(24 ஏப்ரல் - 30 ஏப்ரல்)
(24-ஏப்) *உலக ஆய்வக விலங்குகள் தினம்*
உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.
ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் (National Anti - Vivisection Society (NAVS)) 1979ஆம் ஆண்டில்இ ஏப்ரல் 24ஆம் தேதியை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
*தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்*
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
பஞ்சாயத்து ராஜ்ஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான். மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.
*ஜி.யு.போப்*
ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தமிழுக்கு தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார்.
இவர் 1839ஆம் ஆண்டு சமயப் பணிக்காக தமிழகம் வந்தார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களூரில் சமயப் பணியோடு, கல்விப்பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.
1886ஆம் ஆண்டு திருக்குறளை Sacred Kural என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இதேபோல் பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 1908ஆம் ஆண்டு மறைந்தார்.
*சச்சின் டெண்டுல்கர்*
உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
இவர் முதன்முதலாக 15-வது வயதில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.
டெஸ்ட் போட்டியில் 10க்கும் மேலும், ஒருநாள் போட்டியில் 50க்கும் மேலும் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மேலும் பல தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். 2012ஆம் ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு இவரது பிளேயிங் இட் மை வே என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. இவர் 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
இவர் பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, பாரத ரத்னா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கௌரவ கேப்டன் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
*ஜெயகாந்தன்*
1934ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் பிறந்தார்.
இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. இவர் ஏப்ரல் 8ஆம் தேதி 2015ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(25-ஏப்) *உலக மலேரியா தினம்*
உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைபிடித்து வருகிறது.
*மார்க்கோனி*
வானொலியின் தந்தை மற்றும் நோபல் பரிசு பெற்ற குக்லீல்மோ மார்க்கோனி 1874ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார்.
இவருக்கு இயற்பியலில் குறிப்பாக மின்சாரவியலில் ஆர்வம் பிறந்து, கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார்.
1895ஆம் ஆண்டு திசை திரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு செய்தியை அனுப்பினார். 1897ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 1901ஆம் ஆண்டு 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.
மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுப்போக்கு சாதனத்தை வழங்கிய மார்க்கோனி 1937ஆம் ஆண்டு மறைந்தார்.
*புதுமைப்பித்தன்*
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிப்பெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
இவரின் சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்புகள் காஞ்சனை, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்ன கரம், இது மிஷின் யுகம், சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒருநாள் கழிந்தது, சிற்பியின் நரகம், செல்லம்மாள் ஆகியவையாகும்.
இவர் சொ.வி.இ ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைப்பெயர்களில் கதைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 1948ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(26-ஏப்) *உலக அறிவுசார் சொத்துரிமை தினம்*
உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்ரல் 26ஆம் தேதி 2001ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. மேலும், 1970ஆம் ஆண்டு இதே நாளில் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட்டது.
இத்தினம் மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் கொண்டாடப்படுகிறது.
*குருதத்த வித்யார்த்தி*
ஆரிய சமாஜத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்டிட் குருதத்த வித்யார்த்தி 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில் பிறந்தார்.
லாகூரில் லாலா ஹன்ஸ்ராஜ், லாலா லஜபதி ராய் இவருடைய நெருங்கிய நண்பர்கள். இவர் அறிவியலில் நாட்டம் கொண்டிருந்ததால் அனைத்தையும் அறிவியல் அடிப்படையிலேயே அலசிப் பார்ப்பார்.
இவருக்கு இறைவன் குறித்த வலுவான சந்தேகம் இருந்து வந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு பிரியமான சீடரானார். பெரும் பண்டிதராக போற்றப்பட்ட போதிலும், மிகுந்த அடக்கத்தோடு தன்னை 'வித்யார்த்தி' (மாணவன்) என்றே கூறிக்கொள்வார்.
இவரின் 'எ டெர்மினாலஜி ஆஃப் தி வேதாஸ்' என்ற ஆய்வுக் கட்டுரை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக சமஸ்கிருதப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
அறிவைத் தேடுவதிலும், பரப்புவதிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு, சமூக சிந்தனையாலும் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய பண்டிட் குருதத்த வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு மறைந்தார்.
*சியாமா சாஸ்திரி*
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி 1762ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். சியாம கிருஷ்ணா என்ற செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது.
சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் ஸ்ருதிகளை இயற்றியுள்ளார்.
தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரர் என எல்லோராலும் மதிக்கப்பட்ட இவர் 1827ஆம் ஆண்டு மறைந்தார்.
*வில்லியம் ஷேக்ஸ்பியர்*
1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜூலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் லண்டனுக்கு அருகில் பிறந்தார்.
ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும், உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
பல படைப்புகளை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் ஏப்ரல் 23ஆம் தேதி 1616ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(27-ஏப்) *சாமுவெல் மோர்ஸ்*
ஒற்றைக்கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றை கண்டுபிடித்த சாமுவெல் மோர்ஸ் 1791ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
இவர் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆவார். இவரது மனைவியின் மரணமே, தந்தி முறையைக் கண்டுபிடிக்க காரணமாக இருந்தது. மேலும், மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதையும் நிரூபித்தார்.
1844ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி உலகின் முதல் தந்திச் செய்தியை வாஷிங்டன்.டிசி-லிருந்து பால்டிமோருக்கு அனுப்பி ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். தந்தி மூலம் மக்களின் சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்த சாமுவெல் மோர்ஸ் 1872ஆம் ஆண்டு மறைந்தார்.
