top of page

மெய்ப்பொருள்

எந்த ஒரு பொருளையும் யார் யாரிடம் கேட்டாலும் அப்படிக் கேட்டவாறே ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்பது பாடலின் பொருள். கேட்டல் என்று சொல்லப்பட்டாலும் யார் யாரிடம் கற்றாலும் அல்லது தெரிந்து கொண்டாலும் அல்லது எந்த நூலாசிரியர் எழுதியதைப் படித்தாலும் என்பதாகவும் கொள்ளலாம்.
கருத்துக் கூறுவர் எவராக இருந்தாலும் அவர்மீது கொண்ட பற்றின் காரணமாகவோ, மதிப்பின் காரணமாகவோ, விழைவின் காரணமாகவோ புகழ் பெற்றவர், செல்வாக்கு கொண்டவர், உயர்நிலையில் இருப்போர் எழில்நலம் மிக்கவர் என்பதற்காகவோ அவர் சொல்வதை ஏற்கக் கூடாது.


நண்பராயிருப்பவர் ஒருவர், தாழ்ந்த பொருளைக் கூறினும், நட்பு கருதி அதை ஏற்கவேண்டாம்; அதுபோல் பகைவரேயானாலும் சிறப்பான உயர்ந்த பொருளைக் கூறின், அவர்களிடம் உள்ள வெறுப்பால், அதைத் தள்ளி விடாது ஏற்க வேண்டும். சொல்பவர் தரம் நோக்காது மெய்ப்பொருளை உணரவேண்டும் என்பது கருத்து.


பகுத்து அறியும் அறிவு பகுத்தறிவாகும். எந்த நிலையிலும், எதிலும், சிறந்தது எது, நல்லது எது, விழுமியது எது என்றெல்லாம் உணர்ந்து அறியும் அறிவே பகுத்தறிவு எனப்படுவது. நூலறிவாலும் கேள்வியறிவாலும் பெற்றதை நுணுகிப் பார்த்து உண்மையை அல்லது சரியானது எது என்று பகுத்து அறிந்து கொள்ளவேண்டும். யாரையும் எல்லாமறிந்தவராகக் கருதி அவர் சொல்வனவற்றிற்கெல்லாம் அடிமையாகாமல் அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்ய வேண்டுவது மெய்ப்பொருள் காண்பது ஆகும். ஒரே பொருளைப் பலரும் பலவிதமாகச் சொல்வர். அவற்றில் மெய்ப்பொருளைத் தேர்ந்து காணவேண்டும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சுருங்கிய உலகில் உள்ளோம். இன்று முழு விடுதலை பெற்ற குடியரசு அமைப்பின் கீழ் நாம் வாழ்கிறோம். முன்னைவிட எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கூடுதலாக நமக்குக் கிடைத்துள்ளன. இந்தச் சூழ்நிலைகளில், பல்வேறுபட்ட சமயக் கோட்பாடுகள், அரசியல் கருத்துக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு பகுதிகளிலிருந்து தோன்றி நம்மை நாளும் தாக்குகின்றன. செய்தித்தாள்கள், செய்தி இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளங்கள், கைபேசி போன்ற ஊடகங்களும் அளவின்றிச் செய்திகளை அள்ளித்தருகின்றன. அதனால் பயனுள்ள செய்திகளுடன் கவர்ச்சிப் பேச்சுக்களும் மயக்கும் வாதங்களும் மலிந்து வருகின்றன. இன்னபிற காரணங்களால் இன்று இக்குறள் இன்னும் பொருள் வாய்ந்ததாக அமைகிறது.


பொதுவாகத் தனி மனிதப் பற்றும், புகழ்ச்சியும் மிகையாக நம்மிடையே உண்டு; யார் சொல்லுகிறார் என்பதைத்தானே பார்க்கிறோமேயொழிய என்ன சொல்லுகிறார் என்பதை ஆராய்வதில்லை. சொல்லுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொல்லுகிற கருத்திலே மெய்ப்பொருள் தன்மை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சொல்பவர் தோற்றம் கண்டு மயங்காமல் சொல்லப்பட்டதன் மெய்ப்பொருளைக் கண்டு பயன்பெற வேண்டும்.


சமயக்கருத்துக்கள் எல்லாம் சில நம்பிக்கைகளை அடிப்படைகளாகக் கொண்டவை; வள்ளுவர் நம்பிக்கையை முதன்மையாகக் கொள்ளவில்லை; அவர் அறிவையே முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துபவர். எனவே கண்மூடித்தனமாக நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்பதை அறிவுறுத்தவும் வந்தது இப்பாடல் என்பர்.

புத்தரும் மெய்ப்பொருள் காண்பதற்கு முதலிடம் தந்தார். பௌத்த நூலில் காணப்படும் 'பிட்சுகளே! நன்றாக உருக்கியும் நறுக்கியும் கட்டளைக் கல்லில் உறைத்தும் பார்த்துப் பொன்னின் மாற்றினைச் சோதிக்கும் அறிஞனைப்போல என் சொற்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்த பிறகுதான் நீங்கள் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். என்னிடம் வைத்திருக்கும் மதிப்பு மரியாதை காரணமாக என் சொற்களை ஏற்க வேண்டாம்' என்ற பகுத்தறியச் சொல்லும் அவரது அறிவுரை இதற்குச் சான்று பகரும்.


கிரேக்க அறிஞர் சாக்ரடீஸும் 'பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்றார். குறள் ஆய்வாளர்கள் இக்குறளைத் திறன் செய்யும்போது சாக்ரடீஸை வள்ளுவருடன் ஒப்பு நோக்கத் தவறுவதில்லை. 'ஏன்' என்று கேட்பது பாவச் செயல் என்று கருதப் பழக்கப்பட்ட மனிதர்களை நோக்கி 'ஏன்' என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறினார் சாக்ரடீஸ். இக்குறளின் நோக்கமும் அதுதான்.


அறிவை முதன்மையாகப் போற்றும் வள்ளுவருடைய பண்பு சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இங்கர்சால் என்னும் புகழ்பெற்ற பகுத்தறிவாளரை திருக்குறளிடத்து ஈர்த்தது. இங்கர்சாலின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து அவரால் மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வரப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று.

எந்தவொரு கோட்பாட்டிற்கும் அடிமைப்படாத, கட்டறுத்த உரிமை நிலை கொண்ட சிந்தனையாளரான வள்ளுவர் நம் அறிவுக்கும் தடைவிதிக்காமல் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும் என்று அறிவுரை பகர்கின்றார். தனது கருத்தே உயர்ந்தது என்றும் எங்கும் அவர் சொல்லவில்லை. வள்ளுவர் சொன்னார் என்பதற்காக எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வேண்டாம் என்பதும் இக்குறளால் பெறப்படும். எனவே திருக்குறள் கருத்துக்களிலும் மெய்ப்பொருள் காண்பதையே அவர் விரும்புவார். அவ்வாறு உண்மை கண்டறிவோரே வள்ளுவர் வழியில் நிற்பவராவர்.

73 views2 comments

Recent Posts

See All

பிப்ரவரி 13

தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும். சுப்பிரமணிய பாரதியார்

2 Comments


Maragatham Moorthy
Maragatham Moorthy
Jul 29, 2022

அருமையான பதிவு. வாழ்த்துகள்....

Like

Malathi Packiaraj
Malathi Packiaraj
Jul 29, 2022

மிக அற்புதமான கருத்துக்கள் 👏👏

Like
bottom of page