top of page

மார்ச் 15,16

(16-மார்ச்) *தேசிய தடுப்பூசி தினம்*

போலியோவை நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.

அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.


*********************************************************************************************************************

(16-மார்ச்)

*முனைவர் இரா.திருமுருகன்*


சிறந்த தமிழ் அறிஞரும், இயற்றமிழ், இசைத்தமிழில் வல்லவருமான முனைவர் இரா.திருமுருகன் 1929ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் மீதான பற்றால் தன் பெயரை திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.

தமிழ் வளர்ச்சிக்காகவே பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். புதுவையில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று குரல் கொடுத்தார் இவர்.




தமிழுக்கு புதிய இலக்கணம் உருவாக்குவதிலும், இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இலக்கணச்சுடர், இயல், இசை செம்மல், முத்தமிழ் சான்றோர், நல்லாசிரியர், மொழிப்போர் மறவர், பாவலர் அரிமா, கலைச்செல்வம் உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் பட்டங்களை பெற்றுள்ளார்.

இலக்கணக் கடல் எனப் புகழப்பட்டவர். இவர் 55 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது 40 ஆண்டுகால தமிழ்ப் பணிகள், தமிழியக்கம் என்ற பெயரில் வெளியான நூல்களில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் வளர்ச்சி, தமிழர் நலனுக்காகவே இறுதிவரை பணியாற்றிய இரா.திருமுருகன் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.


*********************************************************************************************** *ரிச்சர்டு ஸ்டால்மன்*

ஜிஎன்யூ மென்பொருளை அறிமுகப்படுத்திய ரிச்சர்டு மாத்யூ ஸ்டால்மன் 1953ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார்.

இவர் 16 வயதில் தனது முதல் புரோகிராமை ஐபிஎம் நியூயார்க் அறிவியல் மையத்தில் ஐபிஎம்-360 கணினியில் எழுதினார். எம்ஐடியின் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தில் (ஏஐஎல்) புரோகிராமராக இருந்தார்.

மென்பொருள் பயன்பாட்டை மேம்படுத்தினார். சுதந்திரமாக கணினியைப் பயன்படுத்துவது என்பதை இலக்காகக் கொண்டு சுதந்திர மென் பொருள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இவர் மேம்படுத்திய ஜிஎன்யூ பிராஜக்ட்டை 1983-ல் வெளியிட்டார்.


****************************************************************************************************


(15-மார்ச்)

*உலக நுகர்வோர் உரிமைகள் தினம்*

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ஆம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது, அதன்மீது நடவடிக்கை எடுத்தல், சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

இத்தினம் அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினமாகும். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவ்வேளையில் நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில், இத்தினம் 1983ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.


***********************************************************************************************************


(15-மார்ச்)

*பால் ஹெயிஸ்*

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான பால் ஹெயிஸ் 1830ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு அருகே உள்ள ஹெலிகெய்ஸ்ட் என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் பிரபல இலக்கியவாதிகளை சந்தித்த பிறகு இவரது முதல் கவிதை 1848ஆம் ஆண்டு வெளியானது. சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய முதல் நூலை இவரது தந்தை வெளியிட்டார்.

1867ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளில் ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார். இவரது புகழ் மெல்ல மெல்லப் பரவி உலகம் முழுவதும் பிரபலமானார். ஏராளமான கவிதைகள், 120 நாவல்கள், 177 சிறுகதைகள், 60 நாடகங்களை எழுதியுள்ளார்.

'தி ஃப்யூரி' சிறுகதை இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுத்தாளர்கள் அனைவரையும் இணைத்து 'டை குரோகடைல்' என்ற இலக்கிய அமைப்பை தொடங்கினார்.

இலக்கியத்தின் பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்த இவருக்கு 1910ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த இலக்கியவாதியும், ஜெர்மனியின் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பால் ஹெயிஸ் 1914ஆம் ஆண்டு மறைந்தார்.


*********************************************************************************************************************

9 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page