top of page

11-20July

(11-சூலை) *உலக மக்கள் தொகை தினம்.*



உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.


பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1856 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப்படும் அ.வரதநஞ்சைய பிள்ளை மறைந்தார். ------------------------------------------------------------------------------------

(11-சூலை) *கா.மீனாட்சிசுந்தரம்.*

தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றிய கா.மீனாட்சிசுந்தரம் 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு என்னும் ஊரில் பிறந்தார்.இவர் எழுதிய 'சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும்' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு வழங்கப்பட்டது. மேலும், இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 18 நூல்களை எழுதியுள்ளார்.இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகளில் பெரும் பங்களிப்பை வழங்கிய இவர் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

*தியோடோர் ஹரோல்ட் மைமான்*


1927ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி லேசரை கண்டறிந்து வெற்றிகரமாக செயல்படுத்திய தியோடோர் ஹரோல்ட் மைமான், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.1983ஆம் ஆண்டு வுல்ஃவ் பரிசும், 1987ஆம் ஆண்டு ஜப்பான் பரிசும் பெற்றார். மேலும் லேசர் ஆடிசி என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவர் அறிவியல் உயர்கல்விக்கழகம், தேசிய பொறியியல் உயர்கல்விக்கழகம் ( National Academies of Science and Engineering) ஆகிய இரண்டிலும் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். இவருக்கு பல பல்கலைக்கழகங்கள் கௌரவ முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தி உள்ளனர். மைமான் சிஸ்டெமிக் மாஸ்டோசைட்டோசிஸ் (Systemic Mastocytosis) நிலையால் 2007ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி கனடாவில் உள்ள வான்கூவரில் மறைந்தார்.

*குன்றக்குடி அடிகள்.*

இலக்கியம் மட்டுமன்றி பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற குன்றக்குடி அடிகள் 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் பிறந்தார்.இவர் 1952ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் குன்றக்குடி ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகானாக விளங்கினார்.பின்னர் தம் பணிகளால் அடிகளாராகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார்.இவருக்கு தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருதும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தது. குன்றக்குடி அடிகள் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மறைந்தார்.

*வி.ஆர்.நெடுஞ்செழியன்.*

1920ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி தமிழக அரசியல் தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பட்டுக்கோட்டை அருகிலுள்ள திருக்கனாபுரத்தில் பிறந்தார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தார். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர்.

ஒரு பாராட்டு விழாவின் போது அண்ணாதுரை, இவருக்கு 'நாவலர்' என்ற பட்டம் அளித்தார்.சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1944ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் கட்சியில் சேர்ந்தார்.இவர் க.இராசாராமோடு இணைந்து, 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கினார்.கல்வி அமைச்சராகவும், உணவு அமைச்சராகவும் இருந்த இவர் 2000ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி மறைந்தார்.

*அழகுமுத்து கோன்.*

இந்திய விடுதலைக்கு வித்திட்ட மாவீரன் அழகுமுத்து கோன் 1710ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பிறந்தார். 1759ஆம் ஆண்டு அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார்.அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது.விடுதலைக்கு வித்திட்ட இவர் 1759ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(12-சூலை) *மலாலா யூசஃப்சாய்.*


பெண் கல்வி உரிமைக்காக போராடிய உலக அடையாளச் சின்னம், மலாலா யூசஃப்சாய் 1997ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தார்.மலாலா, 2013ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையை தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வையே ஐக்கிய நாடுகள் மலாலா தினமாக அறிவித்தது.பாகிஸ்தானில் சில பகுதிகளில் பெண்கள் படிக்கக்கூடாது, தெருக்களில் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து இவர் போராடினார்.இவர் பொது இடங்களிலும், பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினார். எனவே இவரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார்.இவர் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, முதல் பாகிஸ்தானியப் பெண் மற்றும் மிக இளையவள் என்ற பெருமையை பெற்றவர்.


*ஜார்ஜ் ஈஸ்ட்மன்.*


1854ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஒளிப்படச் சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தார்.ஈஸ்ட்மன் கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும், ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார்.

ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது.அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.தம் வாழ்நாளில் ஏறத்தாழ 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் நற்பணிகளுக்காகக் கொடையாக அளித்துள்ள இவர் 1932ஆம் ஆண்டு மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(13-சூலை)

1923ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது.


1930ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி முதலாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாயின.


