(21-31)October

(21-அக்) *ஆல்ஃபிரட் நோபல்.* நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிப்பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1863ஆம் ஆண்டு வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். பல முயற்சிகளுக்குப் பிறகு டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்தார். 1875ஆம் ஆண்டு பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்கு தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார். இவர் போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. இவர் சர்வதேச அளவில் சுமார் 350 காப்புரிமைகளைப் பெற்றார். உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த ஆல்ஃபிரெட் நோபல் 1896ஆம் ஆண்டு மறைந்தார். *சுர்ஜித் சிங் பர்னாலா.* தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். தமிழ்நாட்டின் மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். இவர் 1942ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967ஆம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார். மக்களவை உறுப்பினராக 1996ஆம் ஆண்டு மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர்களில் ஒருவரான சுர்ஜித் சிங் பர்னாலா 2017ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------- (21-அக்) *உலக அயோடின் தினம்.* உலக அயோடின் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் சத்துக் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். --------------------------------------------------------- (24-அக்) *இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன்.* நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார். கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் யூ செட் இட்' (You Said It) என்கிற தலைப்பில் 'திருவாளர் பொதுஜனம்' (Common man) 'என்கிற கதாபாத்திரத்தை 1951ஆம் ஆண்டு முதல் 60 ஆண்டு காலமாக வரைந்து வந்தார். இவர் பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார். *லட்சுமி சாகல்.* 1914ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஜான்சி ராணி படை பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்த லட்சுமி சாகல் பிறந்தார். லட்சுமி சாகல் 1942ஆம் ஆண்டு பிரித்தானிய-ஜப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துள்ளார். 1943ஆம் ஆண்டு நேதாஜி ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க வேண்டும் என லட்சுமி சாகலுக்கு அழைப்பு விடுத்தார். லட்சுமி சாகல் அந்த அழைப்பை ஏற்று ஜான்சிராணி படைக்கு பொறுப்பேற்றார். இளம் பெண் மருத்துவராகவும், காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாகவும், பின்னர் கேப்டன் லட்சுமியாக ஆயுதமேந்தி போராடியும், நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் நெருங்கிய உதவியாளருமாக இருந்த லட்சுமி சாகல் தனது 97வது வயதில் மறைந்தார். (24-அக்) *ஐக்கிய நாடுகள் தினம்* ஐக்கிய நாடுகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த சபை எந்த பொருளை வேண்டுமானாலும் விவாதம் செய்யவும், ஆராயவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் உரிமை கொண்டுள்ளது. *உலக தகவல் வளர்ச்சி தினம்..* உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா. சபை முடிவு செய்தது. எனவே 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா. சபை அறிவித்தது. 1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்கள் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது. *உலக போலியோ தினம்.* உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவுக்கு முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஜோனஸ் சால்க் ஆவார். இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதை ஒழிக்க உலக அளவில் முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. *சர்வதேச பள்ளி நூலக தினம்.* அமெரிக்காவைச் சேர்ந்த பிளான்ச் உல்ஸ் என்கிற பெண்மணி, சர்வதேச அளவில் பள்ளி நூலகங்களுக்கான ஒரு அமைப்பை 1999ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவரின் முயற்சியால் முதன்முதலாக 1999ஆம் ஆண்டு அக்டோபர் நான்காவது திங்கட்கிழமை (24.10.2022) சர்வதேச பள்ளி நூலக தினமாக கொண்டாடப்படுகிறது. (25-அக்) *பிக்காசோ.* 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார். ஜார்ஜெஸ் பிராக் என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார். தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார். தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார். அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கென்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட பிக்காசோ 1973ஆம் ஆண்டு மறைந்தார். *எவரிஸ்ட் கலோயிஸ்.* தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் 1811ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். பல்லுறுப்பு சமன்பாடு சம்பந்தமான இயற்கணித நிபந்தனைகளை 19வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே கண்டுபிடித்தார். அக்காலத்து கணிதக் கண்டுபிடிப்புகளின் முதல்வனாக திகழும் எவரிஸ்ட் கலோயிஸ் 1832ஆம் ஆண்டு மறைந்தார்.
---------------------------
(26-அக்)
*கணேஷ் சங்கர் வித்யார்தி.*
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து வந்தவர், 'ஹமாரி ஆத்மோசர்கதா' என்ற தனது முதல் நூலை 16 வயதில் எழுதினார்.
அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் காந்திஜியை முதன்முறையாக 1916ஆம் ஆண்டு சந்தித்ததும், தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
விடுதலைப் போராட்டம், சமூகப் பொருளாதார புரட்சி, விவசாயிகள், ஜாதி, மதப் பிரச்சனைகள் குறித்து தனது இதழ்களில் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உத்தரப் பிரதேச சட்டசபையின் மேலவை உறுப்பினராக 1926ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். எழுத்தையே ஆயுதமாக்கி எழுச்சிப் போராட்டம் நடத்திய இவர் 1931ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஹிலாரி கிளிண்டன்.*
1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவில் பிறந்தார்.
