(05 ஏப்ரல் - 10 ஏப்ரல்),April Second Week

(05-ஏப்) தேசிய கடல்சார் தினம்
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) 1919ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதனை நினைவுக்கூறும் வகையில் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல்முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.
*ஜோசப் லிஸ்டர்*
அறுவை சிகிச்சையின் தந்தை, ஜோசப் லிஸ்டர் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி இங்கிலாந்தின் அப்டான் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை நவீன உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார்.
இவர் லூயிஸ் பாஸ்டர் எழுதிய நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பற்றிய கட்டுரையை படித்தார். அதில் பொருட்களை புளிக்கச் செய்யும் கிருமிகள் காற்றில் உள்ளன. அதனால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்பதை அறிந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நுண்கிருமிகளை அழிக்க முடியும் என ஆய்வு செய்து கண்டறிந்தார்.
தற்போது பினாயில் என்றழைக்கப்படும் கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார். இவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார்.
மருத்துவ உலகிலேயே முதன்முதலாக இவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது. இவர் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார்.
அறுவை சிகிச்சையின் முன்னோடி எனப் போற்றப்படும் ஜோசப் லிஸ்டர் 1912ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஜெகசீவன்ராம்*
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜெகசீவன்ராம் 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் பிறந்தார்.
தீண்டத்தகாத சாதியில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. இதை சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.
பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் 1986ஆம் ஆண்டு மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
(06-ஏப்) *சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்*
விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். இது வளர்ச்சிஇ அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது.
*கோ.நம்மாழ்வார்*
1938ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை ஆர்வலர் கோ.நம்மாழ்வார் பிறந்தார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச்சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
இவர் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.
*அழகப்பச் செட்டியார்*
விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளை நிறுவிய டாக்டர் அழகப்பச் செட்டியார் 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் பிறந்தார்.
இவர் மலேசியா, பர்மா, கேரளா, கல்கத்தா, பம்பாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள், துணி ஆலைகள், ஆயுள் காப்பீடு நிறுவனம், உணவு விடுதிகள், திரையரங்குகள், விமானப் போக்குவரத்து நிறுவனம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.
மேலும் இவர் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு காரைக்குடியில் நிலத்தை நன்கொடையாக வழங்கியதால் இவரை சோஷலிச முதலாளி எனப் புகழ்ந்தார் நேரு. இவரது முனைப்பால் தான் அழகப்பா பல்கலைக்கழகமாக தழைத்தோங்கியுள்ளது. 1956ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்றார்.
வெற்றிகரமான தொழிலதிபரும், கல்வி வளர்ச்சிக்காக வாரி வழங்கிய வள்ளலுமான அழகப்பச் செட்டியார் 1957ஆம் ஆண்டு மறைந்தார்.
*மீனாட்சிசுந்தரம் பிள்ளை*
மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.
இவர் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து, பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.
இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார். இவரிடம் பயின்றவர்களில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மாயூரம் வேத நாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1876ஆம் ஆண்டு மறைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
(07-ஏப்) *உலக சுகாதார தினம்*
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.
உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
*வில்லியம் வேட்ஸ்வொர்த்*
உலகப் புகழ்பெற்ற கவிஞரும், கவிதையின் முன்னோடியுமான வில்லியம் வேட்ஸ்வொர்த் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள காக்கர்மவுத் என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் 1787ஆம் ஆண்டு 14 வரி பாடல் ஒன்றை முதன்முறையாக எழுதினார். 1793ஆம் ஆண்டு தனது கவிதைகளைத் தொகுத்து, 'ஈவ்னிங் வாக் அன்ட் டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்ச்சஸ்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
மேலும் இவரது 'தி பிரிலூட்' தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் குறித்த இவரது 'சாலிட்டரி ரீப்பர்' என்ற கவிதை உலகப் புகழ் வாய்ந்தது.
கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவரும், காலத்தை வென்ற கவிதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞராக முத்திரைப் பதித்தவருமான வில்லியம் வேட்ஸ்வொர்த் 1850ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஜாக்கி சான்*
1954ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஜாக்கி சான் ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக்கில் பிறந்தார்.
இவரின் இயற்பெயர் சான் காங் சான் இவர் பிறக்கையில் 5400 கிராம் இருந்ததால் "பாவ் பாவ்" என்று அழைத்தனர்.
நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், தொழில் நடத்துபவர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் என பன்முகங்களை கொண்டவர் ஜாக்கி சான்.
*பண்டிட் ரவிசங்கர்*
1920ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், வாரணாசியில் பிறந்தார்.
இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றவர் இவர் தான். இவருக்கு 1992ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருதும், 1999ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும், காளிதாஸ் சம்மன் விருது (1987-1988) வழங்கப்பட்டது. இவர் டிசம்பர் 11ஆம் தேதி 2012ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(08-ஏப்) *சர்வதேச ரோமானியர்கள் தினம்*
சர்வதேச ரோமானியர்கள் தினம் ஏப்ரல் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1990ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ரோமானிய மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
*மெல்வின் கால்வின்*
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியியலாளர் மெல்வின் எல்லிஸ் கால்வின் 1911ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் செயின்ட் பால் நகரில் பிறந்தார்.
