top of page

(01-31)January

(01-சன) *சத்தியேந்திர நாத் போஸ்.* இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் 1974ஆம் ஆண்டு மறைந்தார். ---------------------------------------------------------------------------------------- (02-சன) *எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்.* இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் 1940ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய கணக்கு ஆசிரியர் கணிதத்தை விளையாட்டு போல் கற்றுத்தந்தார். அதன் மூலம் இவர் கணக்கைப் பார்த்து பயந்து ஓட அவசியம் இல்லை என்பதை உணர்ந்தார். கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சிறந்த புள்ளியியலாளரான சி.ஆர்.ராவ் தலைமையில் ஆய்வு செய்து, 1963ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். இவர் கணிதம், புள்ளியியல் நிகழ்தகவு, பெரிய விளக்கங்கள் கோட்பாடுகளை (Theory of Large Deviations) உருவாக்கினார். வகையீட்டு சமன்பாடுகள் (Differential Equations ) குறித்த கோட்பாடுகளை கண்டறிந்தார். இவரது 'ஸ்டொகாஸ்டிக் பிராஸசஸ்' என்ற நூல் கணித உலகில் பெரும் வரவேற்பை பெற்றது. நிகழ்தகவு கோட்பாட்டில் அடிப்படை பங்களிப்புகளுக்காக 'ஏபெல்' பரிசு (2007), பத்ம பூஷண் விருது (2008), அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், இன்ஃபோசிஸ் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் மற்றும் பதக்கங்களைப் பெற்றுள்ளார். -------------------------------------------------------------------------------------------------- (03-சன) *வீரபாண்டிய கட்டபொம்மன்.* ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை. 1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்சன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லிய ஜாக்சன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்துஇ பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார். இந்த சந்திப்பின்போது வரி செலுத்துமாறு ஜாக்சன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள். இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன் என கம்பீரத்துடன் முழங்கிய இவர் 1799ஆம் ஆண்டு கயத்தாறில் அக்டோபர் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். *வேலு நாச்சியார்.* தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த சக்கந்தி என்ற ஊரில் பிறந்தார். இவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரையேற்றம், யானையேற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16-வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார். வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்து மன்னர் வடுகநாதரை தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை கைப்பற்றி விட்டார்கள். பிறகு ராணி சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார். சில ஆண்டுகாலம் கழித்து ஆங்கிலேயரை தாக்க உரிய நேரம் பார்த்து வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தி கோட்டையைக் கைப்பற்றினர். சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தப்போது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான். ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாக வேலு நாச்சியார் பதவியேற்றார். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் 1796ஆம் ஆண்டு மறைந்தார். *சாவித்ரிபாய் புலே.* சமூக சீர்திருத்தவாதியும், கவிஞருமான சாவித்ரிபாய் புலே 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்திலுள்ள நைகான் என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் தன்னுடைய கணவருடன் இணைந்து பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார். 1846ஆம் ஆண்டு பெண்கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவினார். பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1852ஆம் ஆண்டு மஹிளா சேவா மண்டலை தொடங்கினார். தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். கணவரின் மறைவுக்குப் பிறகும், சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். இவர் சிறந்த கவிஞரும்கூட. 1892ஆம் ஆண்டு கவிதை நூலை வெளியிட்டார். இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை என அனைத்து களங்களிலும் கவிதைகள் எழுதி தனிமுத்திரை பதித்தார். இவர் 1897ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------ (04-சன) *லூயி பிரெயில்.* இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டிருக்கும்போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார். இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு விழி இழந்த இளைஞருக்கான நிறுவனத்தில் பிரெயில் சேர்க்கப்பட்டார். லூயி படிக்கும் நிறுவனத்திற்கு பிரான்ஸ் ராணுவத்தில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ் பார்பியா என்பவர் வருகை தந்து எந்த ஒளியையும் பயன்படுத்தாமல் தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறையை (நைட் ரைட்டிங்) விளக்கினார். இது விரல்களால் பேப்பரைத் தடவிப்பார்த்து எண்ணங்களை பரிமாற்றம் செய்யும் முறை. பிரெயில், இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொண்டு, அதில் சில முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார். கடைசியாக புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துக்களை புரிந்துகொள்ளும் பிரெயில் முறையை உருவாக்கினார். பிரெயிலின் இந்த புதிய முறையை விளக்கும் முதல் புத்தகம் 1820ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை. 1932ஆம் ஆண்டு கூடிய சர்வதேச மாநாட்டில் தான் பிரெயில் முறைக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கியது. இவர் 1852ஆம் ஆண்டு மறைந்தார். *ஜே.சி.குமரப்பா.* வளம் கொடுக்கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்த ஜே.சி.குமரப்பா 1892ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். இவர் இந்தியாவின் ஏழ்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்திய மக்களின் இரத்தத்தை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசு சுரண்டுகிறது என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையை காந்திஜியின் முகவுரை வேண்டி அவருக்கு அனுப்பினார். இதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது. இவருடைய நூல்கள் பலவற்றுக்கு காந்திஜி முன்னுரை எழுதியுள்ளார். இவர் 1960ஆம் ஆண்டு மறைந்தார். *ஐசக் நியூட்டன்.* ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளருமான ஐசக் நியூட்டன் 1643ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிறந்தார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் ஐசக் நியூட்டன். இவர் இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் என்னும் துறைக்கு வித்திட்டார். ----------------------------------------------------------------------------------------- (05-சன) *ஷாஜகான்.* இந்தியாவில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஹாபுதீன் முகமது ஷாஜகான். 