*கந்த முருகேசனார்*
உபாத்தியாயர் என்றும், தமிழ்த் தாத்தா என்றும் அழைக்கப்பட்ட சிறந்த தமிழ் அறிஞர் கந்த முருகேசனார் 1902ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள தென் புலோலியில் பிறந்தார்.
பல பள்ளிக்கூடங்களை திறந்து இங்கு தமிழ் மட்டுமன்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கிய இவரே அனைத்தையும் கற்பித்தார். இவர் 1965ஆம் ஆண்டு மறைந்தார்.
*பி.தியாகராயர்*
நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர் 1852ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டையில் பிறந்தார்.
1882ஆம் ஆண்டு சென்னை உள்நாட்டினர் சங்கம் (சென்னை மகாஜன சபை) என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு சார்பில் நீதி என்ற இதழை நடத்தினார். இதன் பெயரைக் கொண்டே இந்த அமைப்பு நீதிக்கட்சி எனக் குறிப்பிடப்பட்டது.
இவரது தன்னலமற்ற முயற்சியால், 1921ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டப்பேரவை தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவி இவரைத் தேடி வந்தாலும் அதை மறுத்து வேறு ஒருவரை பொறுப்பேற்கச் செய்தார். இவர் 1925ஆம் ஆண்டு மறைந்தார்.
*பிரபஞ்சன்*
1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகருமான பிரபஞ்சன் புதுச்சேரியில் பிறந்தார்.
இவர் 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
இவர் டிசம்பர் 21ஆம் தேதி 2018ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(28-ஏப்) *வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்திற்குமான உலக தினம்*
வேலைத் தொடர்பான விபத்துக்கள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை ஏப்ரல் 28ஆம் தேதி இத்தினத்தை அறிவித்தது.
அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
*ஜான் ஹென்ரிக் ஊர்ட்*
சர்வதேச வானியல் அறிஞரும், பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட் 1900ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நெதர்லாந்தின் ஃபிநேகர் என்ற கிராமத்தில் பிறந்தார்.
உயர்-திசை வேகம் (High- Velocity) கொண்ட நட்சத்திரங்களின் பண்புகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரையை எழுதி 1926ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். பால்வெளி ஒரு அசுரச் சக்கரம் போல சுழல்கிறது. அண்டவெளியில் நட்சத்திரக்கூட்டங்கள் தனித்தனியாக பயணிக்கின்றன. அண்டவெளி மையத்திற்கு நெருக்கமாக உள்ளவை, தொலைவில் உள்ளவற்றைவிட வேகமாக சுழல்கின்றன என்பதையெல்லாம் கண்டறிந்தார்.
இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இவரும் இவரது சகாக்களும் இணைந்து மிகப்பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கினார்கள்.
அதைக்கொண்டு நட்சத்திரங்கள் ஒரு குழுவாகப் பால்வெளியை முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருகின்றன என்றார். சூரியக் குடும்பத்தின் வட்டத்திலிருந்து வால் நட்சத்திரங்கள் வருவதை 1950ஆம் ஆண்டு கண்டறிந்து கூறினார்.
ஊர்த் சிறுகோள், ஊர்த் முகில், பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்த் மாறிலிகள் என பல வானியல் கண்டுபிடிப்புகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. வானியலில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் ஹென்ரிக் ஊர்ட் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(29-ஏப்) *சர்வதேச நடன தினம்*
சர்வதேச நடன கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடி வருகிறது. மேலும், ஜீன் ஜார்ஜ்ஸ் நோவீர் என்ற நடனக் கலைஞர் பிறந்த தினத்தை (ஏப்ரல் 29), சர்வதேச நடன தினமாக கொண்டாடப்படுகிறது.
*உலக ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தினம்*
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது. சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். ரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*பாவேந்தர் பாரதிதாசன்.*
தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
1937ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த இவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத்தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பாதவர்.
பாடப் புத்தகங்களில் அ - அணில் என்று இருந்ததைஇ அ - அம்மா என்று மாற்றியவர். இலக்கியக் கோலங்கள், இளைஞர் இலக்கியம், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குமரகுருபரர் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.
இவர் 1954ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவரது பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தம் எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் 1964ஆம் ஆண்டு மறைந்தார்.
*ராஜா ரவிவர்மா.*
1848ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி காலத்தால் அழியாத பல ஓவியங்களை படைத்த ஓவியர் ராஜா ரவிவர்மா பிறந்தார்.
நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணியில் ஓவியக்கலைக்குள் புகுத்தினார்.
உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்த இவர் அக்டோபர் 2ஆம் தேதி 1906ஆம் ஆண்டு மறைந்தார்.
*சர்வதேச ஜாஸ் தினம்.*
சர்வதேச ஜாஸ் தினம் ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2011ஆம் ஆண்டு அறிவித்தது. ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது.
ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ், பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது.
*உலக கால்நடை தினம்*
2000ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை (ஏப்ரல் 30) உலக கால்நடை தினமாக கொண்டாடப்படுகிறது. உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(30-ஏப்) *தாதாசாஹேப் பால்கே*
இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.
பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம்இ கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.
1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 1944ஆம் ஆண்டு மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------