மார்ச் மூன்றாவது வாரம்
(20-மார்ச்)
*உலக சிட்டுக்குருவிகள் தினம்*
ஒவ்வொரு ஆண்டும் உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

நவீன கட்டிட அமைப்பு, தேவைக்கு குறைவான தானியங்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படுதல், நிலம் மற்றும் நீர் மாசு காரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகவே, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக, அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
*சர்வதேச மகிழ்ச்சி தினம்*
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.

மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தை கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்கு கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா.சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா.பொதுச்சபை 2012ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது.
*******************************************************************************************************
(19-மார்ச்)
*எம்.பி.என்.பொன்னுசாமி*
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்கிற பாடலுக்கு நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவரான எம்.பி.என். பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கிய மற்றொருவர் நாதஸ்வரக் கலைஞரான எம்.பி.என்.சேதுராமன் (எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்) ஆவார். பொன்னுசாமி ஒன்பதாவது வயதில் இருந்து தனது சகோதரருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.
இவர் கலைமாமணி விருது, நாதஸ்வர கலாநிதி, சங்கீத சூடாமணி விருது, இசைப்பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
**********************************************************************************************************
(18-மார்ச்)
*ருடால்ஃப் டீசல்*
டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
இவருடைய உடல்நலம் குன்றியதால் 1879ஆம் ஆண்டு படிப்பை தொடர முடியவில்லை. அந்த நேரத்தில், சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார்.
பிறகு இவர் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டேவின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்து, நவீன முறையில் குளிர்சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார். அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநரானார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர்.

இவர் இன்ஜின்கள் குறித்தும் ஆராய்ந்தார். அந்த இன்ஜின்களின் திறனை நான்கு மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார். இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.
நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்துஇ இறுதியில் அதற்கு பதிலாக 'கம்ப்ரெஷன் இக்னிஷன்' இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே, இவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது.
உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கி தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய இவர் 1913ஆம் ஆண்டு மறைந்தார்.
**************************************************************************************************************
(18-மார்ச்)
*இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்*
இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம் மார்ச் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான நவீன பாதுகாப்பு சாதனங்களை நாடு முழுவதும் உள்ள 41 ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு சாதன போர்க்கருவிகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி, சோதனை என்று நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் செயல்படக்கூடிய ஒரு விரிவான தயாரிப்பு அமைப்பாக செயல்படுகிறது. உலகில் ஒரு அரசால் இயக்கப்படும் பாதுகாப்பு சாதன தொழிற்சாலையில் இது மிகப்பெரியது ஆகும்.
இந்தியா, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது அவர்களின் வர்த்தகம் மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு ஆயுத தளவாட உற்பத்தி அவசியத்தை உணர்ந்து 1775ஆம் ஆண்டு முதன்முதலாக கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் ராணுவக் குழு அமைக்கப்பட்டது. இதுவே, தற்போதைய இந்திய பாதுகாப்பு உற்பத்தி சாதன தொழிற்சாலைகளுக்கு ஆரம்பமாக அமைந்தது.
**********************************************************************************************************
*உலக தூக்க தினம்*
உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆரோக்கியமான தூக்கமே பல பிரச்சனைகளைத் தீர்க்கிறது. மேலும் தூக்கமே நல்ல மருந்தாக செயல்படுகிறது. தூக்கம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தூக்க மருந்து உலக சங்கம் 2008ஆம் ஆண்டிலிருந்து மார்ச் மூன்றாவது வெள்ளிக்கிழமை (18-03-2022) இத்தினத்தைக் கொண்டாடுகிறது.

*************************************************************************************************************
(17-மார்ச்)
*கல்பனா சாவ்லா*
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 மணி நேரம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது.

மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர். பிப்ரவரி 1ஆம் தேதி, பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.
வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும், இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.
**************************************************************************************************************
*சாய்னா நேவால்*
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.
மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.
******************************************************************************************************************