1627ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து இவர் முகலாய பேரரசின் மன்னராக அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது இவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது. 433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள ஒரு நிலக்குழிக்கு ஷாஜகான் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1666ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி மறைந்தார். *ரா.கிருஷ்ணசாமி நாயுடு.* விடுதலைப் போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு 1902ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புது.ராமச்சந்திரபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம், 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகம், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் இயக்கம் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்ந்தார். 1959ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினராகப் பதவி வகித்தார். நேர்மையான, எளிமையான, பண்பான அரசியல் தலைவராக தனது இறுதிமூச்சு வரை வாழ்ந்த இவர் 1973ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------- (06-சன) *ஏ.ஆர்.ரகுமான்.* இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 1967ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார். இவர் 1992ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே தேசிய விருதை பெற்றுத் தந்தது. இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான ஆஸ்கார் விருதை 2009ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. இவர் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தமிழக திரைப்பட விருது, மலேசிய விருது, கோல்டன் குளோப் விருது, கிராமிய விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். *கபில் தேவ்.* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1959ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சண்டிகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் கபில் தேவ் ராம்லால் நிகாஞ்ச். இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக காணப்பட்டது. பிறகு ஹரியானா அணியின் நிரந்தர ஆட்டக்காரரானார். தொடர்ந்து இரானி டிராஃபி, துலீப் டிராஃபி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார். இவரது தலைமையிலான இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது சாதனைகளை கௌரவித்து இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற இவருக்கு லெப்டினென்ட் கர்னல் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது. *கலீல் ஜிப்ரான்.* ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட கலீல் ஜிப்ரான் 1883ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி லெபனான் நாட்டில் பஷ்ரி என்ற நகரில் பிறந்தார். இவர் படிக்கும் போதே கல்லூரி கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கட்டுரை வடிவிலான கவிதைகள் அடங்கிய தி ப்ராஃபெட் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. லெபனானில் ஜிப்ரான் அருங்காட்சியகத்தில் இவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் திகழ்ந்த கலீல் ஜிப்ரான் 1931ஆம் ஆண்டு மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------- (07-சன) *சடாகோ சசாகி.* ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வீச்சால், இரத்த புற்றுநோயினால் சசாகி பாதிக்கப்பட்டார். சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவருடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினார். அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினார். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தார், பின் எஞ்சிய கொக்குகள் அவரின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவரின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில், 1955ஆம் ஆண்டு மறைந்தார். *சரோஜாதேவி.* அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் சரோஜாதேவி 1938ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார். சரோஜாதேவி சினிமாத் துறையில் முதன் முதலாக ஹொன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளிவந்த மகாகவி காளிதாஸ் என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. 1958 ஆம் ஆண்டு மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தை தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படமாகும். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ, மற்றும் பத்ம பூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழக அரசால் எம்.ஜி.ஆர் விருது, ஆந்திர அரசால் என்.டி.ஆர் தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது என மேலும் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். *தங்கம்மா அப்பாக்குட்டி.* தமிழுக்கு தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி 1925ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை என்ற ஊரில் பிறந்தார். தமிழையும் சைவ சமயத்தையும் முறையாக கற்றுஇ 1952-ல் பால பண்டிதராகத் தேர்ச்சி பெற்றார். 1958-ல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டம் பெற்றார். இவரது கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்ய மண்டலப் பரிசு கிடைத்தது. யாழ் பல்கலைக்கழகம் 1998-ல் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியது. சிவத்தமிழ்ச் செல்வி, திருவாசகக் கொண்டல், செஞ்சொற் செம்மணி, சிவஞான வித்தகி, துர்க்கா புரந்தரி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களையும் பல்வேறு விருதுகள், பரிசுகள் மற்றும் பதக்கங்களையும் பெற்றவர். தமிழுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி தன்னுடைய 83-வது வயதில் 2008ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------- (08-சன) *ஸ்டீபன் ஹாக்கிங்.* கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார். இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் அண்டவியலும் (Cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (Quantum Gravity) ஆகும். 21 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பின் மூலம் மற்றவர்களுடன் உரையாடினார். 1986ஆம் ஆண்டு அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இவர் 'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இவர் 2018ஆம் ஆண்டு மறைந்தார். *ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ்.* உயிரினங்களின் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவருமான ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் 1823ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் அஸ்க் (USK) நதி அருகில் உள்ள கென்சிங்டன் காட்டேஜ் என்ற இடத்தில் பிறந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். பின்பு சுயமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டார். 1844ஆம் ஆண்டு லீசெஸ்டர் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. அங்கு ஹென்றி வால்டர் பேட்ஸ் என்பவரை சந்தித்தார். இருவருமே முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள், சுயமாக கற்றவர்கள், வண்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். வாலஸ் தனியாக பயணம் மேற்கொண்டு போகும் இடங்களில் எல்லாம் ஏராளமான தாவரங்கள், விலங்கினங்களின் மாதிரிகளை சேகரித்தார். 