top of page

(11 ஏப்ரல் -17 ஏப்ரல்) April Third week




(11-ஏப்) *ஜோதிராவ் புலே*

இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.

சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார். கல்விதான் அனைத்திற்கும் தீர்வு என்பதை உணர்ந்து, 1842ஆம் ஆண்டு மகளிருக்கான பள்ளியை தொடங்கினார்.

இவர் சத்ய ஷோதக் சமாஜ் என்ற அமைப்பை 1873ஆம் ஆண்டு தொடங்கினார். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு 'மகாத்மா' பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாக திகழ்ந்த ஜோதிராவ் கோவிந்தராவ் புலே 1890ஆம் ஆண்டு மறைந்தார்.

*கஸ்தூரிபாய் காந்தி*

தன் கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்த மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் 1869ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.

இவர் 1915ஆம் ஆண்டு இந்திய விடுதலை போரில் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட்ட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார்.

பல அறப்போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமைமிகு கஸ்தூரிபாய் காந்தி 1944ஆம் ஆண்டு மறைந்தார்.


*உலக பார்க்கின்சன் தினம்*

ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கை நடுக்கம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்படும் பார்க்கின்சன் என்னும் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜேம்ஸ் பார்க்கின்சன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பிறந்தார்.

இவர்தான் பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதல்முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார்.

இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம், முடக்குவாத நடுக்கம் என்று பெயரிட்டார். பின்னாளில் இது 'பார்க்கின்சன் நோய்' என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் 1824ஆம் ஆண்டு மறைந்தார்.


------------------------------------------------------------------------------------------------------------------------


(12-ஏப்) *சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்*

மனித விண்வெளி பயணத்திற்கான சர்வதேச தினத்தை உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இத்தினம் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி, ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளி பயணத்தை நினைவுக்கூறுவதற்காக தான்.

ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

*வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்*

உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் தினமாக வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இத்தினம் மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள வீதியோர சிறுவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராஜ்ஜியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இத்தினத்தை கடைபிடிக்கின்றனர்.


*டாம் கிளான்ஸி*

உலகப் புகழ்பெற்ற உளவுத்துறை சார்ந்த நூல்களை படைத்த டாம் கிளான்ஸி 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலம் பால்ட்டிமோரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தாமஸ் லியோ கிளான்ஸி.

இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, அவற்றை பற்றிய பல புத்தகங்களை படித்தார்.

இவர் ஓய்வு நேரங்களில் நாவல்கள் எழுதினார். இவரது 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்' என்ற நாவல் 1982ஆம் ஆண்டு வெளியானது. முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களை கொண்டு சாதனை படைத்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி 2013ஆம் ஆண்டு மறைந்தார்.


-------------------------------------------------------------------------------------------------------------------------



(13-ஏப்) *ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்*

நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும், மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இக்கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசு ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூட்டத்தை நோக்கிச் சுட உத்தரவிட்டார் ஜெனரல் டயர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 1650 தடவைகள் சுடப்பட்டன. இச்சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


*பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்*

பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். கருத்தும், கற்பனையும் நிறைந்த இவரது பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.

இவர் தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம். படித்த பெண் திரைப்படத்துக்காக 1955ஆம் ஆண்டு முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை பதித்தார்.

சின்னப் பயலே சின்னப் பயலே, தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய குறிப்பிடத்தக்க, காலத்தால் அழியாத பாடல்களை வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.


*எம்.ஆர்.எம்.சுந்தரம்*

1913ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி செய்திகள் வாசிப்பது எம்.ஆர்.எம்.சுந்தரம் என்ற குரலுக்கு சொந்தக்காரரான மே.ரா.மீ.சுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் பிறந்தார்.

பின்னர் 1976ஆம் ஆண்டு கல்கி நிறுவனர் ரா.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை 'பொன்னியின் புதல்வர்' என்ற பெயரில் கல்கி இதழில் 4 ஆண்டுகளாக எழுதினார். இது நூலாக 912 பக்கங்களில் வெளிவந்தது.

இது தவிர 'இதய மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பும் எழுதியுள்ளார்.


------------------------------------------------------------------------------------------------------------------------------

(14-ஏப்) *உலக சித்தர்கள் தினம்*

உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.

சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*தேசிய தீயணைப்பு சேவை தினம்*

பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

*தீத்தடுப்பு தினம்*

தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.



*டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்*

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்திய பிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற தனது இயற்பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.

1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.


---------------------------------------------------------------------------------------------------------------------------

(15-ஏப்) *லியானார்டோ டா வின்சி*

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தனது 'தி லாஸ்ட் சப்பர்' ஓவியத்தை 1490ஆம் ஆண்டு வரையத் தொடங்கி, 1498ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1503ஆம் ஆண்டு புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார்.

விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது.

உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும் பன்முகத் திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மறைந்தார்.

*குரு நானக் தேவ்*

1469ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்தார்.

இவர் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார். மேலும் கபீரின் உற்ற சீடர் ஆவார். இவர் 1539ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மறைந்தார்.

*நெல் ஜெயராமன்*

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த தமிழக இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.

இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு-பாரம்பரிய அறிவுக்கான விருதையும், இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கெளரவித்துள்ளது. இவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

(16-ஏப்) *உலக குரல் தினம்*

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரேசிலியன் காது, மூக்கு, தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் 1999ஆம் ஆண்டு முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது.

*வீரேசலிங்கம் பந்துலு*

தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தெலுங்கின் முதல் நாவலை எழுதியவருமான கந்துகூரி வீரேசலிங்கம் 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஆந்திரப்பிரதேசம் ராஜமுந்திரியில் பிறந்தார். இவரது முழுப்பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.

இவர் ஜாதி அமைப்புகளை, குழந்தைத் திருமணங்களை, முதிய வயதில் இளம் பெண்ணை மணக்கும் வழக்கங்களை எதிர்த்தார். கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் கல்விக்காகவும் பாடுபட்டார்.

இந்தியாவில் விதவைத் திருமணத்தை 1887ஆம் ஆண்டு நடத்தி வைத்தார். இவர் எழுதிய ராஜசேகரா சரித்ரா என்ற நாவல் தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல்.

தெலுங்கு இலக்கியத்தின் மகத்தான கவிஞர், நவீன ஆந்திரத்தின் தீர்க்கதரிசி கந்துகூரி வீரேசலிங்கம் 1919ஆம் ஆண்டு மறைந்தார்.

*சார்லஸ் சாப்ளின்*

உலகிற்கே நம்பிக்கையை நகைச்சுவை வழியாக தந்த சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார்.

1912ஆம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள நாடகக் குழு மூலமாக சென்ற அமெரிக்கப் பயணம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

பிறகு இவரை கீஸ்டோன் சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் மேக்கிங் ஏ லிவிங் 1914ஆம் ஆண்டு வெளிவந்தது.


1936ஆம் ஆண்டு பேசும் படக்காலம் தொடங்கியது. மாடர்ன் டைம்ஸ் என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.

இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் 1977ஆம் ஆண்டு மறைந்தார்.

*வில்பர் ரைட்*

1867ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தைக் கண்டறிந்தவர்களில் ஒருவரான வில்பர் ரைட் இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்தில் பிறந்தார்.

முதன்முதலில் 1903ஆம் ஆண்டில் பனிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தார்.

இவர் மே 30ஆம் தேதி 1912ஆம் ஆண்டு மறைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

(17-ஏப்) *உலக ஹீமோபிலியா தினம்*

உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*தீரன் சின்னமலை*

இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.

இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.

வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு மறைந்தார்.


*ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே*

1916ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே இலங்கையில் பிறந்தார்.

இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர்.


இவர் அக்டோபர் 10ஆம் தேதி 2000ஆம் ஆண்டு மறைந்தார்.


*சர் வின்சென்ட் விகில்ஸ்வொர்த்*


1899ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பூச்சியினங்கள் குறித்த பல அரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறிய சர் வின்சென்ட் விகில்ஸ்வொர்த் இங்கிலாந்தில் பிறந்தார்.

இவர் பூச்சியியலராகவும், ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியராகவும் அறியப்படுகிறார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1964-ல் இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

1939-ல் இவர் எழுதிய 'தி பிரின்சிபல்ஸ் ஆஃப் இன்செக்ட் ஃபிசியாலஜி' என்ற நூல் அத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இன்றியமையாத நூலாக கருதப்படுகிறது.

இவர் பிப்ரவரி 11ஆம் தேதி 1994ஆம் ஆண்டு மறைந்தார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------

1 view0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page