மார்ச் 23,22,21
(23-மார்ச்) *ஜி.டி.நாயுடு*
'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.
இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.

பிறகு இவர் பைக்கை, பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலையை தொடங்கினார். இதன் மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி-பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.
அதன்பின்பு யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக்காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.
ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.
இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.
சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு 1974ஆம் ஆண்டு மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
*****************************************************************************************************************
(22-மார்ச்) *டி.வி.சுந்தரம் ஐயங்கார்*
இந்திய தொழில்துறை, ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1877ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தார்.
இவர் வழக்கறிஞர், ரயில்வே குமாஸ்தா, வங்கி ஊழியர் என வேலை செய்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தொழில்துறையில் இறங்கினார். முதலில் தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரத்தை தொடங்கினார்.
இவர் 1911ஆம் ஆண்டு தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1912ஆம் ஆண்டு தஞ்சாவூர்-புதுக்கோட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.
பேருந்து கட்டணம் இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கட்டணம், ரசீது வழங்குவது ஆகிய நடைமுறைகளை கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு, சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.
அதன்பின்பு ரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார் லிமிடெட், வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, டி.வி.எஸ் இன்ஃபோடெக், சுந்தரம் ஃபைனான்ஸ் என டி.வி.எஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ் குழுமத்தை தொடங்கியவரும், முன்னணி தொழிலதிபராக விளங்கியவருமான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1955ஆம் ஆண்டு மறைந்தார்.
***************************************************************************************************************
*ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன்*
1868ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் பிறந்தார்.
இவர் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பை (Charge of Electron) துல்லியமாக கணக்கிட்ட முறைகளுக்காகவும், ஒளிமின் விளைவில் (Photo Electric Effect) இவருடைய ஆய்வுகளுக்காகவும் 1923ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். இவர் டிசம்பர் 19ஆம் தேதி 1953ஆம் ஆண்டு மறைந்தார்.
*****************************************************************************************************************
(21-மார்ச்)
*உலக காடுகள் தினம்*
வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
*உலக பொம்மலாட்ட தினம்*
உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
******************************************************************************************************
(21-மார்ச்) *நா.மகாலிங்கம்*
ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார்.
இவர் தந்தை வழி தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.
சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனது உழைப்பால் விரிவுப்படுத்தினார்.
காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்ம பூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளை செய்த *'அருட்செல்வர்'* என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.
*பாண்டித்துரை தேவர்*
1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பாண்டித்துரை தேவர் இராமநாதபுரத்தில் பிறந்தார்.
பாண்டித்துரைத் தேவரை மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்க்கலாவிநோதர் என்றும், செந்தமிழ்ப் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்படுவார்கள். இவர் 1911ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி மறைந்தார்.
************************************************************************************************************