இவர் 1931ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம் (Affinity of Halogens) என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இவரது ஆராய்ச்சிப் பயணம் தொடங்கியது.
இவர் ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியோருடன் இணைந்து கண்டறிந்தார். இதற்கு கால்வின் சுழற்சி என்று பெயரிடப்பட்டது.
ஒளிச்சேர்க்கை குறித்த இந்த ஆராய்ச்சிக்காக கால்வினுக்கு 1961ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்நாள் இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த கால்வின் 1997ஆம் ஆண்டு மறைந்தார்.
*கோஃபி அன்னான்*
1938ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் கானாவின் (ஆப்பிரிக்கா) குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தார்.
2001-ல் கோஃபி அன்னான் அவர்களுக்கு ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் ஆகஸ்ட் 18ஆம் தேதி 2018ஆம் ஆண்டு மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
(09-ஏப்) *ராகுல் சாங்கிருத்தியாயன்*
மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.
இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய 'வால்கா ஸே கங்கா' நூல் வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து 1944ஆம் ஆண்டு வரையிலான காலக் கண்ணாடி. இந்த வரலாற்றுப் புனைவு நூல் மொத்தம் 14 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
இவர் புத்த துறவியாக மாறிய பிறகு தன் பெயரை ராகுல் சாங்கிருத்தியாயன் என்று மாற்றிக்கொண்டார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது.
இவர் சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண் விருது, மகாபண்டிட் உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றுள்ளார். மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.
அறிவுக்கடல், தத்துவஞானி, மகாபண்டிதர் என்று போற்றப்படும் ராகுல் சாங்கிருத்தியாயன் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.
*சரண் ராணி பாக்லீவால்*
இந்துஸ்தானி சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார்.
1930ஆம் ஆண்டு முதல் மேடை கச்சேரிகளில் சரோட் வாசிக்க ஆரம்பித்தார். ஆண்கள் மட்டுமே வாசித்த சரோட் இசையில் இவரும் வல்லமை பெற்றார். இசைக்கலைஞர் என்ற வகையில் உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர்தான்.
இவர் இந்திய பாரம்பரியத்தை நிலைப்படுத்துவதற்காக அரிதான 450 வாத்தியங்களை சேகரித்து அதை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தேசிய கலைஞர், சாகித்ய கலா பரிஷத் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 'இந்தியாவின் கலாச்சாரத் தூதர்' என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்டவர்.
'சரோட் ராணி' என போற்றப்பட்ட இவர்தான் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.
*கிரிகோரி குட்வின் பிங்கஸ்*
1903ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி குட்வின் பிங்கஸ் பிறந்தார்.
வாய்வழியான கருத்தடை மாத்திரை கண்டறிவதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும், முயற்சிகளையும் செலவழித்த ஒரே விஞ்ஞானி என்ற பெருமை பெற்றார்.
கிரிகோரி பிங்கஸ் 250 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி 1967ஆம் ஆண்டு மறைந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(10-ஏப்) *உலக ஹோமியோபதி தினம்*
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறை, மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாள் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.
*ரயில்வே வாரம்*
ரயில்வே வாரம் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மிக நீண்ட பயணத்திற்கு ரயில்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்திற்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர்கள். முதன்முதலாக 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மும்பை - தானே இடையில் முதல் பயணிகள் ரயில் துவங்கப்பட்டது.
மூன்று நீராவி எஞ்சின்களுடன் 34 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட பாதையில் முதல் ரயில் இயக்கப்பட்டது. மூன்று நீராவி எஞ்சின்களுக்கும் சுல்தான், சாஹிப் மற்றும் சிந்த் எனப் பெயரிட்டனர். இதனை நினைவுக்கூறும் வகையில் ரயில்வே வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
*ஜாக் மைனர்*
வடஅமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை, ஜாக் மைனர் 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார்.
இவர் பறவைகள் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டி, தனது நிலத்தில் ஒரு குளத்தை உருவாக்கினார். 1911ஆம் ஆண்டு முதல் ஏராளமான வாத்துகள் வரத் தொடங்கின.
1909ஆம் ஆண்டு வலசை போகும் (இடப்பெயர்வு) பறவைகளின் பாதையைக் கண்காணிக்க, அவற்றிற்கு பட்டயம் கட்டும் முறையை மேம்படுத்தினார்.
1923ஆம் ஆண்டு தான் கண்டறிந்த முறைகள் மற்றும் நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஆய்வுகள் அடங்கிய ஜாக் மைனர் அண்ட் தி பேர்ட்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பள்ளி சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டது. வாழ்நாள் முழுவதும் பறவைகள் பாதுகாப்புக்காக பாடுபட்ட ஜாக் மைனர் 1944ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------