top of page

பெரியார்

Updated: Sep 7, 2022

1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி, தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோட்டில் பிறந்த ஒரு குழந்தை, வாழ்நாளில் 8 ஆயிரத்து 200 நாட்கள் மக்களை நோக்கிய பயணத்திற்கும், 21 ஆயிரத்து 400 மணிநேரத்தை மக்களிடம் பேசுவதற்குமே செலவானது! இந்த அதிசயம் தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி என்பவரின் வாழ்க்கையில்தான் நடந்தது.அந்த அதிசயம் நடந்த ஊரில் காவிரி தாயின் காவிய மகனாய் பிறந்த புண்ணிய பூமி ஈரோட்டில் நானும் பிறந்தேன் என்ற பெருமிதம்.



எந்தக் கருத்தையும் ஏன் எப்படி எதற்காக எனக் கேள்வி கேட்டுச் சிந்தித்து வாதிட்டு அதன்பின்னே ஏற்கவேண்டும் எனக் கற்றுக்கொடுத்த நமது காலத்தின் சாக்ரடீசு,உணர்வுக்குக் கடிவாளமிட்டு அறிவை விரிவுசெய்யுமாறு வாழ்நாளெல்லாம் மக்களை ஆற்றுப்படுத்திய இரண்டாவது புத்தர், அறிவியக்க வானத்தின் ஒளிகுன்றாச் சூரியன்!கிழக்கில் உதிக்கும் சூரியன் அகத்தின் இருளை அகற்றமுடியவில்லை; ஈரோட்டில் உதித்த சூரியன் சனாதன இருட்டை விரட்டி ஓட்டியது. சாதி சமயப் புரட்டால் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த வைதிகப்பெருச்சாளிகள் பகுத்தறிவுப் பரப்புரையின் வெப்பம் தாங்காமல் விரைந்தோடி மறைந்தன; காலங்காலமாய்த் தூங்கிக்கொண்டிருந்த தமிழர்கள் ஆயிரம் ஆண்டுத் தூக்கம் கலைந்து புதிய வைகறை தோன்றக்கண்டு விழித்தெழுந்தனர்.


ஈரோட்டுச் சூரியன் வருகையால் நவக்கிரகங்களும் நடுநடுங்கிக் கிடுகிடுத்தன. தமிழ்ப்பெண்களின் திருமண முயற்சியின்போது வக்கிரப் பார்வை பார்ப்பதையே வேலையாகக் கொண்டிருந்து வீம்பு செய்த நவக்கிரகங்கள் சோதிடர் ஏந்தி வந்த பஞ்சாங்கங்களைக் கிழித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்துப் பெண்களுக்கு விரும்பும் ஆடவரை மணம் செய்துகொள்ளச் சுதந்திரம் அளித்தன. வெள்ளையர் ஆதிக்கத்தை விரட்டியடிக்க விடுதலைப் போரில் களமிறங்கிய மாவீரர்;கள்ளுக்கடை மறியல்வெற்றி காண்பதற்காகத் தமது தோப்பின் தென்னைமரங்களையே ஆயிரம் ஆயிரமாய் வெட்டிச்சாய்த்து காந்தியடிகளையே மூக்கில் விரல் வைக்கச்செய்த தன்னல மறுப்பாளர்; வெள்ளையர் ஆதிக்கத்தை விரட்டும் முன் உயர்சாதி ஆதிக்கத்திலிருந்து ஒடுக்கப்பட்டோர்க்கு விடுதலை பெற்றுத்தர வேண்டுமென்பதைக் கற்றுத்தந்த வைக்கம் வீரர்.



