top of page

எக்ஸ்போ 2020 துபாய் - எனது பார்வையில்!! (EXPO 2020 Dubai, UAE)

Updated: Aug 30, 2021

போன வருடம் அக்டோபர் மாதம் நடக்கவிருந்த எக்ஸ்போ 2020 நிகழ்வு கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் அக்டோபர் மாதம் 2021 நடக்க இருக்கிறது.


மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பகுதியில் (MEASA) நடைபெறும் முதல் உலக எக்ஸ்போ இது. அரபு நாடுகளில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.முற்றிலும் எதிர்கால சிந்தனையுடன் புதிய புதிய கண்டுபிடிப்புகளை பல பொழுதுபோக்குகள் உடன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் எக்ஸ்போ 2020 துபாய்.


முதல் உலக எக்ஸ்போ 1857ஆம் ஆண்டு லண்டனில் மிகப் பெரிய அளவில் நடந்தது. கடைசி எக்ஸ்போ 2015 ஆம் ஆண்டில் வில்லனில் நடந்தது. அதன் கருப்பொருள் கிரகத்திற்கு உணவளித்தல் வாழ்க்கைக்கான ஆற்றல் என்பதாகும். இது ஊட்டச்சத்து மற்றும் உணவில் கவனம் செலுத்தியது.


ஒவ்வொரு எக்ஸ்போவும் நமக்கு அளித்த விடயங்களின் மூலம் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம், சியாட்டில் விண்வெளி ஊசி,தட்டச்சுப் பொறி தொலைக்காட்சி மற்றும் தக்காளி கெட்சப் எனப் பல நம் பயன்பாட்டில் இன்று உள்ளன.


மார்ச் 2016 ஆம் ஆண்டில் எக்ஸ்போ 2020 துபாய் தனது புதிய லோகோவை வெளியிட்டது. இது சாரு அல் ஹதீத் தொல்பொருள் தளத்தில் காணப்பட்ட ஒரு மோதிரத்தை ஏற்பட்டதாகும். எக்ஸ்போ 2020 துபாயின் கருப்பொருள்கள் வாய்ப்பு, இயக்கம் மற்றும் நிலைத்தன்மை. தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். இயக்கம் என்பது பொருள் ரீதியாகவும் இணையம் வழியாக மக்கள் சிறந்த மற்றும் அதிக உற்பத்தி இயக்கத்தை உருவாக்குவதாகும் நிலைத்தன்மை என்பது நாம் வாழும் உலகத்துடன் இயற்கையை மதித்து சமநிலையுடன் வாழ்வதாகும். எக்ஸ்போ 2020 துபாயில் நம்மை மகிழ்விக்கவும் திகைக்கவைக்கும் ஏற்ப பல அதிசயங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. கலை இசை ,காஸ்ட்ரோனமி முதல் தொழில்நுட்பம், கட்டிடக் கலை மற்றும் பொழுதுபோக்கு வரை அரபு உலகில் இதுவரை மிகப்பெரிய நிகழ்வு எக்ஸ்போ 2020.


துபாய் எக்ஸ்போவில் 192 நாடுகளைச் சேர்ந்த பெவிலியன்கள், வணிகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சியில் 11 மில்லியன் வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


உலக எக்ஸ்போ கலை ,கலாச்சாரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நமது அறிவை மேம்படுத்த முயற்சிக்கும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மூன்று பெவிலியன் வடிவமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது டெரா(Terra- Sustainability Pavilion) பெவிலியன் மட்டும் 22 ஜனவரி 2021 முதல் 10 ஏப்ரல் 2021 வரை பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளில் 1500 பார்வையாளர்கள் என இணையத்திலே நுழைவுச்சீட்டு பெற்றுக் கொண்டு அதற்கான நேரத்தில் அனுமதிக்கிறார்கள்.



4.38 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் துபாய் தெற்கு மாவட்டத்தில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மேலும் துபாய் சர்வதேச விமான நிலையம், அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் க்ரூஸ் டெர்மினல் மற்றும் அபுதாபி க்ரூஸ் டெர்மினல்களை எளிதில் அடையக் கூடியதாக இந்த தளம் அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்காக பிரத்யேக பேருந்து எக்ஸ்போ 2020 கார் பார்க்கிங்கில் இருந்து போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.



முதலில் தங்க ஒளி போல் ஜொலிக்கும் இரும்பு நுழைவு வாயிலாக நாம் செல்லும் படி வைத்து இருக்கிறார்கள். பிறகு உடல் வெப்பப் பரிசோதனை, சோதனைச் சாவடிகள்,நுழைவுச்சீட்டு (நாள் மற்றும் நேரம்) QR குறியீடு ஸ்கேன் என முடித்த பிறகு உள்ளே ஒரு பக்கம் அரபு கலாச்சார நடனம், மறுபக்கம் ஆங்கில பாடல்,நடனம் .ஆங்காங்கே பல நாட்டினர் உணவு வகைகளும்,குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டு, சிறியதாக பூங்கா.மிகவும் பாராட்டுக்குரியது பூங்காவில் விளையாடியதற்கு பிறகு குழந்தைகளுக்கு ஒரு செடியும்,மண்ணையும் கொடுத்து இயற்கையின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் தெரிவிக்கிறார்கள்.