1921ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில், புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(13-சூலை) *வைரமுத்து.*


ஒவ்வொரு தமிழ் ரசிகன் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து 1953ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்தார்.இவர் 1980ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவருடைய முதல் பாடல் *'இது ஒரு பொன் மாலைப் பொழுது'* ஆகும். பல்வேறு நாவல்கள், கவிதை தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.தமிழ்நாட்டின் மாநில விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.கவியரசு என்றும், கவிப்பேரரசு என்றும், காப்பியப்பேரறிஞர் என்றும், காப்பிய சாம்ராட் என்றும் பல பட்டங்களை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(14-சூலை) *முக்கிய நிகழ்வுகள்..*


2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்தார்.


2004ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் துறவி சுவாமி கல்யாண் தேவ் மறைந்தார்.

1995ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி எம்பி3 (MP3) பெயரிடப்பட்டது.

1967ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

1914ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்னி பெசன்ட் அம்மையார், நியூ இந்தியா என்ற பத்திரிகையை தொடங்கினார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(14-சூலை) *வா.செ.குழந்தைசாமி.*

இந்திய பொறியியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி 1929ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் பிறந்தார்.

நீர்வளத்துறையில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத்துறைத் திட்டக்குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும், சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் இருந்தவர்.


நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது பெற்றவர்.

பன்முக ஆளுமை திறன் கொண்ட வா.செ.குழந்தைசாமி 2016ஆம் ஆண்டு மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

*கோபால் கணேஷ் அகர்கர்.*

1856ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்திய சமூக சீர்திருத்தவாதி கோபால் கணேஷ் அகர்கர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் பால கங்காதர திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றி வந்தார். இவர் பின்னாளில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனித்துச் சென்றார்.

இவர் சூத்திரக் என்னும் பத்திரிக்கையைத் தொடங்கி தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பழைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை எதிர்த்தார். விதவைத் திருமணத்தை ஆதரித்தார்.

இவர் ஆஸ்துமா நோயினால் தனது 39ஆம் வயதில் மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(15-சூலை) *காமராஜர்*

கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1946-52ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் *'கருப்பு காந்தி'* என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் வழிகாட்டி என்று பாராட்டியுள்ளார்.

பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், 1975ஆம் ஆண்டு மறைந்தார். மறைவுக்குபின் 1976ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

*மறைமலை அடிகள்.*

தனித்தமிழ் இயக்கம் ஆரம்பித்து, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.


தமிழ் பற்றால், வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார். இவர் சிறுவயதில் இருந்தே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

மேலும் இவர் 1905ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911ஆம் ஆண்டு துறவு மேற்கொண்டார்.

மூடத்தனமான செயல்களை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 1950ஆம் ஆண்டு மறைந்தார்.

*துர்காபாய் தேஷ்முக்.*

சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காபாய் தேஷ்முக் 1909ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் பிறந்தார்.

இவர் காந்திஜிக்கு மிகவும் பிரியமான தொண்டர் ஆவார். இவர் பெண்களுக்கான பள்ளியை தொடங்கி, அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளித்தார். அதை பாராட்டி காந்திஜி தங்கப்பதக்கம் தந்தார்.

இவர் பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் *'சமூக சேவைகளின் அன்னை'* என்று இந்திரா காந்தி புகழாரம் சூட்டினார்.

நாட்டில் முதன்முதலில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்த இரும்புப் பெண்மணி துர்காபாய் தேஷ்முக் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(16-சூலை) *அருணா ஆசஃப் அலி.*

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி 1909ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஹரியானா மாநிலம் கால்கா நகரில் பிறந்தார்.

இவர் சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும், துணிவும் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

1958ஆம் ஆண்டு டெல்லியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அமைதிக்கான லெனின் பரிசும், 1991ஆம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

நாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அருணா ஆசஃப் அலி 1996ஆம் ஆண்டு மறைந்தார். இவரது மறைவிற்கு பின் 1997ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

*தன்ராஜ் பிள்ளை.*

1968ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை புனேவில் பிறந்தார்.

இவர் 1989ஆம் ஆண்டு தேசிய அணியில் அறிமுகமானார். இவர் இந்திய ஹாக்கி அணியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் 15 ஆண்டுகளில் பல போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

1999-2000ஆம் ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும், 2000ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளர்.