பெரியாரின் சமூக அக்கறை அந்த அளவுக்கு ஆழமானது, பரந்து விரிந்தது. ஏனென்றால், பெரியாரின் விமர்சனம் அந்த அளவுக்குக் கூர்மையானது, அர்த்தமுள்ளது. தன்னிச்சையான சுய சிந்தனையால் எந்த ஒரு பிரச்சினைக்கும் நேரடித் தீர்வுகளை பெரியாரால் சிந்திக்க முடிந்தது. எல்லாத் தலைவர்களையும் போலவே, பெரியாரின் முன்னெடுப்புகளும் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறிச் சந்தித்தன. ஆனால், மற்றவர்களிடமிருந்து பெரியார் என்கிற தலைவர் வேறுபடும் முக்கிய இடம், பிரச்சினைகளை அவர் பார்க்கும் கோணம். அதை அவர் முன்வைக்கும் விதம். அதைப் பரப்ப அவர் மேற்கொண்ட உழைப்பு.


கைகட்டி வாய்பொத்திப் பணிந்து வணங்கிக் குனிந்து கும்பிட்டது போதும்; எழுந்து நில்! உரிமைப் போரில் துணிந்து வெல்! என எழுச்சியூட்டிச் சுயமரியாதை இயக்கம் கண்டார். நீதிக்கட்சியை சமூகநீதிக் கட்சியாக்கினார், சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் மூலம் வகுப்புவாரி ஆணை பிறப்பிக்க வழிவகுத்தார். உயர்சாதி ஆதிக்க இருள் கப்பிக் கிடந்த இந்தியத் திருநாட்டில் புதிய ஒளி பிறக்கச்செய்தார். அவர் விதைத்த அந்த விதை ஆலமரமாய்க் குமரி முதல் இமயம் வரை பரந்து படர்ந்து ஒரு நூற்றாண்டுக் காலம் ஒடுக்கப்பட்டவர்க்கும் ஒதுக்கப்பட்டவர்க்கும் நிழல் வழங்கிக்கொண்டிருக்கிறது.


பெரும்பாலும், தலைவர்கள் அல்லது மதிக்கப்படக்கூடிய ஒருவர் என்றால் அவரது பிறந்தநாளுக்கும், நினைவு நாளுக்கும் மட்டுமே அவர்கள் பேசுபொருளாக இருப்பார்கள். ஆனால் பெரியார் விஷயத்தில் ஆச்சரியம் என்னவென்றால், பிரச்சினை எதுவாக இருந்தாலும் தீர்வாகவோ அல்லது திருப்பமாகவோ பெரியாரின் பெயரும் அதில் பேசுபொருளாக அடிபடும். முன்பு இல்லாத அளவுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் பெரியார் குறித்த பேச்சும் கருத்துகளும் கணிசமாக அதிகரித்துவருகின்றன.இந்திய விடுதலைக்குப்பின் வஞ்சநெஞ்சம் கொண்ட ஆதிக்கச் சாதியினர் உச்சநீதிமன்றத்தின் மூலம் முட்டுக்கட்டை போட முயற்சி மேற்கொண்டனர். நேரு, அம்பேத்கார் இருவரின் நேரிய முயற்சியால் இந்திய அரசியலமைக்கு முதலாவது சட்டத்திருத்தம் நாடாளுமன்றில் 1951-இல் நிறைவேற்றபட்டது. தானியங்கி ஓட்டுநர் மகன் மாவட்ட ஆட்சியாளர், தச்சுத்தொழிலாளி மகன் மருத்துவர், துப்புரவுத் தொழிலாளி மகன் காவல்துறை அதிகாரி, வரலாறு காணாச் சமூகப் புரட்சிக்கு வழி வகுத்தார் பெரியார். வகுப்புவாரி உரிமை ஆணை, ஒடுக்கப்பட்டோர் உயர்வுபெற வழிவகுத்த ஒப்பற்ற சமூக ஆவணம், தந்தை பெரியார் மக்களுக்கு வழங்கிய அட்சய பாத்திரம்; அணையா விளக்கு, அமுதசுரபி, வற்றாச் செல்வம்.


தமிழ் மொழிக்கு என்ன செய்தார் என்று யோசித்தால்,என்ன செய்யவில்லை என்றே கேட்க வேண்டும்.தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் மனோன்மணீயம் சுந்தரம், பிள்ளை மறைமலையடிகள் முதலான தமிழ்ச்சான்றோர்கள். ஆனால் அந்த அடித்தளத்தில் மாளிகை எழுப்பியவரும் தூணாகவும் அரணாகவும் துணைநின்றவர் பெரியார்.