அடுத்து உள்ளே 125,000 மற்றும் 50,000 ஆண்டுகள் முன்பு இருந்த மிருகங்கள், பறவைகள், மரங்கள் பற்றிய தகவல்கள். மேலும் சூரிய மின்கலங்கள் வெப்ப காலத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தையும்,மழை காலத்தில் மழைநீரை சேமிக்கும் படியும் வடிவமைத்துள்ளார்கள்.பிறகு அறிவியலும் கணிப்பும் என்பது போல விளையாட்டுகள் நம்மிடம் அறிவியலை யதார்த்தமான பாடச்சாலை போல் தெரிவிக்கின்றன.அதன் பின் இரண்டு பிரிவுகளாக கடலிற்கு அடியில்(Under the Ocean) உள்ள சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் காடுகளில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள் (Under the Forest) என்று பிரித்து உள்ளார்கள். இரண்டிலும் பல பல தகவல்கள் நமக்கு தெரிந்த சில, தெரியாதது பல என்றே கூற வேண்டும்.



சுற்றுச்சூழலை பாதுகாக்க பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமைகளின் ஒன்று. நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் இந்த ஐந்தை சுற்றி தான் சுற்றுச் சூழல் செயல்படுகிறது. முதலில் நிலத்தில் விதை மட்டும் விதைத்தோம். தற்போது பிளாஸ்டிக் என்ற எமனை சேர்த்து புதைப்பதால் நிலத்தில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு விட்டது என்பதை லட்சக்கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கலந்தால் கடல் உயிரினங்களின் நிலையைக் காட்டியது பலார் ‌என்று கன்னத்தில் அறைந்தது போல் அமைந்து இருந்தது.



தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு விஷத்தன்மை மண்ணையும் நீரையும் ஒரு சேர நாசமாக்குகிறது. நிலத்தில் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்துவதன் விளைவாக மனிதனின் நோயின் தன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் Hydroponics மூலமாக தண்ணீரில் மட்டுமே இயற்கை வளரும் புதிய தகவல்கள் மற்றும் விண்வெளி துணுக்குகள் ஆங்காங்கே பலகைகளில் வைத்துள்ளார்கள்.


நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான்.ஆதலால் மனிதனின் உடல் வடிவமாக மாயக் கண்ணாடிகளில்(Magic Mirror) கையை அசைத்தால் நம்‌ உடலில் ஏற்படும் மாற்றங்கள் உட்கொள்ளும் சத்துக்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.


இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்களை அழித்து மின்னணு கழிவுகள் அதிகரித்து வருகின்றன. மனித உயிரினம் மட்டும் பெருகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பிற விலங்கினங்கள், தாவர வகைகள் குறைந்தும், அரிதாகியும் வருகின்றன. பல உயிரினங்கள் அவை இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் முன்பே அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதை உணர முடிகிறது. பல விழிப்புணர்வு நாம் ஏற்படுத்தி உலகம் எங்கும் பார்த்தாலும் இது போல பல எண்ணற்ற இயற்கை பாதிப்பு இன்னும் அதிகரித்து வருகிறது. இயற்கைப் பாசன முறையிலிருந்து விலகிச் சென்றதன் விளைவு, நிலப் பயன்பாட்டின் மாற்றம், காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கலந்த புகை, பெருமளவில் வெளியேற்றப்படும் கழிவு நீர் போன்றவை புவி மண்டலத்தை வெப்பமடையச் செய்வதை Sea of Consumption, The Endless Wardrobe மற்றும் The endless Refrigerator மூலமாக தெரிவிக்கின்றன. உதாரணமாக உங்கள் வீடு எரிகிறது எந்த பொருட்களை காப்பாற்றுவீர்கள் என்பது போல ஒவ்வொரு கேள்வி பதில்கள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் கடைசியில் சதவீதமாகவும் (Score Board) காணமுடிகிறது.



இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மற்றும் இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே ஓர் பகுதி விழிப்புணர்வு இந்த துபாய் எக்ஸ்போ 2020 Terra Sustainability Pavilion என்று கூறினால் மிகையாகாது.


இது போல மற்ற பெவிலியன்களும் 2021 அக்டோபர் மாதத்தில்,எதிர்கால உலகத்தை சிறந்ததாக்குவோம் என்ற வாசகத்துடன் முடிவடைகிறது எக்ஸ்போ 2020 துபாய்!!



--முனைவர் ஸ்ரீ ரோகிணி, துபாய்--

srirohini.mr@gmail.com


53 views0 comments

Recent Posts

See All
bottom of page