இவர் பிப்ரவரி 2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் குஜராத் அரசின் நிதியுதவியுடன் குஜராத்தில் உள்ள எஸ்ஏஜி ஹாக்கி அகாடமியை நடத்தி வருகிறார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(17-சூலை) *சர்வதேச உலக நீதி தினம்.*

சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் இனப்படுகொலை போன்ற பிரச்சனைகளின்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(17-சூலை) *ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர்.*

1894ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வானியலாளரான ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர் பெல்ஜியத்தில் பிறந்தார்.

இவர் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற ஹபிள் விதியை (Hubbles Law) எட்வின் ஹப்பிள் கூறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே 1927ஆம் ஆண்டு இவர் வெளியிட்டார்.

பிரபஞ்ச விரிவாக்கம் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து, விரிவான கட்டுரைகளை 1933ஆம் ஆண்டு வெளியிட்டார்.


பிரபஞ்சவியல் கணக்கீடுகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த ஜார்ஜஸ் லிமேட்டர் 72வது வயதில் (1966) மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(18-சூலை) *நெல்சன் மண்டேலா.*

நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.

நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18ஆம் தேதியை ஐ.நா.சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

இவர் சட்டம் பயின்ற பிறகு, கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களையும் நடத்தி வந்தார்.


அதன்பின், 1961ஆம் ஆண்டு இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். இவர்மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டு, 1962ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


'மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்' என அரசின் நிபந்தனையை நிராகரித்தார். நாட்டின் புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.


தொடர்ந்து போராடி, இறுதியில் 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது, அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நெல்சன் மண்டேலா 2013ஆம் ஆண்டு, 95வது வயதில் மறைந்தார்.


*காதம்பினி கங்குலி.*


1861ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ; பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவருமான காதம்பினி கங்குலி பீகார் மாநிலம் பகல்பூரில் பிறந்தார்.


இவர் 1892ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று எல்.ஆர்.சி.பி, எல்.ஆர்.சி.ஆஸ், ஜி.எஃப்.பி.எஸ் போன்ற படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பினார்.


இவர் இந்தியா வந்து தனது மருத்துவத் தொழிலை தொடங்கினார். பிறகு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபட்டார்.


தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்கத்தாவில் ஒரு கூட்டத்தை இவர் நடத்தினார்.


பெண் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட காதம்பினி கங்குலி 1923ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி மறைந்தார்.



*ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி.*


1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி இந்து ஆன்மிகத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தார்.


இவரின் இயற்பெயர் சுப்ரமணியம் மகாதேவன். ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற இவர், 1954ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அன்று தனது 19 வது வயதில், ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.


சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(19-சூலை) *மங்கள் பாண்டே.*


இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார்.


இவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.


இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது.


பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.


மங்கள் பாண்டேவின் வரலாற்றை சித்தரிக்கும் The Rising என்ற திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.


*எட்வார்டு சார்லசு பிக்கரிங்.*


1846ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அமெரிக்க வானியலாளரும், இயற்பியலாளருமான எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்தார்.


நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியச் செயல்முறைகளின் கூறுகள் (Elements of Physical Manipulation) என்னும் நூலை எழுதியுள்ளார்.


அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆவார். பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் வைசு பரிசும், அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கமும், புரூசு பதக்கமும் பெற்றுள்ளார். சிறந்த இயற்பியலாளராக இருந்த எட்வார்டு சார்லசு பிக்கரிங் 1919ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(20-சூலை) *சர்வதேச சதுரங்க தினம்.*


உலக சதுரங்க கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும்.


இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20ஆம் தேதியை சர்வதேச சதுரங்க தினமாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.


*முக்கிய நிகழ்வுகள்*


1937ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி மறைந்தார்.


1920ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி மறைந்தார்.


1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி தற்காப்புக்கலை நிபுணரும் ஹாலிவுட் நடிகருமான புரூஸ் லீ மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

(20-சூலை) *கிரிகோர் மெண்டல்.*

மரபியலின் தந்தை கிரிகோர் ஜோஹன் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) பிறந்தார்.


சிறுவயதிலிருந்தே இவருக்கு மரபுப் பண்புகள் ஆராய்ச்சிகளில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே, தனது தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

இவர் மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். இவையே மெண்டலின் விதிகள் எனப்படுகின்றன.

உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்த மெண்டல் 1884ஆம் ஆண்டு மறைந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------



0 views0 comments

Recent Posts

See All
bottom of page