top of page

21 -31 July

Updated: Sep 5, 2022



(21-சூலை)

*உமாசங்கர் ஜோஷி.*


சுதந்திரப் போராட்ட வீரரும், இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி 1911ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி குஜராத் மாநிலம், சாபர்கண்ட் மாவட்டத்தின் பாம்னா கிராமத்தில் பிறந்தார்.


காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1930ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். இவருடைய 'விஷ்வசாந்தி' என்ற காவியம் இவரை இலக்கிய உலகில் முக்கியப் படைப்பாளியாக உயர்த்தியது.


அதை தொடர்ந்து இவர் இயற்றிய படைப்புகள் குஜராத் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன. ஞானபீட விருது, சோவியத் நேரு விருது, தில்லி சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


இலக்கிய களத்தில் பன்முகப் பரிமாணம் கொண்ட உமாசங்கர் ஜோஷி 1988ஆம் ஆண்டு மறைந்தார்.


*எர்னஸ்ட் ஹெமிங்வே.*


1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் நகரில் பிறந்தார்.


கடலும் கிழவனும் (The Old man and the Sea) நாவலுக்காக இவருக்கு 1953ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசும் 1954ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார்.


இவரது கடலும் கிழவனும் நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இவர் 1961ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------

1968ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மறைந்தார்.

1985ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்திய சுதந்திரப் போராளியும், சமூக சீர்திருத்தவாதியுமான இரமாதேவி சௌத்ரி மறைந்தார். 1972ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் டி.எஸ்.பாலையா மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------- (22-சூலை) *வாணிதாசன்.* தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும். இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்' வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. இவர் 30ஆண்டிற்கு மேல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார், எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது. கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் 1974ஆம் ஆண்டு மறைந்தார். *செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன்.* 1888ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் பிறந்தார்.இவர் உயிர் வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் மண்ணில் வாழும் உயிரினங்களின் சிதைவு பற்றிய ஆராய்ச்சியும், ஸ்ட்ரெப்டோமைசின் பற்றியும் மற்றும் பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டறிய உதவினார். இவர் 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி மறைந்தார். *பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல்.* 1784ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள தொலைவைக் கண்டறிந்த பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் பிறந்தார். ஒரு ஜெர்மானிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும், புவிப்புற அளவையியலாளரும் ஆவார். இவர் இடமாறு தோற்றப் பிழை வாயிலாக முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். இவர் 1846ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி மறைந்தார். ---------------------------------------------------------------------- (23-சூலை) *பால கங்காதர திலகர்.* விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார். ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889ஆம் ஆண்டு இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர்இ 1908ஆம் ஆண்டிலிருந்து 1914ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் 1920ஆம் ஆண்டு மறைந்தார். *சந்திரசேகர ஆசாத்.* இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும். 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார். கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். ஆசாத், ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்' என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்' என்று அழைக்கப்பட்டார். லாலா லஜ்பத்ராயின் மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931ஆம் ஆண்டு இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்த போது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- (24-சூலை) *அலெக்ஸாண்டர் டூமாஸ்.* உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 20 வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார். 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ', 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்', 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்' ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன. சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 1870ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------- (25-சூலை) *செம்மங்குடி சீனிவாச ஐயர்.* மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார். இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார். மேலும், 1927ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு, பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழைத்தனர். சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அதிக மேடைகளில் பாடி சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 2003ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------- (25-சூலை) *உலக கருவியல் தினம்.* உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயி ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அதன் பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப் பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. அதன்பிறகு முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலக கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. *முக்கிய நிகழ்வுகள்..* 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆனார். -------------------------------------------------------------------- (26-சூலை) *உலக சதுப்புநிலக்காடுகள் தினம் .* புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக்காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள், அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே இவற்றை அழியாமல் பாதுகாத்திட ஜூலை 26ஆம் தேதியை உலக சதுப்புநிலக்காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. *கார்கில் போர் நினைவு தினம்.* ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர். நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ஆம் தேதி, கார்கில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. *முக்கிய நிகழ்வுகள்..* 1788ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக நியூயார்க் இணைந்தது. ---------------------------------------------------------------------------- (26-சூலை) *மு.கு.ஜகந்நாதராஜா .* மொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறிய பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா 1933ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் பிறந்தார். தன் விடாமுயற்சியால் பல மொழிகளை கற்றுக்கொண்டார். பிறகு தமிழின் மேன்மைமிக்க இலக்கியங்களான திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிப்பெயர்த்தார். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். இதுவே தமிழ் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய முதல் நூலாகும். முத்தொள்ளாயிரம், தமிழும் பிராகிருதமும், இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994), திராவிட மொழிகளில் யாப்பியல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பல மொழிகளுக்கு இடையே மனித அறிவை விரிவுப்படுத்திய இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார். *ஜார்ஜ் பெர்னாட் ஷா.* 1856ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் டப்ளின் என்ற நகரில் பிறந்தார். தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் பிரதான திறமை நாடகமே ஆகும். இவர் 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். நாவல்கள், சிறு கதைகள், நாடகங்கள் இயற்றிய இவர் 1950ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மறைந்தார்.


