16 August -31 August

(16-ஆக) *அ.மாதவையா.*
தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.
இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914ஆம் ஆண்டு நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையை 1925ஆம் ஆண்டு தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். அவர் பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.
*ஜேம்ஸ் கேமரூன்.*
ஹாலிவுட் வரலாற்றிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் பிறந்தார்.
1984ஆம் ஆண்டு வெளிவந்த இவரது டெர்மினேட்டர் என்ற ஆங்கிலத் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
இவர் 1997ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்ட டைட்டானிக் திரைப்படத்திற்கு 11 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன. 2012ஆம் ஆண்டு உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் சேலஞ்சர் மடு வரை பிரத்யேக நீர்மூழ்கி கலனில் தனியாகச் சென்று வந்து சாதனை படைத்தார்.
*காபிரியேல் லிப்மன்.*
1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் ஐரோப்பாவில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார்.
வெள்ளொளியில் அடங்கிய பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டினார்.
குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுத்த இவரது ஆய்வுகளுக்காக 1908ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இவர் 1921ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மறைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
(17-ஆக) *பிரெடரிக் ரஸல்.*
ராணுவத்தில் டைஃபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்தவரான பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலுள்ள அபர்ன் நகரில் பிறந்தார்.
ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்த இவர், வீரர்களுக்கு டைஃபாய்டு வராமல் தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதையடுத்து, ராயல் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், டைஃபாய்டு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருமான சர்.அல்ம்ரோத் ரைட்டின் ஆய்வுக்கூடப் பார்வையாளராக இவரை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை மேம்படுத்தினார். பிறகு, ராணுவ வீரர்களுக்கு 1910 முதல் சிறிது சிறிதாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அது நல்ல பலனைத் தந்ததால், 1911ஆம் ஆண்டு அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.
பொதுநலத் திட்டங்களில் இவரது பங்களிப்பை பாராட்டி அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி 'பப்ளிக் வெல்ஃபேர்' பதக்கம் வழங்கியது. அடுத்த சில ஆண்டுகள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நோய்த்தொற்று மற்றும் தடுப்பு மருந்து துறை பேராசிரியராக பணியாற்றினார்.
டைஃபாய்டு தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, இறுதிவரை நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 1960ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஷங்கர்.*
1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்திய திரைப்பட இயக்குனர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்தார்.
இவர் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின் திரைப்பட இயக்குநர் ஆனார்.
இவர் எஸ்.பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவருடைய படங்கள் புதிய தொழில்நுட்ப அமைப்பையும், பிரம்மாண்டமான தோற்றத்தையும் கொண்டிருக்கும்.
*ஷார்லட் லூயிஸ் கிரிம்கீ.*
1837ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அடிமைத்தனத்துக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய போராளியும், கவிஞரும், கல்வியாளருமான ஷார்லட் லூயிஸ் கிரிம்கீ அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் பிறந்தார்.
சிறு வயது முதலே சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் நாட்குறிப்புகளில் எழுதிவந்தார். பின்னாளில் இவை பல தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன.
ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களுக்கு சமூக நீதிஇ சம உரிமை பெற்று தரும் போராட்டங்களுக்கு ஆதரவளித்தார். பெண் வாக்குரிமைக்கானஇ கறுப்பினப் பெண்களுக்கான தேசிய சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்றார்.
அடிமைத்தனத்துக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய ஷார்லட் கிரிம்கீ 77வது வயதில் (1914) மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------
(18-ஆக) *பாஜிராவ்.*
இந்திய பேரரசர் முதலாம் பாஜிராவ் 1700ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி பிறந்தார்.
இவர் தனது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்திக்கவில்லை.
பாஜிராவ் 1740ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டு இறந்தார்.
*ஆர்.எஸ்.சுபலட்சுமி.*
1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பெண்ணுரிமைக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளர் ஆர்.எஸ்.சுபலட்சுமி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
பி.ஏ வகுப்பில் சேர்ந்து 1911ஆம் வருடம் முதல் பிராமணக் குடும்பத்துப் பட்டதாரியாகவும், தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியாகவும் தேர்ச்சி பெற்றார்.
