top of page

ஏப்ரல் - April





(01- ஏப்ரல்)

முட்டாள்கள் தினம்.


😜 முட்டாள்கள் தினம, ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது.


😜 பின்னர் 1562ஆம் ஆண்டளவில் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்புமுறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்புமுறையை கிரகரி நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.


😜 ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாட தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக ஆரம்பமாயிற்று.


(01-ஏப்)

முகமது ஹமீத் அன்சாரி.


👉 முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி அவர்கள் 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.


👉 இவர் 1961ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.


👉 ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு 1984ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------


(02-ஏப்)

சர்வதேச சிறுவர் புத்தக தினம்.


📚 சர்வதேச சிறுவர் புத்தக தினம் 1967ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


📚 வாழ்நாள் முழுவதும் சிறுவர்களுக்காக கதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவரின் பிறந்த நாளும் (ஏப்ரல் 2, 1805) இந்நாளில் நினைவு கூறப்படுகிறது.


📚 மேலும், புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் போன்ற நோக்கத்திற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.


💖 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


💖 ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


💖 ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும்? எந்த முறையில் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


(02-ஏப்)

வ.வே.சுப்பிரமணிய ஐயர்.


🏁 சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு.ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரியில் பிறந்தார்.


🏁 இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம், அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.


🏁 இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.


🏁 இவர் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.


🏁 இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், 'கம்பராமாயணம் - எ ஸ்டடி', மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.


🏁 தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் 1925ஆம் ஆண்டு மறைந்தார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------


(03-ஏப்)

சாம் மானெக்ஷா.


👮 இந்திய ராணுவ வரலாற்றில் சாதனை படைத்த 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக்ஷா 1914ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சாம் ஹோர்மூஸ்ஜி பிரேம்ஜி ஜம்ஷெட்ஜி மானெக்ஷா ஆகும்.


👮 இவர் 1934ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 2-ம் உலகப் போரின் போது (1942) ஜப்பானின் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய இவரது உடலில் 9 குண்டுகள் பாய்ந்தன.


👮 படுகாயம் அடைந்தபோதும் தொடர்ந்து போராடி வெற்றிகண்டார். இவரை பாராட்டி பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி டி.டி.கோவன், தனது மிலிட்டரி கிராஸ் பதக்கத்தை கழற்றி அங்கேயே அணிவித்தார்.


👮 பிறகு பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். வீரர்கள் இவரை 'சாம் பகதூர்' (துணிச்சல்காரர்) என்றனர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1948ஆம் ஆண்டு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை தனது அசாதாரணமான போர்த் திறனால் தோற்கடித்தார்.


👮 1962ஆம் ஆண்டு சீனப் போரில் இந்தியா பின்வாங்கியபோது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார்.


👮 1969ஆம் ஆண்டு இந்தியாவின் ராணுவத் தலைமை தளபதியானார். இவருக்கு 1968ஆம் ஆண்டு பத்ம பூஷண், 1972ஆம் ஆண்டு பத்ம விபூஷண், 1973ஆம் ஆண்டு பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது.


👮 40 ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என படிப்படியாக பல ரேங்க் பெற்ற சாம் மானெக்ஷா 2008ஆம் ஆண்டு மறைந்தார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------


(04-ஏப்)

நிலக்கண்ணிகள் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம்.


💣 நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புறங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.


💣 நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக்கூறவும் இத்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.


(04-ஏப்)

பெ.சுந்தரம் பிள்ளை.


✍ நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார்.


✍ இவர் மனோன்மணீயம் என்ற நூலை 1891ஆம் ஆண்டு எழுதினார். அதில் இடம்பெற்ற நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970ஆம் ஆண்டு அறிவித்தது.


✍ பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை தி டென் தமிழ் ஐடியல்ஸ் என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.


✍ இவர் F.M.U., F.R.H., S.M.R.A.S., ராவ்பகதூர் போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளார். பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவரும், சிறந்த தமிழ் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை 1897ஆம் ஆண்டு மறைந்தார்.



மாகன்லால் சதுர்வேதி.


🏁 விடுதலை போராட்ட வீரான பண்டிட் மாகன்லால் சதுர்வேதி, 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.


🏁 திலகர், காந்தி ஆகியோரின் முழக்கங்கள் இவருக்குள் விடுதலை வேட்கையை தூண்டியது. இவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.


🏁 இவர் 1943ஆம் ஆண்டு ஹிம கிரீடினி படைப்புக்காக தேவ் புரஸ்கார் விருது பெற்றார். 1955ஆம் ஆண்டு இவரது ஹிம தரங்கிணி கவிதைத் தொகுப்பு இந்தி மொழிக்கான முதல் சாகித்ய அகாடமி விருதை வென்றது.


🏁 இந்தி இலக்கிய ஆர்வலர்களால் பண்டிட்ஜி என்று அன்போடு அழைக்கப்பட மாகன்லால் சதுர்வேதி 1968ஆம் ஆண்டு மறைந்தார்.


🏁 இவரை நினைவுக்கூறும் விதமாக மாகன்லால் சதுர்வேதி புரஸ்கார் என்ற விருதை சிறந்த கவிஞர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு 1987ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------



0 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page