1852ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு திரும்பி வரும் வழியில் தீ விபத்து ஏற்பட்டதால், சேகரித்து வைத்திருந்த மாதிரிகளும் கப்பலோடு போய்விட்டது. நாடு திரும்பியவர் 2 ஆண்டுகள் தனது அனுபவங்கள் குறித்து கட்டுரைகள் எழுதுவதில் செலவிட்டார். எட்டு வருடங்கள் தொடர்ந்து பறவைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள் என 1,25,000-க்கும் அதிகமான மாதிரிகளை சேகரித்தார். உயிரி புவியியலின் தந்தையாக போற்றப்படும் ஆல்ஃப்ரெட் வாலஸ் 1913ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------- (09-சன) *ஹர் கோவிந்த் கொரானா.* மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான கொரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத Coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்காக 1968ஆம் ஆண்டு இவருக்கும் நிரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மேலும் மரபுக்குறியீடு (Genetic Code), எஸ்கிரிஷியா கோலி (Escherichia Coli) என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கம் போன்ற ஆய்வுகளில் இவருடைய குழுவினரும் ஈடுபட்டனர். அதன்பின் இந்த நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை இவர்கள் செயற்கையாக உருவாக்கினர். புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார். முதன்முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்த அறிவியல் மேதை ஹர் கோவிந்த் கொரானா 2011ஆம் ஆண்டு மறைந்தார். *டி.ஆர்.இராமச்சந்திரன்.* 1917ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் டி.ஆர்.இராமச்சந்திரன் கரூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது. ---------------------------------------------------------------------------------------------------------------- (10-சன) *குருதயாள் சிங்.* பிரபல பஞ்சாப் இலக்கியவாதி குருதயாள் சிங் 1933ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பாயினி ஃபதேஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு "பாகன்வாலே" என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் சகி பூல், குட்டா தே ஆத்மி பெகனா பிந்த்' உள்ளிட்ட 12 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பத்மஸ்ரீ, ஷிரோமணி சாஹித்கார் பஞ்சாப் சாகித்ய அகாடமி விருது”” சோவியத் லாண்ட் நேரு விருது உள்ளிட்ட ஏறக்குறைய 17 விருதுகளையும் பெற்றுள்ளார். ஞானபீட விருது பெற்ற இவர் 2016ஆம் ஆண்டு மறைந்தார். *கே.ஜே.யேசுதாஸ்.* 1940ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் எட்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். --------------------------------------------------------------------------------------------------------------- (11-சன) *ராகுல் டிராவிட்.* இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார். 1996ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக கிரிக்கெட் ஆடத் தொடங்கிய இவர், அக்டோபர் 2005ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். டிராவிட் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் ஆகிய விருதுகளை தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். இவர் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். நீண்ட நேரத்திற்கு நின்று பேட்டிங் செய்யக்கூடிய திறனைப்பார்த்து இவரை தி வால் என்று அழைப்பார்கள். --------------------------------------------------------------------------------------------------------------- (12-சன) *சுவாமி விவேகானந்தர்.* இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்' மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது. 1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திற்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா'. இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் 1902ஆம் ஆண்டு மறைந்தார். *டாக்டர் பகவான் தாஸ்.* சுதந்திரப் போராட்ட வீரர் ௫டாக்டர் பகவான் தாஸ் 1869ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்தார். இவர் கல்வியிலும், எழுத்துப் பணிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பல்வேறு மதங்கள்7 தத்துவங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படித்தார். மேலும் காங்கிரஸில் இணைந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலேய ஆட்சி முறை காரணமாக மிக மோசமான நிலையில் இருந்துவந்த இந்திய மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டை காக்க வேண்டும் என உறுதியேற்றார். இவருக்கு 1955ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தத்துவமேதையுமான டாக்டர் பகவான் தாஸ் 1958ஆம் ஆண்டு மறைந்தார். *ஜெப் பெசோஸ்.* அமேசான் என்னும் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ் 1964ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். தொழிலதிபர் மற்றும் கொடையாளரான இவர், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். ஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்தின் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர் ஆவார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் நிறுவனம் அறிவித்துள்ளது.1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நூல்களை இணைய வழியில் விற்கும் தொழிலில் ஈடுபட்டார். வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 ஆம் ஆண்டு வாங்கிய இவர்இ புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். புளூ ஆரிஜின் நிறுவனம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திற்கும், சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது. -------------------------------------------------------------------------------------------------------- (12-சன) *தேசிய இளைஞர் தினம்.* ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1984ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமானது சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இந்நாளில் இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவரின் சிந்தனைகள் இளம் தலைமுறையினருக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருப்பதால், இவரின் பிறந்தநாளில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கதாகும். *புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம்.* பல்வேறு நாடுகளுக்கு சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. *முக்கிய நிகழ்வுகள்..* 1908ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தொலை தூரத்துக்கான வானொலி செய்தி, முதல் முறையாக ஈஃபில் கோபுரத்தில்(Eiffel Tower) இருந்து அனுப்பப்பட்டது. -------------------------------------------------------------------------------------------------------- (13-சன) *ஆர்.பாலச்சந்திரன்.* கவிஞர் பாலா என அழைக்கப்படும் ஆர்.