இவரது வாழ்க்கை வரலாற்றை 'A Child Widow's Story' என்ற புத்தகத்தை மோனிகா ஃபெல்டன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதை 'சேவைக்கு ஒரு சகோதரி' என்ற பெயருடன் எழுத்தாளர் அநுத்தமா தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
மீனவர் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பத்தை வழக்கமாகக்கொண்டிருந்த இவர் 1969ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி மறைந்தார்.
*விஜயலட்சுமி பண்டிட்.*
1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் பிறந்தார்.
இவர் சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.
1962ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்தார். பின் 1967ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
1979ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த இவர் 1990ஆம் ஆண்டு டிசம்பர் 01ஆம் தேதி மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------
(19-ஆக) *உலக புகைப்பட தினம்.*
லூயிசு டாகுவேரே என்பவர்தான் டாகுரியோடைப் என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என உலகம் முழுவதும் அறிவித்தது. இத்தினத்தை நினைவுகூறவும், மேலும் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
*உலக மனித நேய தினம்.*
முதலாவது உலக மனித நேய தினத்தை, ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று 2009ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போர், இயற்கைப் பேரழிவு, நோய் ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள். இவர்களை நினைவுகூறும் விதமாக இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
(19-ஆக) *சத்தியமூர்த்தி.*
விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார்.
இவர் சென்னை பார்த்தசாரதி கோவிலில் 1930ஆம் ஆண்டு தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். அதன்பின், இவர் 1939ஆம் ஆண்டு சென்னையில் மேயராகப் பணியாற்றிய போது, இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புதலைப் பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதற்கு அடிக்கல்லை நாட்டினார்.
இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 1943ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஆர்வில் ரைட்.*
1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதன் முதலாக விமானத்தில் பறந்து காட்டிய சகோதரர்களுள் இளைய சகோதரரான ஆர்வில் ரைட் பிறந்தார்.
வட கரோலினாவில் கிட்டி ஹாக்கினருகில் கில்டெவில் ஹல்லில் 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்கள் முதன் முதலாகப் பறந்தனர்.
முதலில் ஆர்வில் ரைட் 12 நொடிகளில் 120 அடி தூரம் பறந்தார். இறுதியில் வில்பர் ரைட் 59 நொடிகளில் 852 அடி தூரம் பறந்தார்.
உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை கண்டுபிடித்த ஆர்வில் ரைட் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மறைந்தார்.
*சங்கர் தயாள் சர்மா.*
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான சங்கர் தயாள் சர்மா 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறந்தார்.
இவர் 1992ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை குடியரசு தலைவராக இருந்தார். இதற்கு முன் இவர் துணை குடியரசு தலைவராக பதவி வகித்தார்.
1952ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். இவர் 1999ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மறைந்தார்.
----------------------------------------------------------------------------------
(20-ஆக) *என்.ஆர்.நாராயண மூர்த்தி.*
இந்தியாவின் புகழ் வாய்ந்த தொழிலதிபரும், சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிறந்தார்.
இவர் 1981ஆம் ஆண்டு மிக குறைந்த முதலீட்டுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து 'இன்ஃபோசிஸ்' மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டே பெங்களூரில் தன் அலுவலகத்தினை தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், விரைவில் அதுவே அதன் தலைமை அலுவலகமாகவும் மாறியது.
இவரது தன்னலமற்ற தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவின் கௌரவம் மிக்க 'ஹூவர் பதக்கம்' வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகளுக்காக, பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளன.
*ராஜீவ் காந்தி.*
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல்வாதியான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரென கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.
இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
----------------------------------------------------------------------------------------------------
(21-ஆக) *ப.ஜீவானந்தம்.*
மகாத்மா காந்தியால் 'இந்திய தேசத்தின் சொத்து' என்று பாராட்டப்பட்டவரும், பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார்.
இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். இவர் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.
1932ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப.ஜீவானந்தம், 1963ஆம் ஆண்டு மறைந்தார்.
*பிரம்ம பிரகாஷ்.*
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதல் இயக்குநர் டாக்டர் பிரம்ம பிரகாஷ் 1912ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார்.
