top of page

(1 மே - 12 மே) May


(01-மே) *உலக தொழிலாளர் தினம்.* இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை வாதிட்டது. மே தினம் எனப்படும் உலக தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. *உலக சிரிப்பு தினம்* ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முதன்முதலில் 1998ஆம் ஆண்டு டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் தொடங்கப்பட்டது. அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக அறிமுகப்படுத்தினார். உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது என்பதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. *மன்னா டே* இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகரான மன்னா டே 1919ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபோத் சந்திரா டே. இவர் செம்மீன் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார். மக்களின் மனங்களைக் கவர்ந்ததால் இவர் மன்னா டே என்று அழைக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில் இவர் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை பிரபலமானவைகள். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தாதாசாஹேப் பால்கே விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

காலத்தால் அழியாத பல அமரகீதங்களைப் பாடி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மன்னா டே 2013ஆம் ஆண்டு மறைந்தார். *ரமோன் கஸல்.* நவீன நரம்பியல் துறையின் தந்தை சான்டியாகோ ரமோன் கஸல் 1852ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஸ்பெயினின் பெடில்லா டி அரகான் நகரில் பிறந்தார். உயிரியியல் சோதனைகளுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவி, அழற்சி நோய்கள், காலரா, நுண்ணுயிரியல், எபிதீலியல் செல்கள், திசுக்களின் அமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்து வந்தார். இவரது நரம்பு மண்டல கட்டமைப்பு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1906ஆம் ஆண்டு இத்தாலிய விஞ்ஞானி கமிலியோ கோல்கியுடன் இணைந்து மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். சிறந்த நரம்பியல் விஞ்ஞானியான இவர் 1934ஆம் ஆண்டு மறைந்தார். *பி.சுந்தரய்யா.* 1913ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.சுந்தரய்யா ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார். இந்திய பொதுவுடமை (மார்க்சிஸ்டு) கட்சியின் நிறுவன உறுப்பினரும், தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட இவர் 1985ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------- (02-மே) *சத்யஜித் ராய்* இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் 1921ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவர் ஜவஹர்லால் நேரு, பூபதி பூஷண் ஆகியோரின் நாவல்களில் அட்டைப் படம் வரைந்ததன் மூலம் புகழ்பெற்றார். 1947ஆம் ஆண்டு சித்தானந்தா தாஸ் குப்தாவுடனும், மற்றவர்களுடனும் இணைந்து ராய் கல்கத்தா பிலிம் சொசைட்டியை உருவாக்கினார். பிறகு தனக்குள் காவியமாக சுழன்றுகொண்டிருந்த பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை 1955ஆம் ஆண்டு வெளியிட்டார். உலக அளவில் தலைசிறந்த இயக்குநராக இவரை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது. அதன் பிறகு அபராஜிதோ, அபுர் சன்சார், தேவி, மஹாநகர், சாருலதா, தீன் கன்யா உள்ளிட்ட இவரது எல்லாப் படைப்புகளுமே உலக அளவில் புகழ்பெற்றன. தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992ஆம் ஆண்டு சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. மேலும், 1992ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார். இந்திய திரைப்படங்களின் மீது உலகின் கவனத்தை திருப்பிய இணையற்ற இயக்குநராகப் போற்றப்பட்ட சத்யஜித் ராய் 1992ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------ (03-மே) *உலக ஆஸ்துமா தினம்.* உலக ஆஸ்துமா தினம் மே மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை (மே 3) அனுசரிக்கப்படுகிறது. ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. மேலும் இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது. *உலக பத்திரிக்கை சுதந்திர தினம்.*

பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ஆம் தேதி பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிக்கையையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது. *சுஜாதா.* தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா 1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் எஸ்.ரங்கராஜன். 1962ஆம் ஆண்டு இவருடைய, இடது ஓரத்தில் என்ற சிறுகதை குமுதம் என்ற இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. அதன் பிறகு தன் மனைவி பெயரான சுஜாதா-வின், பெயரை தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்த இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------- (04-மே) *சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம்.* மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவுக்கூறுவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகப் பின்பற்றப்படுகிறது. *தியாகராஜ சுவாமிகள்* 'தியாகப் பிரம்மம்' என்று போற்றப்படும் இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 1767ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார். ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சுவாமி நாரத உபாசனை மந்திரத்தை இவருக்கு உபதேசித்தார். பக்தியுடன் அதை உச்சரித்து வந்த இவருக்கு நாரத முனிவரே காட்சி கொடுத்து சங்கீத ஸ்வர ரகசியங்கள் அடங்கிய 'ஸ்வரார்ணவம்' என்ற அரிய நூலை வழங்கியதாக கூறப்படுகிறது. இவரது இசைத்திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ஆனால், ராம பக்தியில் திளைத்திருந்த இவர் மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார். இவர் கீர்த்தனைகள் இயற்றுவது, அவற்றிற்கு இசையமைத்து பாடுவது, வேத பாராயணம் செய்வது, புராணங்கள் கற்பது, இசையை மற்றவர்களுக்கு கற்றுத்தருவது என பல செயல்களை செய்தார்.

இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய தியாகராஜ சுவாமிகள் 1847ஆம் ஆண்டு மறைந்தார். *ராபின் குக்.* 1940ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி பிரபல அமெரிக்க நாவல் ஆசிரியரும், அறுவை சிகிச்சை நிபுணருமான ராபின் குக் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். ராபின் குக்கின் பல நூல்கள் நியூயார்க் டைம்சின் அதிகம் விற்கப்படும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இன்னும் பல நூல்கள் ரீடர்சு டைச்செசுட்டு இதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது நூல்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் படிகள் விற்றுள்ளன. ------------------------------------------------------------------------------------------------------------------------ (05-மே) *சர்வதேச மருத்துவச்சி தினம்.*

ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய்-சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது. *உலக கடவுச்சொல் தினம்.* இத்தினம் ஆண்டுதோறும் மே மாத முதலாவது வியாழக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இணைய பயனர்கள் மத்தியில் பாதுகாப்பான கடவுச்சொல்லை அதாவது யாரும் யூகிக்க முடியாத கடவுச்சொல்லை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இத்தினத்தை கொண்டாடி வருகின்றனர். *கார்ல் மார்க்ஸ்.* உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரஷ்யாவிலுள்ள ட்ரையர் நகரில் பிறந்தார். இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கருதப்படுபவர். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது. பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் 1883ஆம் ஆண்டு மறைந்தார். *டி.எஸ்.அவிநாசிலிங்கம்.* 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் திருப்பூரில் பிறந்தார். 1970ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருதும், ஜி.டி. பிர்லா விருதும் வழங்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார்இ 1991ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 88வது வயதில் காலமானார். *கியானி ஜெயில் சிங்.* 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பிறந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். 1982ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்த இவர் 1994ஆம் ஆண்டு, டிசம்பர் 25ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------ (06-மே) *மோதிலால் நேரு.*

நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார். ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார். இவர் 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போதுதான் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு 1931ஆம் ஆண்டு மறைந்தார். *சிக்மண்ட் பிராய்ட்.* 1856ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் ஆஸ்திரியாவிலுள்ள ஃபிரெய்பர்க் நகரில் பிறந்தார். சிக்மண்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' (Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும், அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும்.

இவர் 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------- (07-மே) *இரவீந்திரநாத் தாகூர்.* இந்திய தேசிய கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும், மற்றொரு பாடல் வங்கதேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.