----------------------------------------------------------------------------

(27-சூலை)


2016ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழகக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார்.


2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஏவுகணை நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைந்தார்.


1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்ட ஜான் டால்ட்டன் மறைந்தார்.


1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.

------------------------------------------------------------------------------------------------

(27-சூலை) *தேசிக விநாயகம் பிள்ளை.*


தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.


இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி' என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார்.


மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.


இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954ஆம் ஆண்டு மறைந்தார்.


*சோமசுந்தர பாரதியார் .*


விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன்.


இவர் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். 1905ஆம் ஆண்டு முதல் 19353ஆம் ஆண்டு வரை இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.


தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது தமிழ் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டு தமிழ்ப்புலவர் மன்றம் 'நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியது.


தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.

--------------------------------------------------------------------

(28-சூலை) *உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


*உலக கல்லீரல் அழற்சி தினம்*


கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் (Hepatitis) எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இத்தினம் உலக சுகாதார அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.


*முக்கிய நிகழ்வுகள்..*


1914ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி முதலாம் உலகப்போர் ஆரம்பமானது.


1821ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி பெரு என்ற நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.


1988ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி இந்தியாவின் தேசிய இறகுப்பந்து வீரர் சையது மோடி மறைந்தார்.

------------------------------------------------------------------

(28-சூலை) *ராபர்ட் ஹூக்.*


செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கிய ராபர்ட் ஹூக் 1635ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.


இவர் தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றிய விரிவான விளக்கங்களை தந்துள்ளார். மேலும் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளார்.


முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தார். 1684ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார்.


மேலும், இவர் முதல் கணித கருவியையும், தொலைநோக்கியையும் வடிவமைத்துள்ளார். ஹூக் விதியை வரையறுத்துள்ளார். இன்றளவும் மிகச்சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் இவர் 1703ஆம் ஆண்டு மறைந்தார்.

----------------------------------------------------------------------

(29-சூலை) *சர்வதேச புலிகள் தினம்.*


அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.


மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


*முக்கிய நிகழ்வுகள்..*


1958ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆரம்பிக்கப்பட்டது.

--------------------------------------------------------------------

(29-சூலை) *பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி.*


தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 1890ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணன்பட்டியில் பிறந்தார்.


இவர் சாகித்ய அகாடமியின் மகாமகிமோ பாத்தியாய என்ற பட்டம், வித்தியாரத்தினம், வித்யாநிதி, வித்யாபூஷணம் போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார்.


தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும் என்ற ஆய்வுக்காக, ( History of Gramattical Theories in tamil and their relation to Gramattical literature in Sanskrit) 1930ஆம் ஆண்டு தமிழாய்வில் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.


விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியவர். வாழ்நாள் முழுவதையும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்த இவர் 1978ஆம் ஆண்டு மறைந்தார்.