பிரபல விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்னாகருடன் இணைந்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1949ஆம் ஆண்டு பம்பாயில் உள்ள அணுசக்தி நிறுவனத்தில் ஹோமி பாபாவால் உலோகவியலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1951ஆம் ஆண்டு பெங்களூர், இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் துறையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் படிப்புக்கு நவீன பாடத்திட்டம் வகுத்தார்.
1952ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை நாட்டின் அணுசக்தி திட்டங்களில் முக்கியப் பங்காற்றினார். விண்வெளி ஆணைய உறுப்பினராக இறுதிவரை செயல்பட்டார். பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றவர்.
நாட்டின் பல வெற்றிகரமான செயற்கைக்கோள், ஏவுகணை திட்டங்களில் முக்கியப் பங்காற்றிய இவர் 1984ஆம் ஆண்டு மறைந்தார்.
*உசைன் போல்ட்.*
1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தடகள ஆட்டக்காரர் உசைன் போல்ட் ஜமேக்காவில் பிறந்தார்.
இவர் அங்கேரியின் டெப்கிரீன் நகரில் நடைபெற்ற 2001 உலக இளையோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் உலக அரங்கிற்கு அறிமுகம் ஆனார்.
இவர் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை படைத்தார்.
இவர் ஒலிம்பிக் 200 மீ ஓட்டம் போட்டியில் 19.30 வினாடி விரைந்து ஓடி உலக சாதனை படைத்தார்.
தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 ஒ 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார்.
--------------------------------------------------------------------------------------------
(22-ஆக) *சென்னை தினம்.*
பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று பிறந்த நாள்...!!!
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.
பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சிஇ உணவுத் திருவிழாஇ மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
(22-ஆக) *ரே பிராட்பரி.*
அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்திலுள்ள வாகிகன் நகரில் பிறந்தார்.
இவர் முழு நேர எழுத்தாளராக 1943ஆம் ஆண்டு மாறினார். 'டார்க் கார்னிவல்' என்ற இவரது முதல் சிறுகதை தொகுப்பு 1947ஆம் ஆண்டு வெளிவந்தது. 1950ஆம் ஆண்டு இவரது பல கதைகள் 'ஈ.சி. காமிக்ஸ்' நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன.
1953ஆம் ஆண்டு வெளியான இவரது 'ஃபாரன்ஹீட் 451' புதினம் உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்திற்கு 'பிராட்பரி லேண்டிங்' என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவர் தினமும் பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏறக்குறைய 600 சிறுகதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். எழுத்தையே சுவாசித்து வந்த ரே பிராட்பரி 2012ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------
(23-ஆக) *சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்.*
ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நள்ளிரவு முதல் 23ஆம் தேதி வரை போராடினர்.
அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
-----------------------------------------------------------
(23-ஆக) *டி.எஸ்.பாலையா.*
தமிழ்த் திரையுலகின் ஒரு பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.
இவர் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி மறைந்தார்.
*சுசுமு ஓனோ.*
1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜப்பானிய மொழியையும், தமிழ்மொழியையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்த சுசுமு ஓனோ டோக்கியோவில் பிறந்தார்.
1943ஆம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
1999ஆம் ஆண்டு ஜப்பான் மொழி பற்றி ஆய்வு நூலை வெளியிட்ட இவர் 2008ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் நாள் மறைந்தார்.
--------------------------------------------------------------------
(24-ஆக) *நாரண.துரைக்கண்ணன்.*
தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
இவர் பல்வேறு பெயர்களில் பல கதைகளை எழுதி வந்தாலும் 'ஜீவா' என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக அறியப்பட்டது. இவரது சரஸ்வதி பூஜை என்ற முதல் கட்டுரை 1924ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் வெளியானது.
இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய உயிரோவியம், நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?, தாசி ரமணி முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும்.
இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தனது பத்திரிகையில் தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலேய அரசு அவரைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தாலும், எங்கள் கொள்கையை விடமாட்டோம், இது எங்களது தேசியக் கடமை எனத் துணிச்சலுடன் அறிவித்தார்.
மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். இவர் நற்கலை நம்பி, இலக்கியச் செம்மல் என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். வாழ்க்கைக் கலைஞர் என்று மு.வ. அவர்களால் போற்றப்பட்ட இவர் 1996ஆம் ஆண்டு மறைந்தார்.
