4June -10June

*எஸ்.பி.பாலசுப்ரமணியம்*
40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
1966ஆம் ஆண்டு கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். 2016ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.
தமிழில் முதன்முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார். அதை தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.
பத்மஸ்ரீ (2001), பத்ம பூஷண்(2011), கலைமாமணி விருது, ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றுள்ளார்.
60-களில் தொடங்கிய இவரது இசைப்பயணம் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமையுடன் வலம் வருகிறது.
*அனில் அம்பானி.*
இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி 1959ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் இரண்டாவது மகன் ஆவார்.
*கிறிஸ்தோபர் கொக்கரல்.*
1910ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் கிறிஸ்தோபர் கொக்கரல் பிறந்தார்.
ஆங்கிலேயரான இவர் 1969ஆம் ஆண்டு சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவர் நிலம், நீர் ஆகிய இரண்டின் மீதும் செலுத்தவல்ல காற்று மெத்தை உந்தாகிய ஹோவர்கிராஃப்ட்டை (Hover Craft) கண்டுபிடித்தார். இவர் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
(05-சூன்) *முகம்மது இசுமாயில்.*
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இசுமாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.
இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.
மேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962, 1967, 1971) பதவி வகித்துள்ளார்.
இசுமாயில் 1972ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 'காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்' என்று பெயர் சூட்டியது.
*ஜான் கோச் ஆடம்ஸ்.*
சிறந்த வானியல் ஆராய்ச்சியாளர் மற்றும் கணித வல்லுநருமான ஜான் கோச் ஆடம்ஸ் 1819ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1843ஆம் ஆண்டு கணிதத்தில் பட்டம் பெற்றார்.
இவர் 1859ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும், 1860ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் 1892ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
(06-சூன்) *அலெக்ஸாண்டர் புஷ்கின்.*
கவிதை யுகத்தின் சிறந்த படைப்பாளியான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் ( 1799ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பிறந்தார்.
இவர் போரிஸ் குட்னவ் , தி ஸ்டோன் கெஸ்ட், மொஸார்ட் அண்ட் ஸலியெரி என்ற பிரபலமான நாடகங்களையும், ரஸ்லன் அண்ட் லுட்மிலா என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.
இவர் உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சன கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.
நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை செர்ஜியேவிச் புஷ்கின் 1837ஆம் ஆண்டு மறைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இவர் கடைசியாக வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
*பி.எஸ்.பி.பொன்னுசாமி.*
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி 1908ஆம் ஆண்டு ஜூன் 06ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.
இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
(07-சூன்) *உலக உணவு பாதுகாப்பு தினம்.*
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து உணவு பாதுகாப்பின் அவசியத்தை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 7ஆம் தேதி உணவு பாதுகாப்பு தினம் (world Food Safety Day) கடைபிடிக்கப்படுகிறது.
*மகேஷ் பூபதி.*
இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் ஸ்ரீனிவாஸ் பூபதி 1974ஆம் ஆண்டு ஜூன் 07ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
இவர் 1995ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.
இவர் கலப்பு இரட்டையர் பிரிவில், சானியா மிர்சாவுடன் இணைந்து 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்றார்.
2001ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
*காஜா அஹமது அப்பாஸ்.*
இந்தி திரைப்பட இயக்குநர் மற்றும் நாவல் ஆசிரியரான காஜா அஹமது அப்பாஸ் 1914ஆம் ஆண்டு ஜூன் 07ஆம் தேதி அரியானாவில் பானிபட் என்னும் ஊரில் பிறந்தார்.
இவர் பிளிட்ஸ் இதழில் சேர்ந்த பிறகு, அதன் உருது பதிப்பில் 'ஆசாத் காலம்' என்ற தலைப்பில் எழுதிய தொடர் இந்திய வரலாற்றில் நீண்ட கால அரசியல் தொடராகும்.
இவர் தர்தி கே லால் என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். இவர் திரைக்கதை எழுதிய ராஜ்கபூரின் படங்களான ஆவாரா, ஸ்ரீ 420, ஜாக்தே ரஹோ, மேரா நாம் ஜோக்கர், ஹென்னா போன்றவை பிரபலமானவை.
இவர் நர்கீஸ் தத் விருது, வோரோஸ்கி இலக்கிய விருது, காலிப் விருது, பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பல களங்களில் தனி முத்திரை பதித்த காஜா அஹமது அப்பாஸ் 1987ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
(08-சூன்)
*உலக பெருங்கடல் தினம்.*
1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம்.
சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.
*உலக மூளைக்கட்டி தினம்.*
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி உலக ப்ரெய்ன் டியூமர் தினம் (அ) உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.
*இர.ந.வீரப்பன்.*
உலக தமிழர் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட இர.ந.வீரப்பன் 1930ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இலங்கையில் பிறந்தார்.
இவர் சிறுகதை, ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழி போராட்டம், உலகளாவிய தமிழ் பண்பாட்டு தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.
இவரைப் பற்றி தமிழகத்தின் பாவலர் ஐயா கதிர் முத்தையனாரும், லண்டனை சேர்ந்த சுரதா முருகையனாரும் நூல்களை எழுதியுள்ளனர்.
இவர் தமிழ் உயர்வுக்காக தமிழ் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக தொண்டாற்றினார்.
இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொண்ட இர.ந.வீரப்பன் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
(09-சூன்)
*கிரண் பேடி.*
இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார்.
இவர் 1972ஆம் ஆண்டு இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும் மக்கள் மேம்பாட்டிற்காக விஷண் பவுண்டேசன், நவ்ஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.
1979ஆம் ஆண்டு காவல்துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது (Acia Region Award), பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
இவர் பல ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் மகத்தான சேவை ஆற்றியுள்ளார்.
*ஜார்ஜ் ஸ்டீபன்சன்.*
ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார்.
இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார்.
மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினை சரிசெய்து இரும்பு தண்டவாள ரயில் இன்ஜினை வடிவமைத்தார். 1829ஆம் ஆண்டு ரயில்வே முதலாளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் வடிவமைத்த ராக்கெட் என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசு வென்றது.
இங்கிலாந்தில் செஸ்டர்ஃபீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கல சிலை மற்றும் ராக்கெட் ரயில் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை கல்வி கூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்த ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1848ஆம் ஆண்டு மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
(10-சூன்)
*எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்*
பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50 ஆண்டுகாலம் நடத்தி வந்தார்.
இவர் பாரூர் - எம்எஸ்ஜி ஸ்டைல் என்ற புதிய பாணியை அறிமுகம் செய்தார். பத்ம பூஷண், பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சௌடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்திய சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி இசைப் பிரியர்களால் 'எம்எஸ்ஜி' என பாசத்துடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
*வே.தில்லைநாயகம்.*
தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார்.
இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார்.
ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்' என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தமிழில் 'வேதியம் 1008' உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றவை.
தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------