1973ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.
1979ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார்.
1994ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை அங்கீகாரம் மறுத்த கிளிண்டன் சுகாதார திட்டத்திற்கு (Clinton Health Care Plan) இவரது பங்களிப்பு முக்கியமானதாகும்.
இவர் ஐக்கிய அமெரிக்காவின் மேலவை உறுப்பினராக 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையும், 67வது வெளியுறவுத்துறை செயலாளராக 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையும் பொறுப்பு வகித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
--------------------------------------------------------------
(27-அக்) *கே.ஆர்.நாராயணன்.*
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் 1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கேரள மாநிலம் திருவாங்கூரிலுள்ள பெருந்தனம் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (IFS) சேர்ந்து, ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றினார்.
பின்பு 1984ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர், ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.
இவர் 1992ஆம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1997ஆம் ஆண்டு ஜூலை 25 முதல் 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவி வகித்தார்.
கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த கே.ஆர்.நாராயணன் 2005ஆம் ஆண்டு மறைந்தார்.
*தியோடர் ரூஸ்வெல்ட்.*
1858ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்க அதிபராக மிக இளம் வயதில் பொறுப்பேற்றவரும், சிறந்த எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட் பிறந்தார்.
இவர் 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் குடியரசுக் கட்சியின் சார்பாக நியூயார்க் மாநிலத்திலும் ஆளுநராக இருந்தார்.
அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற இவர் 1919ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி மறைந்தார்.
---------------------------------------------------------------------
(28-அக்)
*பில்கேட்ஸ்.*
மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் பில்கேட்ஸ் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அமெரிக்காவில் சியாட்டில் என்ற நகரில் பிறந்தார்.
இவர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1981ஆம் ஆண்டு IBM கணினிகளுக்காக MS-DOS என்ற Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தவர் இவர் தான்.
1995ஆம் ஆண்டு வெளியான 'தி ரோடு அஹெட்' என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும், பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர். 1999ஆம் ஆண்டு 'பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப் தாட்' என்ற நூலை வெளியிட்டார்.
*சகோதரி நிவேதிதா.*
சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.
ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.
ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர், 'எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்' என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.
வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலக்கட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 1911ஆம் ஆண்டு மறைந்தார்.
---------------------------------------------------------------------
(29-அக்)
*கவிஞர் வாலி.*
தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும்.
1958ஆம் ஆண்டு 'அழகர் மலைக் கள்வன்' என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். 1963ஆம் ஆண்டு 'கற்பகம்' என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் பொய்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2007ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு பாரத விலாஸ் திரைப்படத்தில் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
*விஜேந்தர் சிங்.*
1985ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இந்திய குத்துச்சண்டை வீரர், விஜேந்தர் சிங் அரியானா மாநிலத்தில் பிறந்தார்.
தேசிய மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றதால், 2004 ஏதென்ஸ் கோடைகால ஒலிம்பிக் மற்றும் 2006 காமன்வெல்த் போட்டிகள் போன்ற பல சர்வதேச போட்டிகளில் பயிற்சியளிக்கவும், போட்டியிடவும் விஜேந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (AIBA) அதன் வருடாந்திர நடுத்தர எடை (75 கிலோ) பிரிவில் விஜேந்தரை முதல் தரவரிசை குத்துச்சண்டை வீரராக அறிவித்தது. அவர் 2800 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றார்.
-------------------------------------------------------------------------------
(30-அக்)
*பசும்பொன்.முத்துராமலிங்கத் தேவர்.*
சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலக திறப்பு விழா 1933ஆம் ஆண்டு நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரை பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடை திறந்த வெள்ளம் போல பேசி, பாராட்டு பெற்றார்.
காங்கிரஸில் இருந்து 1948ஆம் ஆண்டு விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
விடுதலைக்காக போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1963ஆம் ஆண்டு தனது பிறந்த நாளன்றே மறைந்தார்.
*ஹோமி ஜஹாங்கீர் பாபா.*
இந்திய அணுவியல் துறையின் தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932ஆம் ஆண்டு மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
இவருக்கு 1954ஆம் ஆண்டு பாரதத்தின் உயர் விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுக்கூறப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967ஆம் ஆண்டு முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) என பெயரிடப்பட்டது.
அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ஆம் ஆண்டு மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்பட தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஹோமி ஜஹாங்கீர் பாபா 1966ஆம் ஆண்டு மறைந்தார்.
--------------------------------------------------------------------------------
(31-அக்)
*சர்தார் வல்லபாய் படேல்.*
இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும்இ நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அகமதாபாத்தில் தன் வக்கீல் தொழில் மூலம் உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி பிரபலமானார். 1917ஆம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 1950ஆம் ஆண்டு மறைந்தார். 1991ஆம் ஆண்டு படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2018ஆம் ஆண்டு இவருக்காக 597 அடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.
------------------------------------------------------------