தமிழாராய்ச்சியில் பெரிதும் ஈடுபாடுகொண்ட பொறியாளர் பா.வே.மாணிக்கநாயகர் தமிழ்த்தாத்தாவைப் பார்க்கச் சென்றார்.

ஐயா வணக்கம் என அவர் கூறியவேளையில்

“என்ன நாயக்கர்வாள்

நீங்களும் இந்த

சூனாமானா காரர்களைப் போல்

வணக்கம் என்கிறீகள்?

நமஸ்காரம் என்று சொல்ல வேண்டியது தானே?”

எனத் தமிழ்த்தாத்தா வருத்தத்துடன் வினவியுள்ளார்.

வணக்கம் எனச் சொல்வது சுயமரியாதைக்காரரின் அடையாளமாகத் தமிழறிஞராலேயே கருதப்பட்டது எனில் அக்காலத்தில் தமிழின் நிலையைக் கருதிப் பாருங்கள். “சாபிட்டாயிற்றா?” என்னும் கேள்வியைப் பிச்சைக்காரனைப் பார்த்துத்தான் கேட்க வேண்டும். சாதி இந்துக்களைப் பார்த்தால் “போஜனமாயிற்றா” என்றும், பிராமணர்களைப் பார்த்தால் “நிவேதனமாயிற்றா” என்றும் கேட்க வேண்டுமாம். ஏன்? இந்தக் காலத்தில் கூட “சோறு” என்பது இழிந்தோர் பயன்பாடாகவும் “சாதம்” உயர்ந்தோர் பயன்பாடாகவும் கருதப்படவில்லையா?


பெரியாரின் சுயமரியாதை இயக்கம் “வணக்கம்” என்னும் சொல்லை வழக்கத்திற்குக் கொணர்ந்தது. “நமஸ்காரம், நமஸ்தே” ஐயர்கள் வழக்காகவும், “சேவிச்சுக்கிறேன்” ஐயங்கார் வழக்காகவும், “ஸ்தோத்திரம்” கிறித்தவர் வழக்காகவும், “சலாம்” இசுலாமியர் வழக்காகவும், “கும்பிடறேனுங்க சாமி” ஒன்று மற்ற ஒடுக்கபட்டவன் வழக்காகவும், அடையாளத்தால் பிரிந்திருந்த தமிழர்களை சுயமரியாதைக்காரரின் “வணக்கம்” ஒன்றுபடுத்தியது. “வணக்கம்” என்ற ஒற்றைச்சொல் சாதி சமய வேறுபாடுகளைத் தகர்த்தெறிந்து. அனைவரையும் ஒன்றுபடுத்தியதல்லவா?

இன்றும் பெரியார் தொடங்கின வணக்கமே கற்றுக் கொண்டு நகர்கிறோம் நாம்.நோய் என்ன, அதற்கான மருந்து என்ன என்பதைத் தீவிரமாகச் சிந்தித்த அவர், நாளுக்கு நாள் அந்தச் சிந்தனையை மெருகேற்றிக் கொண்டே வந்தார். அதனால் அவருடைய தீர்வுகளும் செம்மைப்படுத்தபட்டன. நடைமுறை சார்ந்த வெளிப்படையான சிந்தனையும், எளிய மக்களின் வாழ்க்கை குறித்த ஆழமான புரிதலும், அதை எளிய மக்களின் மொழியிலேயே எடுத்துச் சொல்லும் திறனும் பெரியாருக்குக் கூடுதல் சிறப்புகளாக அமைந்தன. அவையே அவரைத் தனித்து நிறுத்தின. இன்று வரையிலும் நிறுத்துகின்றன.


