top of page

(01-03)February


(01-பிப்) *இந்திய கடலோர காவல் படை தினம்.* ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலோர காவல் படை தினம் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடற்படையிலிருந்து இந்திய கடலோர காவல் படை தனியாக கட்டமைக்கப்பட்டு 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியதை நினைவுகூறும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. சுருக்கமாக ஐசிஜி (ICI) எனப்படும் இந்திய கடலோர காவல் படையானது இந்திய கடல் எல்லைகளில் ஆண்டு முழுவதும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு அரசு அமைப்பாகும். மேலும், கடலோரப் பொருளாதார எல்லைக் கோட்டிற்குள் உள்ள பகுதிகளைக் கண்காணிப்பது, சட்டவிரோத செயல்களை தடுப்பது, கடலில் தத்தளிக்கும் மீனவா்களை மீட்பது, வணிகக் கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்புகளை அளிப்பது உள்ளிட்டவற்றை இப்படை பிரிவு தொடா்ந்து செய்து வருகிறது. 1884ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் முதல் பதிப்பு வெளியானது. உலக சமய நல்லிணக்க வாரம் : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் (பிப்ரவரி 1-7) உலக சமய நல்லிணக்க வாரமாக அனுசரிக்கப்படுகிறது 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா மறைந்தார். (01-பிப்) *ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.* விடுதலைப் போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார். இவர் மிக இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1947ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை அதிகாரச் சட்டம் 1947ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. மேலும், இவர் ஜமீன்தார் இனமுறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார். முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மிகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், பல தொண்டு அமைப்புகளையும் நிறுவினார். நேர்மையும், துணிச்சலும் மிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970ஆம் ஆண்டு மறைந்தார். (02-பிப்) *உலக ஈரநிலங்கள் தினம்.* ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி சர்வதேச அளவில் உலக ஈரநிலங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஈரநிலங்களைப் பாதுகாப்பது பற்றி 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் (Ramsar)) என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உலகில் ஏறக்குறைய 1,112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளன. சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் மற்றும் பராமரிப்பு இன்மையும் இந்த நிலங்களை பாழ்படுத்தி வருகிறது. எனவே, இந்த நிலங்களை பாதுகாக்கவும் அதன் பயன்களை மக்களிடம் கொண்டு செல்லவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1790ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தனிம வரிசை அட்டவணையின் தந்தை திமீத்ரி மெண்டெலீவ் மறைந்தார். (02-பிப்) *பா.வே.மாணிக்க நாயக்கர்.* சிறந்த தமிழ் அறிஞரும்,பொறியியலாளருமான பா.வே.மாணிக்க நாயக்கர் 1871ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பிறந்தார். இவர் 1896ஆம் ஆண்டு பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராக சேர்ந்தார். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் அனைத்து மொழிகளில் உள்ள சொற்களையும் எழுத முடியும் என்று நிரூபித்தவர். தமிழுக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர். மேலும், இவர் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பல அறிவியல் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார். பொறியியல் துறையில் 60-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்த இவர் 1931ஆம் ஆண்டு மறைந்தார். *வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம்.* 1896ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம் கோயம்புத்தூரில் உள்ள வெள்ளலூர் கிராமத்தில் பிறந்தார். இந்திய விடுதலை இயக்கத்தின்போது மகாத்மா காந்தியுடன் துணை நின்றவராகவும், மதன் மோகன் மாளவியாவின் நம்பிக்கை பெற்றவராகவும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் செயலராகவும் இருந்தவர். இவர் 1967ஆம் ஆண்டு மறைந்தார். (03-பிப்) *சார்லஸ் ஹென்றி டர்னர்.* உயிரியலாளரும், கல்வியாளருமான சார்லஸ் ஹென்றி டர்னர் 1867ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியில் பிறந்தார். முதுகெலும்பில்லாத உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் குறிப்பாக பூச்சிகளின் கேட்கும் திறன், காட்சித் திறன், கற்றல் திறன் மற்றும் வேட்டையாடும் திறன் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். இவர் தனது ஆராய்ச்சிகள் குறித்து 49 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பூச்சிகள் ஓசைகளின் தன்மைகளுக்கு ஏற்ப எதிர்வினை புரிவதையும் கண்டறிந்தார். பூச்சிகள் முந்தைய அனுபவங்கள் வாயிலாகத் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என்பதையும் கண்டறிந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிகள் தவிர, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூக மேம்பாட்டுக்காகவும், கல்வி அறிவு பெறவும் இவர் கடுமையாகப் போராடினார். விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர் 1923ஆம் ஆண்டு மறைந்தார்.


0 views0 comments

Recent Posts

See All
bottom of page