாக, நடிப்பின் டிக்‌ஷனரியாக சிவாஜியைத்தான் உதாரணம் சொல்லுவார்கள்...! சிகரம், இமயம், திலகம் என்று எதைச் சொன்னாலும் கட்டுக்குள் வராத பிரமாண்ட நாயகன் சிவாஜிகணேசன். கிட்டப்பாக்கள், சின்னப்பாக்கள், பாகவதர்கள் எனும் காலத்துக்குப் பிறகு, ஒரு நடிகருக்கு முதல் தேவை உடல்மொழி என்பதை, படத்துக்குப் படம், காட்சிக்குக் காட்சி நிரூபித்து உணர்த்திய உன்னதக் கலைஞன் சிவாஜி என்பதை வரலாறு சொல்கிறது. போடாத வேஷமில்லை. ஏழை, பணக்காரன், காதலன், கணவன், ராஜா, மந்திரி, புலவர், அப்பாவி என்று சாதாரணமாகப் பட்டியலிட்டுவிடமுடியாது. ஏழை என்றால் எதுமாதிரியான ஏழை. ஒவ்வொரு விதமான ஏழைக்கென, உடல்மொழியையே உடையாக மனதில் தைத்துப் போட்டுக்கொள்ளும் மகாகலைஞன்.


பணக்காரன் என்றால், கர்வமான பணக்காரனா, குடிகார பணக்காரனா, அன்பான பணக்காரனா... அதற்குத் தகுந்தமாதிரி, சிவாஜி எனும் ஐந்தடி உயரக்காரர், ஆள்மாற்றுகிற ரசவாதமெல்லாம் இந்தியதுணைகண்டம் வரை தேடினாலும் கிடைக்காதது! பார்மகளே பார் படத்திலும் பணக்கார சிவாஜிதான். உயர்ந்த மனிதனிலும் அப்படித்தான். வசந்தமாளிகையிலும் ஒருவித பணக்காரர்தான். அவன்தான் மனிதன் பணக்காரனும் வேறுவகைதான். ஆனால், ஒரு பணக்காரக் கேரக்டரை இன்னொரு பணக்காரத்தனத்துக்குள் புகுத்தமாட்டார் என்பதுதான், சிவாஜியின் தனி ஸ்டைல்.எந்நேரமும் போதையில் இருப்பது மாதிரியே இருப்பார், வசந்தமாளிகையில். எப்போதும் அன்பு கலந்த அப்பாவித்தனத்துடன் இருப்பார். படிக்காத மேதை ரங்கன். உள்ளம் என்பது ஆமைக்கு ஒருவிதமாக நடப்பார். ஆறுமனமே ஆறு பாடலுக்கு வேறுவிதமாக நடப்பார். மாதவிப் பொன்மயிலாள் பாட்டுக்கு தனி ராஜநடை. திருவிளையாடலில் கடற்கரையில் நடக்கும் போது அதுவொரு ஸ்பெஷல் நடை. தெய்வமகனில் மாடிப்படி ஏறுவார். திரிசூலத்திலும் மாடிப்படி ஏறுவார். அங்கே ஒருவிதம்..!இங்கே ஒரு ஸ்டைல் நடை. இப்படி தமிழ் சினிமாவில், இவரின் நடை, பார்வை, பேச்சு, உடல்மொழி என்று எத்தனையெத்தனை ஸ்டைல்கள். நடிப்பில் மட்டுமல்ல...!சிவாஜியின் நடையைக் கூட மிஞ்ச எவருமில்லை. பச்சை விளக்கு அண்ணன், பாசமலர் அண்ணன், அன்புக்கரங்கள் அண்ணன், அண்ணன் ஒருகோவில் அண்ணன், நான் வாழ வைப்பேன் அண்ணன். ஆனால் அண்ணன் எனும் கேரக்டரும் சிவாஜியும்தான் ஒன்று. ஆனால் ஒவ்வொருவிதமான அண்ணன்களைக் காணலாம் அங்கே. அப்படியான மாற்றங்களைச் செய்ய, இனி நூறு சிவாஜி பிறந்தால்தான் உண்டு. பீம்சிங் சிவாஜியை ரசித்த காதலன். இவரின் பா வரிசைப் படங்கள் ஒவ்வொன்றிலும் அடிதூள்கிளப்பியிருப்பார். பி.ஆர்.பந்துலு வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மனையே பிழைக்கவைத்து, சிவாஜி வழியே உலவவிட்டவர். வ.உ.சியை, பாரதியை, பகத்சிங்கை, கொடிகாத்த குமரனை அவ்வளவு ஏன் சிவபெருமானையே நம் கண்ணுக்கு முன்னே நிறுத்தி, நடிப்பின் மூலம் சந்தோஷம், உற்சாக வரங்களைத் தந்த உன்னதக் கலைஞன் சிவாஜிகணேசன். சினிமாவை, காமெடிப் படம் என்றும் , குடும்பப்படம் என்றும், காதல் படம் என்றும், ராஜா காலத்துப் படம் என்றும், புராணப் படம் என்றும், பழிவாங்கும் படம் என்றும், பாசத்தை உணர்த்தும் படம் என்றும் பிரிக்கலாம். இந்தப் பிரிவுகள் அனைத்திலும் சிவாஜி நடித்திருக்கிறார். அவர் நடித்ததாலேயே அது சிவாஜிபடமாயிற்று! பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன், பி.மாதவன், டி.யோகானந்த் என்று சிவாஜியை திரையில் விளையாடவிட்டு, ரசித்த இயக்குநர்கள் பட்டியல் ஏராளம். அவரின் அதகளமும் ஆட்டமும் கண்டு பிரமித்துப் போனவர்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள்!நாதஸ்வரக் கலைஞனாகவும் நடிப்பார். மிருதங்க வித்வானாகவும் பொளந்துகட்டுவார். எப்படி வாசிக்கவேண்டும் என்பதை பியானோ ஸ்பெஷலிஸ்ட், இவரின் புதியபறவை பார்த்துதான் வாசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாரோ என்று தோன்றும். முதல்மரியாதை சிவாஜியும் தேவர்மகன் சிவாஜியும் வேற லெவல். வேற ரகம். சிவாஜி, வரம் பெற்ற கலைஞன். சாகா வரம் பெற்ற கலைஞன். நெஞ்சிருக்கும் வரை... ! அவரின் நினைவிருக்கும்...! அடுத்தடுத்த தலைமுறையிலும் தவப்புதல்வனெனத் திகழ்வான் தன்னிகரில்லா கலைஞன்..!நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!


அன்புடன் முனைவர் ஸ்ரீரோகிணி (ஈரோடு) உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் துபாய்,அமீரகம்

33 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page