பெரியாருக்கு முன்பும் எளிய மக்களுக்காகக் கேள்விகளைக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் கேள்வி கேட்கப்படும் இடத்தையும் தோனியையும் மாற்றி அமைத்தவர் பெரியார். கீழே இருந்துகொண்டு மேலே பார்த்துக் கோரிக்கை வைப்பது என்பது ஒரு வகை. மேலே இருப்பவரையே கேள்வி கேட்க வைப்பது ஒரு வகை. ஆனால், அடித்தட்டில் இருந்தாலும், ஆணித்தரமான தோனியோடு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்கிற முறைமையைக் கொண்டு வந்தவர் பெரியார். கெஞ்சுவது அல்ல. உரிமைகளை உரத்த குரலில் கேட்பது. இதுவே பெரியாரின் குரல். நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் அவர் மாற்றங்களை ஏற்காமலும் இருந்ததில்லை. தன் கொள்கைக்குச் சார்பானவர்கள் என்பதால் சமரசங்களை ஏற்றுக் கொண்டதுமில்லை.


தொல்காப்பியத்தின் முதன்மையும், சங்க இலக்கியத்தின் செம்மையும் திருக்குறளின் தனித்தன்மையும், வடமொழியில் காண இயலாச் சிறப்புகள் எனத் தமிழறிஞர் ஆய்ந்துரைத்ததற்குத் தக்க பின்புலமாகத் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் விளங்கியது. சாமி சிதம்பரனார்,தேவநேயப்பாவாணர், கா.அப்பாதுரை, சி.இலக்குவனார், மா.இராசமாணிக்கனார் எனப் பல தமிழறிஞர்கள் தமிழாய்வுக்குப் புதிய தடம் அமைத்ததற்குப் பெரியாரின் இயக்கம் பெருந்துணையாய் அமைந்தது என்பதை மறுக்கலாமா? மறக்கலாமா? பாவாணரின் “திரவிடத்தாய்”, அப்பாத்துரையாரின் “குமரிக்கடல்”, இலக்குவனாரின் “தொல்காப்பிய ஆராய்ச்சி”, இராசமாணிக்கனாரின் “தமிழர் திருமணத்தில் தாலி”, ஆரியப் புரட்டுகளைக் கிழித்தெறிந்த கூரிய அம்புகள் அல்லவா?


பெரியாரின் கொள்கைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் கடவுள் மறுப்பு என்பது பெரியாரின் கொள்கையே கிடையாது என்பது அதிகம் கவனிக்கப்படாத உண்மை. “சாதி ஒழிப்பே எனது குறிக்கோள். ஆனால் சாதி அமைப்பு கடவுளின் மேல் கட்டப்பட்டிருப்பதால் நான் கடவுளையும் மறுக்கிறேன்” என்பதே நீங்கள் கடவுளியல் கோட்பாட்டுக்கு எதிரானவரா என்ற கேள்விக்கு பெரியார் அளித்த பதில்.


“என் நூறு கூட்டங்கள் மக்கள் மனத்தில் ஏற்படுத்தக்கூடிய விழிப்புணர்வை கலைவாணரின் ஒரு திரைப்படம் சாதித்துவிடுகிறது” என்று தந்தை பெரியார் கூறினார். ஐயாவின் அறிவியக்கக் கருத்துகளை மக்கள் மன்றத்தில் பரப்புதற்கு கலைவாணர் என்.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.இராதா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் எனக் கலைஞர்களின் பேரணி அணிவகுத்துப் புறப்பட்டு ஆற்றிய பணியைச் சாற்றப் புகுந்தால் காப்பியமே பாடலாமே! அதுவரை வெறும் கேளிக்கையாக பொழுதுபோக்காகக் கருதப்பட்டு வந்த கலை- மூடநம்பிக்கைகளையும் புராணப் புளுகுகளையும் புறக்கணித்தொதுக்கும் பகுத்தறிவு நெறி புகட்டிய கொள்கை பரப்பும் ஆற்றல் வாய்ந்த ஊடகமாக உருமாறியதற்காகத் திராவிட இயக்கமல்லவா வழிவகுத்தது? “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எனப் பொய்யுரை புகலும் “புத்திசாலிகள்” இதனை எண்ணிப் பார்த்தனரா?


