top of page

மகளிர் தினம்

Updated: Sep 19, 2021

மகளிர் தினம் ஒரு மாதமாக கொண்டாட்டம், கொண்டாட்டம் என்று சொல்வதை விட ஒரு மாதமாக விழிப்புணர்வு!!


பலர் மார்ச் மாதம் என்றாலே பெண்களுக்கு வேற வேலை இல்லை என்று விமர்சிப்பார்கள்!




புனைவுகள்,இயல்புகள்,உடன்போக்கு,பேணல்,ஒழுக்கம்,விருந்தோம்பல் என்னும் ஆறு நிலைக்கலன்கள் வழி சங்ககால மகளிரின் நிலை நோக்கப்படுகிறது. பிற்காலத் தமிழகப் பண்பாட்டிற்குத் தாயகமாக விளங்குவது சங்ககாலப் பண்பாடகும். இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் காலங்காட்டும் கண்ணாடியாகும். மகளிர் பாலியல் சார்ந்த செயல்பாடுகள், அவர்களின் பண்பாடு , சமூக வாழ்க்கை போன்றவை எவ்வாறு இருந்தன என்பதற்கு அக்காலக் கட்டத்தில் வெளிவந்த இலக்கியங்களே சான்றாக அமைகின்றன. தமிழ் இலக்கியங்கள் வழி 'ஒளவையார், காக்கைபாடினியார், நற்செள்ளையார் போன்ற பெண்பாற் புலவர்களும்' 'கோப்பெருந் தேவி, பூதப்பாண்யன் மனைவி போன்ற அரசியர் சிலரும்' கண்ணகி, மணிமேகலை போன்ற காவியத் தலைவிகள் சிலரும் இருந்தனர் என்பது தெரிகின்றது. சங்ககால மகளிர் வாழ்க்கையில் எவ்வகை தளத்தில் வைத்து நோக்கப்பட்டனர் என்பதைத் தமிழ் இலக்கியத்தின் வழி ஆராய்ந்தறிதல் பெண், காதலி, மனைவி என்னும் நிலைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.


''ஆதல் நின்னகத் தடக்கிச்

சாதல் நீங்க எமக்கீந் தனையே " (புறம்- 91)

சங்க கால அறிவுப் பாரம்பரியம் பெண்ணிற்கு முன்னுரிமை அளித்தது.




"குன்றக் குறவன் கடவுள் பேணி

இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் " (ஐங்.257)

என்ற வரிகள் பெண் மகளைக் குறிஞ்சி தலைவன் தவம் செய்து பெற்றெடுத்தான் என்பதை உணர்த்தும். பிசிராந்தையார் தமக்கு முதுமையிலும் நரைத் தோன்றாததற்குக் காரணம் தமக்கு அமைந்த சிறப்பிற்குரிய மனைவியே என்றும்,


"யாண்டுபல வாக நரையில் ஆகுதல் யாங்கு ஆகியர் என

வினவுதிர் ஆயின்

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்" (புறம் 197)


என்ற வரிகள் பெண்கள் ஆண்களுக்கு துணையாக இருந்து செயல்பட்டதைச் சுட்டுகிறது.


ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு திண்ணிய மனம் கொண்டு விளங்கியதையும், தன் கணவன் இறந்துபட்டனவாக, அவனது பிரிவுத்துயரைத் தாங்காது மட்டுமல்லாமல், கணவனுக்குப் பிறகு பெண்களுக்கு கைம்மைத் துன்பத்தைக் கொடுத்து பல இன்னல்களுக்கு ஆளாக்கும் சமுதாயத்தை எண்ணி நெஞ்சுரம் கொண்டவளாகத் தீப்பாய்ந்தாள் என்ற செய்தியின் வாயிலாக பெண்கள் பின் நடப்பதை முன்பே அறிந்து அதன்படி நடக்கும் ஆளுமைத் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளது.


சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணி களாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்படுகின்றனர். அரசியல், போர்த் தொழில் தவிர்ந்த ஏனைய சங்ககாலக் களங்களில் பெண்களே ஆளுமை செலுத்தினர். பகற்குறி, இரவுக்குறி, தலைவனைச் சந்தித்தல், தினைப் புனங்காத்தல் என தனது எல்லைகளை மீறாதவளாக இருந்தாலும், புலியை புறமுதுகிட்டு ஓடச் செய்பவளாகவும் அரசனுக்கு அறிவுரை வழங்கும் வல்லமை உடையவராகவும், அறிவில் சிறந்த புலமை வாய்ந்தவராகவும் விளங்கினர்.


ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டிப் போராடினார்கள்.


ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள, கோஷங்கள் வானைப் பிளக்க, அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!


அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரெனக் கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான்.

கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான்.அது இயலாமல் போகவே, அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.


இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட, ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.




இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் நாளாகும்! அந்த மார்ச் 8-ஆம் நாள்தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் நலன் குறித்துச் சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில், உள்ளன்போடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.


சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத் தொடங்கின. பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சி நான்கு வழிகளில் வழிகாட்டி, முயற்சியும் செய்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள்.


ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்கள் எனவும் முண்டாசுக் கவிஞன் பாரதி முழங்கினான். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்!

வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாகச் சொல்வார்கள். பெண்களின் நிலையும் இந்தியாவில் முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். பால்ய விவாகங்கள் நடந்து, பால்ய விதவைகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். வரதட்சணை கொடுமைகள், மரியாதை கொலைகள் என்று எல்லாமே பெண்களின் வாழ்வைத்தான் சூறையாடும் மேற்கண்ட கொடுமைகளை வாய்மூடி பார்க்கும் இந்திய சமூகம், இவர்களது பலமுறை மணங்களை செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் போட்டு தங்கள் விற்பனையை உயர்த்திக் கொள்ளும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்குப் பயந்து கொண்டு தங்கள் துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மன அமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள்.


ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்பட சொல்லிக் கொண்டாலும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை.

மற்ற நாடுகளில் பெண்களின் நிலை முன்னேறியிருப்பது போலத் தோன்றினாலும் இது மிகவும் சிறுபான்மை தான். மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது.

பெரும்பான்மையான பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகவே அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு ‘பெண்கள் சுதந்திரம், பாலியல் விடுதலை’ என்பது புரியாத, அவர்களுக்கு சம்மந்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது.


பெண் குழந்தை தங்களுக்கு கடன் சுமையை அதிகரிக்கப் பிறந்திருப்பதாகவும், ஆண் குழந்தை தங்களை காப்பாற்றுவான் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். உணவு, ஆரோக்கியம், படிப்பு என்று எல்லா விஷயத்திலும் இவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அடிப்படை உரிமை என்பது கூட இல்லாமல் பெற்றோர் காட்டும் ஒருவனை மணந்து வாழ்க்கை முழுவதும் அல்லல் படுகிறார்கள்.

பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு மேற்கத்திய மந்திரச்சொல்லாக மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் நாடுகளிலும் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னேற்றத்திற்கான முதல் படியை எடுத்து வைப்போம் என்பதுதான் இந்த வருட மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் செய்தி.

துவண்டு போகும் நேரங்களில் நேர்மறை எண்ணங்களை மனதில் விதைத்து மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட பலமடங்கு வேகத்தில் ஓட வேண்டிய நிலைமை பெண்களுக்கு!!!


--முனைவர் ஸ்ரீ ரோகிணி, துபாய்--




38 views0 comments

Recent Posts

See All
bottom of page