பாலச்சந்திரன் 1946ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் சாகித்ய அகாடமியின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்தார். சர்ரியலிசம், பாரதியும் கீட்சும் ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு இவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும். கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்திறமை கொண்ட இவர் 2009ஆம் ஆண்டு மறைந்தார். *வில்லெம் வீன்* வில்லெம் வீன் என்றழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன் 1864ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவர் வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியவர். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றார். இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார். *ராகேஷ் ஷர்மா.* விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கியது. இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் இவர் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். ராகேஷ் சர்மா அவர்களின் பணிகளை பாராட்டி அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. ---------------------------------------------------------------------------------------------------------- (14-சன) *நரேன் கார்த்திகேயன்.* தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். உலக மோட்டார் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டுபத்மஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது. *க.வெள்ளைவாரணனார்.* ✎ சித்தாந்தச் செம்மல் என அழைக்கப்படும் தமிழறிஞரான க.வெள்ளைவாரணனார் 1917ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் பிறந்தார். ✎ இவர் இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களையும் அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தார். இவர் இசைத்தமிழ் என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். ✎ இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத்தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத்தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களை கொண்டுள்ளது. ✎ தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 1985ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கியது. ✎ தமிழ்மாமணி என பாராட்டப்பட்ட க.வெள்ளைவாரணனார் 1988ஆம் ஆண்டு மறைந்தார். *ஜெ.வீரநாதன்.* 1960ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழக எழுத்தாளர் ஜெ.வீரநாதன் பிறந்தார். பிரி-பிரஸ் ஒரு அறிமுகம், பேஜ் மேக்கர், இண்டர்நெட்-ஒரு சிறு அறிமுகம், விசிட்டிங் கார்டு 1000 போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய *'சித்திரமும் மவுஸ் பழக்கம்'* என்னும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. *கே.முத்தையா.* இதழாளர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட கே.முத்தையா 1918ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தார் முத்தையா தனது 60 ஆண்டுகால அரசியல் பணியிலும், இதழாளர் வாழ்விலும் சாதனை படைத்துள்ளார். ஜனசக்தி மற்றும் செம்மலர் இதழ்களுக்கு பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.விடுதலைப் போராட்ட வீரரான கே.முத்தையா 2003ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மறைந்தார். *ஹொன்னப்ப பாகவதர்.* கர்நாடக இசை மற்றும் வாய்ப்பாட்டு கலைஞரான ஹொன்னப்ப பாகவதர் 1915ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். தமிழ்நாட்டில் 1937ஆம் ஆண்டு சேலம் சங்கீத ரசிகர்கள் சபா இவருக்கு பாகவதர் பட்டத்தை வழங்கியது. சிறந்த நடிகர் விருது, இன் கர்நாடக சங்கீத நாடக அகாதமி விருது, மத்திய சங்கீத நாடக அகாதெமி 8விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற இவர் 1992ஆம் ஆண்டு அக்டோபர் 02ஆம் தேதி மறைந்தார். *எல்.கே.துளசிராம்.* விடுதலைப் போராட்ட வீரரான எல்.கே.துளசிராம் 1870ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார். இவர் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.சௌராட்டிரர் சமுகத்தில் கே.வி.இராமாச்சாரிக்கு அடுத்தபடியாக துளசிராம் இரண்டாவது பட்டம் பெற்றவர் ஆவார். நாட்டு மக்களுக்காக இவர் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாகஇ 1930ஆம் ஆண்டு இராஷ்ட்ர பந்து எனும் பட்டம் வழங்கப்பட்டது.இவர் 1952ஆம் ஆண்டு ஜனவரி 04ஆம் தேதி மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------------- *மார்ட்டின் லூதர் கிங்.* அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன்முதலாக குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் 1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவர் காந்திய வழியில் வன்முறையற்ற அறப்போராட்டங்களை நடத்தியதால், அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். 1964ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, மார்ட்டின் லூதர் கிங்கிற்கு வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மார்ட்டின் லூதர் கிங் 1968ஆம் ஆண்டு மறைந்தார். *எட்வர்டு டெல்லர்.* ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமெரிக்க இயற்பியல் ஆராய்ச்சியாளர் எட்வர்டு டெல்லர் 1908ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார். இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, டென்மார்க்கு சென்று விஞ்ஞானி நீல்ஸ் போரிடம் அணுவியல் குறித்து கற்றார். இவர் விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமோவுடன் இணைந்து அணுக்கரு இயற்பியல் தெர்மோ நியூக்ளியர் இயக்கங்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவரது முக்கிய பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு 1952ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இவர் கௌரவம் வாய்ந்த, பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த எட்வர்டு டெல்லர் 2003ஆம் ஆண்டு மறைந்தார். *காசாபா தாதாசாகேப் சாதவ்.* இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தடகள வீரர் காசாபா தாதாசாகேப் சாதவ் 1926ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார். இவருக்கு 1993ஆம் ஆண்டு சிவ சத்ரபதி விருதும்இ 2001ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 1952ஆம் ஆண்டு மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------- (16-சன) *டயேன் ஃபாசி.* அமெரிக்க விலங்கியலாளர் டயேன் ஃபாசி 1932ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார். இவர் கொரில்லாக்களுடன் நெருங்கிப் பழகி ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு அதை கட்டுரைகளாக எழுதினார். இவரின் 'கொரில்லாஸ் இன் தி மிஸ்ட்' என்ற நூலானது விற்பனையில் உலக அளவில் சாதனை படைத்தது. இப்புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் வெற்றி பெற்று, இவருக்கு மேலும் புகழைப் பெற்றுத் தந்தது.கொரில்லாக்களின் பாதுகாப்புக்கு நிதியுதவி செய்ய 'டிஜிட் ஃபண்ட்' என்ற அமைப்பை இவர் தொடங்கினார். மலைப்பகுதி கொரில்லாக்களின் பாதுகாப்புக்காக 20 ஆண்டுகளுக்கு மேல் பாடுபட்டார். கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த டயேன் ஃபாசி 1985ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மறைந்தார்.