*முசோலினி.*


உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் பட்டியலில் இருக்கும் இத்தாலியின் சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினி 1883ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தார்.


1939ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும், முசோலினியும் ஒரே அணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடியாக இருந்தவர் இவர்தான்.


இத்தாலியின் பயங்கரமான சர்வாதிகாரியாக விளங்கிய முசோலினி 1945ஆம் ஆண்டு புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.


*ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா.*


1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா பிறந்தார்.


இவர் இந்தியாவில் டாட்டா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.


இந்தியாவின் முன்னோடி தொழிலதிபரும் டாட்டா சன்ஸ் நிறுவனருமான ஜம்சேத்ஜி டாட்டாவின் முதல் உறவினர் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி மறைந்தார்.

--------------------------------------------------------------------

(30-சூலை)*உலக நண்பர்கள் தினம்.*

உன்னை பற்றி சொல்... உன் நண்பனை பற்றி சொல்கிறேன் என்பது பழமொழியாக இருந்தாலும்... அது எந்த காலத்திற்கும் பொருந்தும். இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை 2011ஆம் ஆண்டு சர்வதேச நண்பர்கள் தினத்தை அறிவித்தது.


இத்தினம் ஆண்டுதோறும் ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட்ட சில நாடுகளில் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.



*ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்*


ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன.


இதனைத் தடுத்திட ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கடைபிடிக்குமாறு அறிவித்தது.

-------------------------------------------------------------------

(30-சூலை) *முத்துலட்சுமி ரெட்டி.*


மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.


அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.


இவர் இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி வைத்தார். மேலும் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். இவர் மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.


தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இவர் பத்ம பூஷண் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


எதையும் தடைக்கற்களாக எடுத்துக்கொள்ளாமல் படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968ஆம் ஆண்டு மறைந்தார்.


*ஹென்றி போர்டு.*


1863ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மாடல் டி காரை உருவாக்கிய ஹென்றி போர்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தார்.

ஹென்றி போர்டு மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், பொருத்துகை ஒழுங்குமுறையின் (Assembly Line) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார்.


மேலும் இவர் அறிமுகப்படுத்திய மாதிரி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது.


இவர் 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி மறைந்தார்.


--------------------------------------------------------------------------

(31-சூலை)


1805ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தமிழக விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.


1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.


1964ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர்-7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

--------------------------------------------------------------

(31-சூலை) *ஜே.கே.ரௌலிங்.*


உலகையே புரட்டிப்போட்ட ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.


1990ஆம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது. அப்போது மக்கள் மிகுந்த தொடருந்தில் லண்டனை நோக்கி இவர் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் ஹாரிபாட்டர் கதைக்கான எண்ணம் இவருடைய மனதில் உதித்தது. அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர்.


1995ஆம் ஆண்டு 'ஹாரிபாட்டர் அன்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்'” என்ற தனது முதல் நாவலை எழுதி முடித்தார். அதை தொடர்ந்து, 'ஹாரிபாட்டர் அன்ட் சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ், 'ஹாரிபாட்டர் அன்ட் தி பிரிசினர் ஆஃப் அஸ்கபன்' அடுத்தடுத்து வெளிவந்தன.


இவரது 7 உலகம் முழுவதும் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சில்ரன் புக் விருது, 3 முறை ஸ்மார்டீஸ் பரிசு, ஒயிட்பிரெட் சில்ரன்ஸ் புக் ஆஃப் தி இயர் விருது என பல விருதுகள் குவிந்தன.


*செய்குத்தம்பி பாவலர்.*


1874ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தமிழ்ப் பெரும் புலவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான செய்குத்தம்பி பாவலர் பிறந்தார்.


ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்துச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாவலர் 1950ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி மறைந்தார்.


தமிழ்நாடு அரசு செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்கோட்டார் பகுதியில் இடலாக்குடியில் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம் அமைத்தது.


இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு' சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்திய அரசால் 2008ஆம் ஆண்டு 31ஆம் தேதி டிசம்பர் இவரது நினைவாக சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------

4 views0 comments

Recent Posts

See All
bottom of page