இவருடைய கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆங்கிலேய அரசு 1915ஆம் ஆண்டு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919ஆம் ஆண்டு அமிர்தசரஸில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து சர் பட்டத்தை திருப்பி கொடுத்துவிட்டார். இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் மற்றும் குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் 1941ஆம் ஆண்டு மறைந்தார். ---------------------------------------------------------------------------------- (08-மே) *ஜீன் ஹென்றி டியூனண்ட்.* அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது. ஒருமுறை சால்ஃபரீனோ என்ற நகருக்கு சென்ற போது வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அதை பார்த்து மனம் வருந்திய இவர் மக்களோடு இணைந்து, காயமடைந்த வீரர்களுக்கு உதவினார். தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, இவருக்கு போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. அதன் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் (A Memory of solferino) என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் உலகில் எங்கு போர் நடந்தாலும், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டார். பிறகு 1863ஆம் ஆண்டு அந்த அமைப்பான செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது. நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901ஆம் ஆண்டு இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயத்தை உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உருவாக்கிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார். *சுவாமி சின்மயானந்தா.* 1916ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் ஆன்மீக கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்தார். உலகெங்கும் பல ஆசிரமங்களையும், மையங்களையும், பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும் ஆரம்பித்தார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கிராம நலத்திட்டமான சின்மயா அமைப்பை உருவாக்கிய இவர் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி மறைந்தார். *உலக அன்னையர் தினம்.* தாய்மையைப் போற்றும் விதமாக இன்று மே 08ஆம் தேதி உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த அன்னா மேரி ஜர்விஸ் தன்னுடைய அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. 1914ஆம் ஆண்டு இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை (மே 08) அன்னையர் தினமாக அறிவித்தார். தாயின் ஆரோக்கியம், கல்வி பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். தாய் மனதிற்கேற்ப நடந்து, தாயை மகிழ்விக்கக் கிடைத்த ஓர் அரிய நாளாக எண்ணிக் கொண்டாடுவோம். *உலக தாலசீமியா நோய் தினம்.* ஒவ்வொரு ஆண்டும் மே 8ஆம் தேதி உலக தாலசீமியா நோய் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால், அவர்களுக்கு இரத்தச்சோகை ஏற்படும். மேலும் சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. அதனால், மக்களிடம் தாலசீமியா நோய்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். --------------------------------------------------------------------------------------------------- (09-மே) *கோபால கிருஷ்ண கோகலே.* மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே 1866ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார். இவர் 1889ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் வன்முறையைத் தவிர்த்து, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். இவர் 1899ஆம் ஆண்டு மும்பை சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக முன்னுரிமைகள் பெற்றுத்தர போராடினார். மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுப்படுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தை திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினார். 1905ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியலுக்காகவே பாடுபட்ட கோகலே 1915ஆம் ஆண்டு மறைந்தார். *அன்னமாச்சார்யா.* இசை உலகில் பல மரபுகளைத் தோற்றுவித்த அன்னமாச்சார்யா 1408ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர்தான் பாடல்களில் பல்லவிஇ அனுபல்லவி, சரணம் போன்றவைகளை உருவாக்கியவர் என கருதப்படுகிறது. 32,000-க்கும் அதிகமான கீர்த்தனைகளை எழுதியுள்ளார். அதில் 14,000 மட்டுமே கிடைத்துள்ளன. மேலும், பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பும் இவருக்குள்ளது. இவர் எழுதிய ஓலைச் சுவடிகள் திருப்பதி கோவில் உண்டியலுக்கு எதிரே ஒரு அறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது வாழ்க்கையை வைத்து தயாரிக்கப்பட்ட 'அன்னமய்யா' என்ற தெலுங்கு திரைப்படம் 1997ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று கூறிய இவர் 1503ஆம் ஆண்டு மறைந்தார். ----------------------------------------------------------------------------------------- (10-மே) *உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்.* உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டுதோறும் மே 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும், எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமித்தொற்று, உணவுப்பழக்கம் போன்ற காரணங்களாலும், மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். *நயந்தரா சாகல்.* சாகித்திய அகாடமி போர்டில் (ஆங்கிலம்) அறிவுரையாளராகப் பணிபுரிந்த இந்திய எழுத்தாளர் நயந்தரா சாகல் 1927ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் நேருவின் தங்கையான விசயலக்குமி பண்டிட்டின் மகள் ஆவார். இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது (ஆங்கிலம்) 1986ஆம் ஆண்டில் Rich Like Us (1985) என்ற இவரது ஆங்கிலப் புதினத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், இவர் ஐ.நா. பொதுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தூதுக் குழுவிலும், மனித உரிமைகள் அமைப்பில் உதவித் தலைவராகவும் பணியாற்றினார். --------------------------------------------------------------------------------------------------- (11-மே) *தேசிய தொழில்நுட்ப தினம்.* இந்திய அரசு 1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மொத்தம் ஐந்து அணுவெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனையும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அறிவியல் துறையில் சாதனை செய்தவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றன. *சுத்தானந்த பாரதியார்.* கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுத்தானந்தம் என பெயரிட்டு சித்தர் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரபலமானவை. மேலும், இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார். பல சீர்திருத்தப் பணிகளையும் செய்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது பாரத சக்தி நூலுக்குக் கிடைத்தது. ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்திய இவர் 1990ஆம் ஆண்டு மறைந்தார். *எல்லிஸ் ஆர்.டங்கன்.* 1909ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் பிறந்தார். பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஒரு அமெரிக்கர் ஆவார். இவர் 1935ஆம் ஆண்டு இருந்து 1950ஆம் ஆண்டு வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கினார். எம்.ஜி.ராமச்சந்திரன், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுதிய இவர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 01ஆம் தேதி மறைந்தார். --------------------------------------------------------------------------------------- (12-மே) *சர்வதேச செவிலியர் தினம்.* சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. *ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்.* செவிலியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் 1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் 1850ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரிந்த போது ரஷ்யப் பேரரசுக்கும், பிரிட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார். இவர் 1883ஆம் ஆண்டு விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருதை பெற்றார். மேலும், 1907ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் மெரிட் (Order of Merit) எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார். *ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.* 1895ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். மெய்யறிவாளர்களுள் முக்கியமானவராகவும், உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராகவும் மதிக்கப்பட்ட இவர் 1986ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி மறைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

4 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

(24 ஏப்ரல் - 30 ஏப்ரல்)

(24-ஏப்) *உலக ஆய்வக விலங்குகள் தினம்* உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் து

bottom of page