-------------------------------------------------

(18-சன) *குமாரசுவாமி புலவர்.* தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும் இவர் நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். கவிப் பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்துவது என பலவற்றில் திறமை பெற்றிருந்ததால் 'புலவர்' என அழைக்கப்பட்டார். எழுத்தாளரான ஆறுமுக நாவலரின், வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்யாலயம் என்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட இவர், வாழ்நாள் முழுவதும் முனைப்புடன் பணியாற்றி அதை உயர்கல்வி நிறுவனமாக வளர்ச்சி அடையச் செய்தார். 1913ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு சார்பில் பாதிரியார் சாண்டிலர் தலைமையில் தயாரிக்கப்பட்ட தமிழ் அகராதியை ஆராய்ந்து, திருத்தும் பொறுப்பை இவரிடம் வழங்கப்பட்டது. இவர் கூறிய அனைத்து திருத்தங்களும் அதில் சேர்க்கப்பட்டன. நகுலமலைக் குறவஞ்சி நாடகம், ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, ஆத்திச்சூடி வெண்பா, சிவசேத்திரம் விளக்கம் உள்ளிட்டவற்றை திருத்த உரையுடன் திறனாய்வு செய்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார். ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சமயச் சொற்பொழிவாளர் என பன்முகத் திறன் கொண்ட குமாரசுவாமி புலவர் 1922ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------- (19-சன) *சீர்காழி கோவிந்தராஜன்.* கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியில் பிறந்தார். பி.எஸ்.செட்டியார், அவர்களின் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். இவர் இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார். 1951ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்களை வென்றார். சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார். தன் இனிமையான குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 1988ஆம் ஆண்டு மறைந்தார். *ஜேம்ஸ் வாட்.* பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் அதிகம். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பின்பு இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவருக்கு 1764ஆம் ஆண்டு தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்றம் செய்தார். இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. அதற்கு காப்புரிமையையும் பெற்றார். இவர் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார். இவர் பொறியாளர் மேத்யூ போல்டனுடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்துள்ளார். எனவே தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது. மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்கு தந்தவர் இவரே. இயற்கையான நீராவி சக்தியை கொண்டு மகத்தான பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1819ஆம் ஆண்டு மறைந்தார். *ஜி.சுப்பிரமணிய ஐயர்.* சமூக சிந்தனையாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் 1855ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தார். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை 1882ஆம் ஆண்டு தொடங்கினார். 'தி ஹிந்து' என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் துணையாசிரியராக மகாகவி பாரதியார், குருமலை சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் பணிபுரிந்தனர். இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவரான ஜி.சுப்பிரமணிய ஐயர் 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------- (20-சன) *பஸ் ஆல்ட்ரின்.* அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான பஸ் ஆல்ட்ரின் 1930ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள கிளென் ரிட்ச்சில் பிறந்தார். இவரின் இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் ஆகும். இவர் பஸ் (Buzz) என்ற பெயரிலேயே பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். எனவே, இவர் தனது பெயரை 'பஸ் ஆல்ட்ரின்' என அதிகாரப்பூர்வமாக 1988ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார். 1963ஆம் ஆண்டு நாசா விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முதலாக சந்திரனுக்கு மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் நிலவை நோக்கி பயணம் செய்த இவர், சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமைக்குரியவர். *ஜோஹன்னஸ் ஜென்சன்.* தலைசிறந்த எழுத்தாளரான ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 1873ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி டென்மார்க்கின் ஃபார்சோ நகர் அருகே உள்ள ஹிம்மர்லேண்ட் கிராமத்தில் பிறந்தார். பல அறிவியல் துறைகளை உள்ளடக்கிய மருத்துவ படிப்பு படிக்கும்போது, இவருக்கு படைப்புக் களத்தில் ஆர்வம் அதிகமானதால் இறுதியில், எழுத்தாளராக வேண்டும் என தீர்மானித்தார். 1898ஆம் ஆண்டு முதல் 1910ஆம் ஆண்டு வரை வெளிவந்த 'ஹிம்மர்லேண்ட் ஸ்டோரிஸ்' (Himmerland Stories) என்ற கதைத்தொடர் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுதிய கொன்ஜென்ஸ் ஃபால்ட் (தி ஃபால் ஆஃப் தி கிங்) என்ற வரலாற்று நாவல் டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்று போற்றப்படுகிறது. பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் 'டென் லாங்கெ ரெஜ்சி' என்ற தலைப்பில் 6 நூல்களை எழுதியுள்ளார். 1944ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றார். கவிதைக் களத்தில் சிறப்பாக பங்காற்றிய ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 1950ஆம் ஆண்டு மறைந்தார். *ஆந்த்ரே-மேரி ஆம்பியர்.* 1775ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் இயற்பியலாளரும், கணிதவியலாளருமான ஆந்த்ரே-மேரி ஆம்பியர் பிரான்சில் பிறந்தார். மின்னோட்டத்திற்கான அனைத்துலக முறை அலகிற்கு(SI) இவர் நினைவாக ஆம்பியர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் மரபார்ந்த இயக்க மின்னியலை(Classical Electrodynamics) நிறுவினார். ஆம்பியர் விதியை கண்டறிந்த ஆந்த்ரே-மேரி ஆம்பியர் 1836ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------- (21-சன) *எம்.ஆர்.எஸ்.ராவ்.* இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் 1948ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் எம்.ரங்கசாமி சத்யநாராயண ராவ் ஆகும். இவர் சர்வதேச பத்திரிக்கைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் குரோமட்டின் உயிரியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விளக்கங்கள் 'செல்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசால் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் (2010) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் பல பதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார். *பெலிக்ஸ் ஹாஃப்மேன்.