‘வயிற்றுச் சோறிட வேண்டும்-இங்கு

வாழும் மனிதருக் கெல்லாம்

பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்’

என்றும்,

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்’

என்று பாடிய மகாகவி பாரதி பிறந்த மண்ணில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து தமிழ்க் கவிதைகளால் விடுதலைக்கு வேகமூட்டிய மகாகவிக்கு மரியாதை செய்தார்.



கல்வி கற்க பள்ளிகள், கல்லூரிகள், விவசாயம் செழிக்க நீர்த்தேக்கங்கள், உயிர் காக்கும் மருத்துவமனைகள், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் என ஒரு மாநிலம் பயனுற தேவையான அத்தனை வசதிகளையும் ஒரு மனிதன் ஒன்பதாண்டுகளில் செய்து காட்டியுள்ளான் என்றால் ஏற்படும் வியப்பு சாதாரனமானதல்ல. தந்தை பெரியார் கிராமங்கள் தோறும் பேசிவந்த சமூக நீதிக் கொள்கைகளை உள்வாங்கி அதை தனது கையில் கிடைத்த அதிகாரம் மூலம் மக்கள் நலத் திட்டங்களாகவும், என்றென்றைக்குமான சட்டங்களாகவும் மாற்றிக்காட்டியவர் காமராஜர். அதனாலே தந்தை பெரியார் முதன்முறையாக தமிழ்நாட்டில் பச்சைத் தமிழன் ஆட்சி நடைபெறுகிறது என ஊர் தோறும் முழங்கினார். உடுமலை நாரணகவி, புலவர் குழந்தை, முடியரசன், வாணிதாசன், சுரதா சாமி பழனியப்பன் எனத் தொடங்கினால் ஆயிரம் ஆயிரம் பெயர்கள் விரியுமல்லவா? அத்துணைக் கவிஞர்களுக்கும் ஐயா வழங்கிய ஆக்கமும் ஊக்கமும் தமிழ்க்கவிதை வரலாற்றில் திருப்புமையத்தை ஏற்படுத்தியது வரலாறல்லவா?


இதழியல்துறையில் ஐயாவின் தாக்கம் ஆற்றிய பெரும்பணி அளவிடற்கரியது. குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை என்னும் தமிழ் இதழ்களையும், ரிவோல்ட் (Revolt), ஜஸ்டிசைடு (Justicite), தி மார்டர்ன் ரேசனலிஸ்ட் (The Modern Rationalist) என்னும் ஆங்கில இதழ்களையும் நிறுவி நடத்திய தலைவர் ஐயா அவர்களே என்பதில் ஐயமேது? தாம் இதழ் நடத்தியதுடன் தம் இயகத்தினர் இதழ் நடத்தத் தூண்டுகோலாகப் பெரியார் விளங்கியதால்தான் திராவிட இயக்கத்தினர் இருநூற்று நாற்பது இதழ்கள் நடத்திய இணையிலாச் சிறப்பை வரலாறு ஆவணப் படுத்தியுள்ளது. ஒரு சமூகமாற்றத்தின் அடித்தளம் அல்லவா? கடவுள் பெயர்களைச் சூட்டுவதைப் போலவே இலக்கியப்பெயர்களைச் சூட்டும் வழக்கம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. அது மட்டுமல்ல மரபுவழிக் கடவுள் பெயர்களுடன் சாதிப்பெயர்கள் ஒட்டுவது போலத் தனித்தமிழ் கமழும் இலக்கியப் பெயர்களுடன் சாதிப்பெயர்கள் ஒட்டவே ஒட்டாது. ‘நெடுஞ்செழியன் செட்டியார்’ என்றோ ‘அன்பழகன் நாயக்கர்’ என்றோ சொல்லிப்பாருங்கள். சமீபத்தில் தமிழ் தாத்தா என நாம் வரலாற்றில் அறியப்படும் அறிஞர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் பெயரையே உதாரணம்.தனித்தமிழ் கமழும் இலக்கியப் பெயர்களுடன் சாதிப்பெயர்கள் ஒட்டவே ஒட்டாது.


