மார்ச்-March
(09-மார்ச்)
*யூரி ககாரின்*
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.
1955ஆம் ஆண்டு ஒரென்பர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். இவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

இவர் 1960ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளி திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார். கடும் பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.
1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி Vostok 3முயு-3 ( Vostok 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார். வாஸ்டாக் விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் சென்றார்.
விண்கலத்தில் முதல் தடவையாக பூமியை வலம் வந்தவர் என்ற பெருமைக்குரிய இவர் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.
*********************************************************************************************************************
(08-மார்ச்)
*உலக மகளிர் தினம்*
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
********************************************************************************************************
(08-மார்ச்)
*சாஹிர் லுதியான்வி*
பிரபல இந்தி திரைப்படப் பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வி 1921ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்துல் ஹயீ சாஹிர்.
கல்லூரியில் படிக்கும்போது, இவர் எழுதிய ஈரடிக் கவிதைகளால் பிரபலமானார். 1943ஆம் ஆண்டு 'தல்கியா' என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதன் பிறகு, இவரது புகழ் பரவியது. 1945ஆம் ஆண்டு உருதுப் பத்திரிக்கைகளின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்தி படங்களில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். முதன்முதலாக இவரது பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'ஆஸாதி கி ராஹ் பர்' (1949). எஸ்.டி.பர்மன் இசையில் வந்த 'நவ்ஜவான்' (1951) படத்தில் வரும் 'தண்டி ஹவாயே லெஹரா கே ஆயே' பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.
டேனிஷ் இக்பால் எழுதிய 'மை சாஹிர் ஹூ' என்ற புத்தகம் இவரது

வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் ஆராய்ச்சிப் புத்தகமாக விளங்கியது.
மக்கள் கவிஞராகப் போற்றப்பட்ட சாஹிர் லுதியான்வி 1980ஆம் ஆண்டு மறைந்தார்.
***********************************************************************************************************
(07-மார்ச்)
*எம்.என்.நம்பியார்*
1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார், கேரளாவில் பிறந்தார்.இவர் தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.

குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் 2008ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மறைந்தார்.
************************************************************************************************************
*ஜோசப் நிசிபோர் நியெப்ஸ்*
உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1765ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார்.
இவர் 'இருட்டறை' (Camera Obscurs) என அழைக்கப்பட்ட ஒரு வகை இருட்டாக்கப்பட்ட அறையில் ஒரு பக்கத்தில் வெளிக்காட்சிகளின் விம்பத்தை விழச் செய்து அதையொட்டிக் கோடுகளை வரைந்து படங்களை உருவாக்கினார்.
இவர் படங்களை வரையும்போது கைகள் உறுதியாக இல்லாததால், விம்பங்களை நிலையாக இருக்குமாறு செய்வதற்கு வேறு ஏதாவது வழியை கண்டுபிடிக்க 1793ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தார்.

1824ஆம் ஆண்டிலேயே நிலைத்திருக்கக்கூடிய ஒளிப்படத்தை இவர் எடுத்ததாக சொல்லப்படுகிறது. பிறகு 1825ஆம் ஆண்டு மனிதனையும், குதிரையொன்றையும் காட்டும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்தார்.
1829ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவருடன் சேர்ந்து பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினார்.இவர் 1825ஆம் ஆண்டில் எடுத்ததாக கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் 2002ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ஏலத்தில் 4,50,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது.ஒளிப்படவியல் துறையின் முன்னோடி ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1833ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மறைந்தார்.
***********************************************************************************************************************