* ஆஸ்பிரின் (Asprin) மருந்தைத் தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டுவலியால் அவதிப்பட்டதை பார்த்து, படித்து முடித்ததும் அதற்கான மருந்தை 1897ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட ஆஸ்பிரின் மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறை மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையில் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது. இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு விற்பனையான மருந்து ஆஸ்பிரின் ஆகும். இம்மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது. இதன் வேதியியல் பெயர் அசிடைல்சாலிசிலிக் (Acetylsalicylic) ஆசிட் ஆகும். மருத்துவ மேதை பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1946ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------- (22-சன) *தி.வே.கோபாலையர்.* தமிழ் நூற்கடல் என்று போற்றப்பட்ட தி.வே.கோபாலையர் 1926ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமைமிக்கவர். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீரசோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். செந்தமிழ்க் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், பொங்கு தமிழ் விருது போன்ற ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். தி.வே.கோபாலையர் இருந்தால் போதும் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும் என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்ட இவர் 2007ஆம் ஆண்டு மறைந்தார். *ஜார்ஜ் கோர்டன் பைரன்.* பிரிட்டனின் மிகச்சிறந்த கவிஞரான ஜார்ஜ் கோர்டன் பைரன் 1788ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவர் Childe Harold's Pilgrimage என்னும் தனது சுயசரிதைக் கவிதையை வெளியிட்டார். வெளிவந்த உடனே இது மகத்தான வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து கவிதைகளை வெளியிட்டார். இவரின் தி புரோபசி ஆஃப் டான்டெ(The Prophecy of Dante ) டான் ஜுவான்(Don Juan) மற்றும் கவிதை நாடகங்களான சர்டான்பாலஸ்(Sardanpalus), தி டு ஃபோஸ்காரி( The Two Foscari) ஆகிய பல படைப்புகள் 1821ஆம் ஆண்டு வெளிவந்தன. இவர் துருக்கிக்கு எதிராக கிரேக்க விடுதலைப் போரில் உதவி செய்தார். அதனால் கிரேக்கர்கள் இவரை ஒரு வீரனாக போற்றினர். ஆங்கில-ஸ்காட்டிய புனைவியல் இயக்கக் கவிஞர்களில் முக்கியமானவராகப் போற்றப்பட்ட இவர் 1824ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் மிசோலோங்கியில் மறைந்தார். *டி.எம்.கிருஷ்ணா.* கர்நாடக இசைப் பாடகரான டி.எம்.கிருஷ்ணா 1976ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி சென்னையில் பிறந்தார். பாடகராக இருப்பதோடு, பாடக ஆசிரியராகவும் விளங்குகிறார். உலகம் முழுதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார். இசை பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார். இசையமைப்பாளராகவும்இ இசை குறித்து எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, ரமோன் மக்சேசே விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். ------------------------------------------------------------------------------------------------- (23-சன) *நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.* இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாக கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார். இவர் சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Service) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை துறந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கெனத் தனிக்கொடியை அமைத்தார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸ் 1945ஆம் ஆண்டு மறைந்தார். *ஹிடேகி யுகாவா.* முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவரான ஹிடேகி யுகாவா 1907ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிறந்தார். இவர் ஆதாரத் துகள்களுக்கு இடையே ஏற்படும் உள்வினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு, அதில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை விளக்கி, 'மீஸான்' (Meson) என்ற பொருள் வெளிப்படுவதை குறிப்பிட்டார். மேலும் இவர் அணுக்கரு ஆற்றல்களின் மீஸான் கோட்பாட்டை உருவாக்கினார். அணுக்கருவில் ஏற்படும் வலிமைமிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானைவிட பன்மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1949ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞரான ஹிடேகி யுகாவா 1981ஆம் ஆண்டு மறைந்தார். *ஜோதிர்மாயி தேவி.* இந்திய எழுத்தாளரான ஜோதிர்மாயி தேவி 1894ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜெய்ப்பூரில் பிறந்தார். சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கும் இவருடைய சிறுகதைகள் சிறப்பாக எழுதப்பட்ட சிறுகதைகள் ஆகும். இவா் கதைகள் இரக்கத்தைத் தூண்டுபவைகளாகவும் அறிவுபூர்வமனவைகளாகவும் இருந்தன. தாழ்த்தப்பட்டோா் உரிமைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் கட்டுரைகள் எழுதி வந்தாா். இவருடைய 'டெய்னி' என்னும் கதை இந்திய பள்ளி புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ரபீந்திர புரஸ்காா் விருது பெற்ற ஜோதிர்மாயி தேவி 1988ஆம் ஆண்டு மறைந்தார். 1996ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஜாவா (Java) நிரலாக்க மொழியின் முதற்பதிப்பு வெளியானது. 1967ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி கர்நாடக இசை வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மறைந்தார். *தேசிய வலிமை தினம்.* நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய வலிமை தினமாக கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு முதல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய வலிமை தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய அரசு அறிவித்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரத்தையும், இந்திய ராணுவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும், தன்னலமற்ற தேசத் தொண்டையும் பாராட்டுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. *தேசிய கையெழுத்து தினம்...* கையெழுத்து தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்பார்கள்... ஆனால் இன்று பலரும் கையெழுத்தை மறந்தே போவார்கள் போலிருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் முதல் லேப் டாப் வரை விரல்களால் டைப் செய்தால் போதும் பேனாக்களோ, பென்சில்களோ, விதவிதமான நிறங்களில் மைக்கூடுகளோ தேவையே இல்லை என்றாகி விட்டது. அதற்காக கைகளால் எழுதுவதை நாம் முற்றிலும் மறந்து விடக் கூடாதில்லையா?! ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதி, தேசிய கையெழுத்து தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 23 ஆம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எனில், இந்திய சுதந்திர பிரகடனத்தில் முதல் கையெழுத்திட்ட பிரிட்டிஷ்காரர் ஜான் ஹான்காக்கின் பிறந்த தினம் ஜனவரி 23. எனவே அந்நாளையே தேசியக் கையெழுத்து தினமாக அறிவித்து அவரது அந்த மகத்தான செயலுக்கு பெருமை யா!.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------