அரசியல், ஆட்சியியல், இதழியல், கலை, இலக்கியம், திரைப்படம் என அத்தனைத் துறைகளிலும் மறுமலர்ச்சியும் புதிய எழுச்சியும் ஈரோட்டுப் பெரியாரின் இணையற்ற கொடைகள் அல்லவா? பெருந்தலைவர் காமராசரின் துணையுடன் கல்வித்துறையிலும் மறுமலர்ச்சி கண்டார். பெரியார் வழியில் பெருந்தலைவர் ஆட்சியில் நெ.து.சுந்தரவடிவேலு, வா.செ.குழந்தைசாமி, முத்துக்குமரன், மு.ஆனந்தகிருஷ்ணன் எனப் பல கல்வியாளர்கள் கடைநிலைத் தமிழரும் கல்வியொளி பெறுதற்குப் பாடுபட்டதன் பலனால் இன்று உயர்கல்வியில் தமிழ்நாடு உலகத்தரம் பெற்றுள்ளது.


நுழைவுத் தேர்வுமுறை சிற்றூர் மாணவர்களின் நலனைக் கெடுத்துவிடும் என எதிர்த்தார் பெரியார். அவர் காட்டிய நெறியில் நுழைவுத்தேர்வு ஒழிந்தது. அடித்தள மக்களும் உயர்கல்வி பெற்றனர். உலகெங்கும் தமிழ்மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கணக்காயர்களாக, கணினிவல்லுநர்களாக உயர்வும் சிறப்பும் பெற்று மிளிர்கின்றனர். இந்த முன்னேற்றம் கண்ணை உறுத்துவதால் தமிழ்மாணவர்கள் மருத்துவக்கல்லூரியும் தொழிற்கல்வியும் பெற முட்டுக்கட்டைகள் போட்டுத் தடுக்கின்றனர். அன்று தீட்டு என ஒதுக்கியவர்கள், இன்று நீட்டு என ஒதுக்குகிறார்கள் ஒடுக்குகிறார்கள்.


நுழைவுத் தேர்வுமுறையை ஒழிப்பதே பெரியாருக்குச் செலுத்தும் உண்மைவாய்ந்த புகழ்வணக்கமாகும். ஒன்றுபடுவோம் போராடுவோம். இனியொரு பெயர் தெரிந்த அனிதாவோ,விக்னேசோ கனிமொழி,2021 ஆம் ஆண்டு இன்று வரை இன்னும் பெயர் தெரியாத எத்தனை உயிர் இன்னுயிர் துறக்கும் அவலத்தைப் போக்குவோம்.


1879ஆம் ஆண்டு பிறந்தது முதல் - 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி வரை மொத்தம் 34ஆயிரத்து 433நாட்கள் இந்த பூமியில் வளர்ந்தது, வாழ்ந்தது. நுட்பமாகப் பார்த்தால், பெரியாரின் அடிப்படையான குரல் எல்லா வகையான ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரானது. சமத்துவத்தை விழைவது.

பெண் உரிமை, சமத்துவம், சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் நலன், கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை எனப் பல விதங்களில் பெரியாரைப் பார்க்க முடியும்.திருமணம் என்பதில் புனிதம் ஏதுமில்லை. அது ஆண் - பெண் இடையிலான ஒப்பந்தம் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை என்கிற உண்மையை உடைத்துச் சொன்னவர் பெரியார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இவர் பேசுபொருளாகவே இருப்பதற்குக் காரணம் எந்த ஒரு பெரிய சிக்கலுக்கும் இவரால் சொல்ல முடிந்த எளிய, நேரடித் தீர்வுகள்தான். உணர்ச்சிப் பிசுக்குகள் அற்ற யதார்த்தமான பார்வைதான். பிரச்சினைகள் பேசப்படும்வரை பெரியாரும் பேசப்படுவார்!


வெல்க பெரியார்நெறி!



--அன்புடன்-- முனைவர் ஸ்ரீரோகிணி (ஈரோடு) உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர் தலைவர் - SB,TRG துபாய்,அமீரகம்



243 views1 comment

Recent Posts

See All
bottom of page