2July-6July

(02-சூலை)
*மயில்சாமி அண்ணாதுரை.*
தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982ஆம் ஆண்டு சேர்ந்தார். இவரது திறமையால் செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
பிறகு செயற்கைக்கோள் விண்கலன் இயக்க மேலாளர் (1988), இன்சாட் துணை இயக்குநர் (1994), மேலும் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-3பி, ஜிசாட்-1 ஆகியவற்றின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.
2004ஆம் ஆண்டு சந்திரயான் திட்ட இயக்குநரானார். அதுமட்டுமல்லாது தொலையுணர்வு செயற்கைக்கோள், மங்கள்யான் போன்றவற்றின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் அஸ்ட் ரோசாட், ஆதித்யா-டு1 செயற்கைக்கோள்களை வழிநடத்தியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, சந்திரயான் திட்டத்திற்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.
*ஹென்றி பிராக்.*
1862ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி படிகங்களின் அமைப்பைக் கண்டுபிடித்தவரும், எக்ஸ் கதிர் நிறமாலைமானியை உருவாக்கியவருமான சர் வில்லியம் ஹென்றி பிராக் இங்கிலாந்தில் பிறந்தார்.
பிராக் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞான விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1935லிருந்து ராயல் சொசைட்டி தலைவராக இருந்தார்.
இவர் இயற்பியல் நோபல் பரிசு (1915), பர்னார்டு பதக்கம் (1915), மேட்டூசி மெடல் (1915), ரம்ஃபோர்ட் பதக்கம் (1916), கோப்ளி மெடல் (1930), ஃபாரடே மெடல் (1936), ஜான் ஜே.கார்டி விருது (1939) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
நோபல் பரிசு வென்ற சர் வில்லியம் ஹென்றி பிராக் மார்ச் 12ஆம் தேதி 1942ஆம் ஆண்டு தனது 79வது வயதில் லண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
*ஹெர்மன் ஹெசே.*
1877ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி உலக புகழ்பெற்ற கவிஞரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹெர்மன் ஹெசே ஜெர்மனியில் பிறந்தார்.
கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppen Wolf, Sidthartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை.
இவர் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி மறைந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
(03-சூலை)
*எஸ்.ஆர்.நாதன்.*
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 1924ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார்.
இவர் 1955ஆம் ஆண்டு மருத்துவ சமூக சேவகராக சிங்கப்பூர் சிவில் சேவையில் (Singapore Civil Service) தனது தொழிலைத் தொடங்கினார். மேலும், அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இவர் திறம்பட பணியாற்றினார். அதன்பின் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.
1999ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிபர் பதவியேற்ற போது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை அவர் மீட்டு வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக வம்சாவளியிலிருந்து சிங்கப்பூர் ஜனாதிபதியாக உயர்ந்த எஸ்.ஆர் நாதன் 2016ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஹர்பஜன் சிங்.*
1980ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருந்தார்.
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்தப் போட்டித்தொடரில் 32 இலக்குகள் வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக அமைந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.
*எம்.எல்.வசந்தகுமாரி.*
1928ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகர் எம்.எல்.வீ என அன்புடன் அழைக்கப்பட்ட எம்.எல்.வசந்தகுமாரி சென்னையில் பிறந்தார்.
பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார்.
இவர் 'ராகங்களின் அரசி' என்று அழைக்கப்படுகிறார்.
பிரபல பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.
பத்ம பூஷன் விருதினையும், சங்கீத கலாநிதி விருதினையும், சங்கீத கலாசிகாமணி விருதினையும் பெற்ற இவர் 1990ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
(04-சூலை)
*குல்சாரிலால் நந்தா.*
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார்.
இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.
இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞருமான இவர் 1998ஆம் ஆண்டு மறைந்தார்.
*கரிபால்டி.*
நவீன இத்தாலியின் தந்தையான ஜுஸபே கரிபால்டி 1807ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிரான்ஸின் நைஸ் நகரில் பிறந்தார்.
ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கும் இயக்கத்தில் இணைந்து போராடினார். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர் படையின் புகழ், உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன.
இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர் ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை. இவர் ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் *'ஹீரோ ஆஃப் டூ வேர்ல்ட்ஸ்'* (Hero of the Two World's) என்று போற்றப்பட்டார்.
அசாதாரண ராணுவத்திறன், வீரம், முடிவெடுக்கும் ஆற்றல், செயல்திட்டம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற கரிபால்டி 1882ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
(05-சூலை)
*பாலகுமாரன்.*
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான பாலகுமாரன் 1946ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமானேரி என்னும் சிற்றூரில் பிறந்தார்.
இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும். 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும் இவர் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)இ இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்), தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு) மற்றும் கலைமாமணி போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தன்னுடைய எழில்மிகு கற்பனைத் திறனால், எழுத்து மற்றும் திரைத்துறையில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பெற்ற இவர், 2018ஆம் ஆண்டு மறைந்தார்.
*எர்னஸ்ட் வால்டர் மயர்.*
20ம் நூற்றாண்டின் பரிணாமவியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் வால்டர் மயர் 1904ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
இவருக்கு சிறு வயதிலிருந்தே பறவையியலில் ஆர்வம் கொண்டிருந்ததால் பல அரிய பறவை இனங்களையும் எளிதாக அடையாளம் காட்டி விடுவார்.
இவர் தனது வாழ்நாளில் 26 புதுவகைப் பறவையினங்களுக்கும், 38 புதுவகை பூக்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார். 1942ஆம் ஆண்டு உயிரினங்களின் மரபியல், பரிணாம தொகுப்புகள் தொடர்பான இவரது முதல் புத்தகம் வெளிவந்தது.
இவர் மொத்தம் 25 புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்கால பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்கும், உயிரியியல் சிற்றின கோட்பாட்டு வளர்ச்சிக்கும் இவரது ஆராய்ச்சிகள் வழிவகுத்தன.
பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட எர்னஸ்ட் மயர் 2005ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
(06-சூலை)
*உலக ஜூனோசிஸ் தினம்.*
ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி மூலமும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள் மூலம் பரவுகின்றன.
விலங்குகள் மூலம் பரவும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜூலை 6ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*பரிதிமாற் கலைஞர்.*
தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி.
இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம்வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.
இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் 1903ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஜார்ஜ் வாக்கர் புஷ்.*
1946ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் பிறந்தார்.
அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்.
இவரின் தந்தை ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்.
தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------