(24-சன)

*சி.பி.முத்தம்மா.*


இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் அதிகாரி சி.பி.முத்தம்மா 1924ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தார்.


இவர் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.


ஆண், பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் என சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என வழக்கு தொடர்ந்த முத்தம்மா அதில் வெற்றி பெற்று, பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்று தீர்ப்பு கிடைத்தது.


வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு சட்டத்தை திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.


இவர் நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். 33 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.*ராஜேஸ்வரி சாட்டர்ஜி.*


இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளரான ராஜேஸ்வரி சாட்டர்ஜி 1992ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்.


இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் துறையில் முன்னோடியாக திகழ்ந்தவர்.


ராஜேஸ்வரி சாட்டர்ஜி அவர் கணவருடன் இணைந்து நுண்ணலை ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை நிறுவினார்.


இவர் 100க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளையும், நுண்ணலைகள் மற்றும் உணர் பொறியியல் பற்றிய ஆறு நுால்களையும் எழுதியுள்ளார்.


ராம் லால் வாத்வா (Ram Lal Wadhwa) விருது, மவுண்ட்பேட்டன் (Moun batten) விருது போன்ற விருதுகளைப் பெற்ற இவர் 2010ஆம் ஆண்டு மறைந்தார்.


(24-சன)

*தேசிய பெண் குழந்தைகள் தினம்.*


இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


முன்னாள் பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.*தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம்.*


ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் இயற்றப்பட்ட தேசிய கீதம் (ஜன கண மன) முதன்முறையாக 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.


சுதந்திரமடைந்து 3 ஆண்டுகளுக்கு பின்னரே, அதாவது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.*சர்வதேச கல்வி தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.


அமைதி மற்றும் வளர்ச்சிக்கான கல்வியின் பங்கை கொண்டாடும் வகையில், ஜனவரி 24ஆம் தேதியை சர்வதேச கல்வி தினமாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்தது.


இந்த தீர்மானம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி ஐ.நா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச கல்வி தினம் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.


1984ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஆப்பிள் மக்கின்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.


1857ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தெற்காசியாவின்க் முதலாவது பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.


1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மறைந்தார்.


2015ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் மறைந்தார்.


(25-சன)

*தேசிய வாக்காளர் தினம்.*


இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும், அதன் முக்கியத்துவத்தையும், ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர்த்துவதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.*இந்திய சுற்றுலா தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி இந்திய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.


இத்தினத்தில் சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வு, கலாச்சார பாரம்பரியம் சார்ந்த தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் மாசு அடையாமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


நாட்டின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சியை அங்கீகரிப்பதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.1881ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இருவரும் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியை (Oriantal Telephone Company) ஆரம்பித்தனர்.


1924ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் பிரான்சில் சாமோனிக்ஸ் (Chamonix) என்ற இடத்தில் ஆரம்பமானது.


1971ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது.


1755ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.


1980ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்னை தெரசாவிற்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


மதுரை காந்தி என அழைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர் என்.எம்.ஆர்.சுப்பராமன் 1983ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மறைந்தார்.


(25-சன)

*பித்துக்குளி முருகதாஸ்.*


பக்தி பாடல்கள் பாடுவதில் தனக்கென்று தனி முத்திரையை பதித்த பித்துக்குளி முருகதாஸ் 1920ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கோவையில் பிறந்தார். இவரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம்.


பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். பின்னாளில், இவருக்கு உபதேசம் அளித்து, முருகதாஸ் என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பிரம்மானந்த பரதேசியார் தனக்கு வைத்த பித்துக்குளி என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, பித்துக்குளி முருகதாஸ் ஆனார்.


1947ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கிய பித்துக்குளி முருகதாஸ், 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடியிருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ்இ நேபாளம்இ இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இவர் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.


கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த பாடகரும், முருக பக்தருமான இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.


(26-சன)

*காருல் யோவான்.*


சுவீடன் மற்றும் நார்வே நாடுகளின் மன்னராக ஆட்சி புரிந்த காருல் யோவான் 1763ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.


இவரது இயற்பெயர் சீன் பெருனதோத்து ஆகும். தென் இத்தாலியில் உள்ள ஒரு நகரத்தின் (Pontecorvo) முதல் இளவரசர் இவர் தான்.


இவர் 1844ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மறைந்தார்.


(26-சன)

*இந்திய குடியரசு தினம்.*


இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.*சர்வதேச சுங்க தினம்.*


சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு, அதனுடைய முதல் நிர்வாகக் கூட்டம் 1953ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி புருசெல்ஸில் (Brussels) நடைபெற்றது. அதில் 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன.


அதன்பின்னர் 160க்கும் மேற்பட்ட சுங்க அதிகாரிகள் இந்த அமைப்பில் இணைந்தனர். இத்தகைய சுங்க அமைப்பு தொடங்கப்பட்ட ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினமாக கொண்டாடப்படுகிறது.


(27-சன)

*சர்வதேச படுகொலை நினைவு தினம்.*


இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.


சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது.


இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைபிடிக்கிறது.1880ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.


2009ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ரா.வெங்கட்ராமன் மறைந்தார்.


1888ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தேசிய புவியியல் கழகம் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.


(27-சன)

*சாமுவேல் கோம்பர்ஸ்.*


அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ் 1850ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.


1881ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிலாளர் யூனியன்களின் கூட்டமைப்பை (Federation of Organaized Traders and Labour Union) உருவாக்க உதவியாக இருந்தார்.


1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பாக (American Federation of Labours) இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.


தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவும், அவர்களது வாழ்வாதாரம் மேம்படவும் பாடுபட்டார். 1919ஆம் ஆண்டு பாரீஸ் அமைதி மாநாட்டில் தொழிலாளர் பிரச்சனைகளுக்கான அதிகாரப்பூர்வ ஆலோசகராக கலந்துகொண்டார்.


சமூக மக்கள் அனைவருக்கும் இயற்கை வளங்களும், வாய்ப்புகளும் சமமானவை என்ற பொருளாதார தத்துவத்தைக் கொண்டிருந்த சாமுவேல் கோம்பர்ஸ் 1924ஆம் ஆண்டு மறைந்தார்.*லூயிஸ் கரோல்.*


உலகப் புகழ்பெற்ற 'Alicd in Wonderland' குழந்தைகள் நாவலைப் படைத்த லூயிஸ் கரோல் 1832ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இங்கிலாந்திசெஷயர் பகுதியில் உள்ள டாரஸ்பரி கிராமதல் பிறந்தார். இவரது இயற்பெயர் சார்லஸ் லுட்விக் டாட்ஸன்.


இவர் 'Through the Looking Glass, What Alize Found There' என்ற 2-வது பகுதியை எழுதினார். இவை இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான குழந்தைகள் நூல்களாகக் கொண்டாடப்பட்டன.


மேலும் இவர் கணிதப் பேராசிரியர், கவிஞர், புகைப்படக் கலைஞர் என்று பலவிதமாக அறியப்பட்டாலும் குழந்தைகளுக்கான எழுத்தாளர் என்று கூறப்படுவதையே அதிகம் விரும்பினார்.


குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் தனது 1898ஆம் ஆண்டு மறைந்தார்.*மொஸார்ட்.*


1756ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி ,__ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இசைமேதை வொல்ப்காங் அமேடியஸ் மொஸார்ட் ஆஸ்திரியாவில் பிறந்தார்.


இசை வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற பல ஒத்திசைகள், ஆப்பெராக்கள் போன்ற பல இசையாக்கங்களைச் செய்தவர்.


இவர் தனது 17ஆவது வயதில் சால்சுபர்கு அரச இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார்.இவர் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார்.


(28-சன)

*தரவு தனியுரிமை தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28ஆம் தேதி தரவு தனியுரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினமானது ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தரவுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் குறிக்கின்றது.


இந்தத் தினமானது தனியுரிமை நடைமுறைகள், ஆபத்தான அல்லது உணர்திறன் வாய்ந்த நபர்கள் மற்றும் தரவு தனியுரிமைக் கொள்கைகள் ஆகியவற்றைப் பரப்புவதற்காக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.


1882ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன் முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.


(28-சன)

*லாலா லஜபதி ராய்.*


இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.


இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.


இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்' என்று கூறினார். இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.*இராஜா இராமண்ணா.*


இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா 1925ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்.


எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களின் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.


1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Bhudtha) என்ற மறைமுகச் சொல்லைப் பயன்படுத்தி முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.


இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. இவர் Years os Pilgrimage (1991), The Structure of Music in Raga & Western Systems (1993) என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.


இந்திய அணு ஆற்றல் துறைக்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் 2004ஆம் ஆண்டு மறைந்தார்.*கே.எம்.கரியப்பா.*


1899ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி இந்திய தரைப்படையின் முதல் படைத்தலைவர் கே.எம்.கரியப்பா பிறந்தார்.


இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்தினார். இவர் 1993ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி மறைந்தார்.


(29-சன)

*இந்திய செய்தித்தாள் தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (Jems Augustus) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார்.


இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தகரீதியான இதழாக வெளிவந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.*உலக தொழுநோய் ஒழிப்பு தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) உலக தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். ஆனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். தொழுநோயாளிகள் மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.


1886ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஜெர்மனியரான கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான (Motor Car) காப்புரிமம் பெற்றார்.


1998ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி மறைந்தார்.


(29-சன)

*ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்.*


இந்திய விளையாட்டு வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 1970ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சல்மேரில் பிறந்தார்.


இவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.


இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.


இவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார்.


இவர் இந்திய தரைப்படையில் பணியாற்றி 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி வரை பதவி வகித்தார்.


(30-சன)

*தியாகிகள் தினம்.*


இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


தியாகிகளின் வீரச் செயல்களை நினைவுப்படுத்தி இளம் தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.*உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம்.*


வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் பாக்டீரியா, புழுவினம், வைரஸ்கள் மற்றும் புரோட்டோசோவா போன்ற நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்றன.


இவை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன.


1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வள்ளலார் இராமலிங்க அடிகள் மறைந்தார்.


1960ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி விடுதலை போராட்ட வீரர் ஜே.சி.குமரப்பா மறைந்தார்.


1930ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி உலகின் முதலாவது Rediosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.


1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி மறைந்தார்.


1964ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி ரேஞ்சர் 6 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.


(30-சன)

*சி.சுப்பிரமணியம்.*


சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் 1910ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பொள்ளாச்சி அருகே செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் பிறந்தார்.


இவர் நாடு விடுதலைப் பெற்ற பிறகு, அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் பங்கேற்றார். இவரது அரசியல் குரு ராஜாஜி ஆவார்.


1952-1962ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் மாநில அரசில் கல்வி, சட்டம், நிதி, மத்திய எஃகு, சுரங்கத்துறை, உணவுத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.


1969ஆம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தி பக்கம் நின்று கட்சித் தலைவரானார்.


1972ஆம் ஆண்டு கோதுமை விளைச்சலில் சாதனை படைக்கச் செய்தார். 1990ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராகப் பதவியேற்றார். இவருக்கு 1998ஆம் ஆண்டு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.


இந்திய விவசாய வளர்ச்சிக்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய இவர் 2000ஆம் ஆண்டு மறைந்தார்.

[31/01, 4:53 am] +91 94434 95323: *இன்றைய நாள்.*

(31-சன)

*தேசிய மகளிர் ஆணையம் நிறுவன தினம்.*


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியாவிலுள்ள பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக 1990ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் கீழ் 1992ஆம் ஆண்டு இந்த ஆணையம்— ஏற்படுத்தப்பட்டது.


பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகவும், பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது.


மேலும் அரசியல், சமயம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மகளிருக்கான உரிமைகளைக் காத்திடவும் வரதட்சணை, வன்கொடுமை, பணி சுரண்டல் போன்றவற்றில் மகளிரை காத்திட தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.*முக்கிய நிகழ்வுகள்.*


1958ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது (Explorer 1) செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.


1961ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாசாவின் மெர்குரி-ரெட்ஸ்டோன் 2 (Mercury-Redstone 2) விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.


1966ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தனது லூனா திட்டத்தின் கீழ் லூனா 9 (டuna 9) என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.


2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் மறைந்தார்.


(31-சன)

*தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே.*


வரகவி என்ற சிறப்பு பெயர் கொண்ட கன்னடக் கவிஞர் த.ரா.பேந்திரே 1896ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடு என்ற இடத்தில் பிறந்தார்.


இவருடைய இயற்பெயர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே ஆகும். மேலும் இவர் அம்பிகாதனயதத்தா என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த பெயரின் அர்த்தம் அம்பிகாவின் மகன் தத்தன் என்பதாகும்.


இவருக்கு கர்நாடக குல திலகம் என்ற பெயரும் உண்டு. இவர் பேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப்புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.


இவருக்கு 1958ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 1968ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1973ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற இவர் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.

7 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page