ரெனே லென்னக்-René Laennec-FEBRUARY 17
இதய துடிப்பை கண்டறிய புதிய வழிமுறையை கண்டுபிடித்த ரெனே லென்னக் 1781ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
தந்தை சிறந்த கவிஞர்! அத்தோடு புகழ்மிகு வழக்கறிஞர்! ஆறாம் வயதில் தாயை இழந்த, அருமை மகனுக்கு ஆதரவானார் ! தன்னைப்போல் மகனொரு, தரணிபுகழ் கவிஞனாக்க விரும்பினார்! அதனால் கிரேக்க இலக்கியம் படிக்க வைத்தார் மகனை! மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட மகனோ கவிதையை விட, மருத்துவராவதே லட்சியம் என முடிவு கொண்டான்! இலக்கியத்திற்கு வைத்தான் முற்றுப்புள்ளி! அருமை மாமாவிடம் அவன் தன் அவாவைக் கூறினான்! மாமாவின் ஆசியினால் ஆதரவினால் மருத்துவம் பயின்றார்! பல தடைகளுக்கு பிறகு மருத்துவம் பயின்று கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிரிகளை குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். 1804ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.

பயிலும்போதே மருத்துவ ஆய்வுப் பதிப்புகளை வெளியிட்டார்! மருத்துவ அறிவியல் இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார்! பிரான்ஸ் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியராக விளங்கினார்! ''அத்தெனிமெடிக்கல்'' எனும் அமைப்பின் நிறுவனரானார்! மருத்துவராகவும், கண்டுபிடிப்பாளராகவும், அறப் பணியாளராகவும் விளங்கிய இந்த நாயகர், ஆராய்ச்சியே பணியென்று அயராது உழைத்தவர்!
இவர் 1808ஆம் காலக்கட்டத்தில் நோயியல், உடற்கூறியல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். மேலும் காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இவர் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்து, ஸ்டெதஸ்கோப் கருவியை கண்டுபிடித்தார்.
சமூகத்திற்காக பல நன்மைகளை செய்த லென்னக் தனது 45வது வயதில் 1826ஆம் ஆண்டு காசநோயால் மறைந்தார்.