*ராஜகுரு.*
சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ராஜகுரு 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் கேடா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ஷிவ்ராம் ஹரி ராஜகுரு.
இவர் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பில் பகத்சிங் மற்றும் சுகதேவ் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பராக மாறினார்கள். மூவரும் இணைந்து லாலா லஜ்பத்ராயின் படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை 1928ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனர்.
பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களுக்கு 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனிவாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------
(25-ஆக) *கிருபானந்த வாரியார்.*
சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்தார்.
இவருடைய தந்தை ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், இவரை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. இவருக்கு முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.
எம்.ஜி.ஆருக்கு 'பொன்மனச் செம்மல்' என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். ஆன்மிக அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். இவருக்கு சென்னை தமிழிசை மன்றம் *'இசைப் பேரறிஞர்'* பட்டம் வழங்கி சிறப்பித்தது.
வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1993ஆம் ஆண்டு விமானப் பயணத்தின் போது மறைந்தார்.
--------------------------------------------------------------------------------------------
(26-ஆக) *திரு.வி.கலியாணசுந்தரம்.*
கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகத்திறன் கொண்டவரும், *'தமிழ்த் தென்றல்'* என போற்றப்பட்டவருமான திரு.வி.கலியாணசுந்தரம் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் 'இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும்' என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இவர் சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். இவருக்கு அரசியல் குருவாக திலகர் இருந்தார்.
சென்னையில் 1918ஆம் ஆண்டு முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. 1920ஆம் ஆண்டு நவசக்தி என்ற வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்தி கனலை மூட்டினார்.
இவர் புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார்.
இவரே தன்னுடைய பெயரை 'திரு.வி.க.' என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தார். தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 1953ஆம் ஆண்டு மறைந்தார்.
*அன்னை தெரசா.*
அன்னை தெரசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபிலில் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் 'ரோஜா அரும்பு' என்று பொருள்)
இவர் 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
1970ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இவர் 1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அன்னை தெரசா 1997ஆம் ஆண்டு செம்டம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின்போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.
----------------------------------------------------------------------------
(27-ஆக) *டி.என்.ராஜரத்தினம் பிள்ளை.*
அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும், இணையற்ற நாதஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் என்ற ஊரில் பிறந்தார்.
இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவரின் இசையை ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி அடைந்தது. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.
*'நாதஸ்வர சக்ரவர்த்தி'* என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். 'சங்கீத அகாடமி விருது', *'அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி'* உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை தான் ஒலித்தது.
ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த *'தோடி'* ராகத்தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடு இணையற்ற நாதஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1956ஆம் ஆண்டு மறைந்தார்.
-------------------------------------------------------------------------------
(28-ஆக) *அய்யன்காளி.*
தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத்தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார்.
இவரால், கேரளாவில் முதல் முறையாக நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, *'ஞாயிற்றுக்கிழமை ஓய்வு'* உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தந்தது.
சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றிற்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.
தன் சமூக மக்களை ஒன்றுபடுத்தி சாதுஜன பரிபாலன சங்கம் என்ற அமைப்பை 1905ஆம் ஆண்டு தொடங்கினார். காந்தியடிகள் 1937ஆம் ஆண்டு வெங்கனூர் சென்று இவரை சந்தித்து, இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளியான அய்யன்காளி 1941ஆம் ஆண்டு மறைந்தார்.
*பிராக் கோரக்புரி.*
1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய எழுத்தாளர், கவிஞர், விமர்சகரான பிராக் கோரக்புரி கோரக்பூரில் பிறந்தார்.
இவர் மாகாண சிவில் சேவை (P.C.S.) மற்றும் இந்திய சிவில் சேவையில் (I.C.S.) தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றுவதற்காக அதை ராஜினாமா செய்தார்.
இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இலக்கிய விருது, ஞானபீட விருது மற்றும் சாகித்திய அகாடமி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1982ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மறைந்தார்.
--------------------------------------------------------------------------
(29-ஆக) *மைக்கல் ஜாக்சன்.*
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக்கலைஞர் என்று போற்றப்படும் மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவின் இன்டியானா நகரில் பிறந்தார்.
இவர் வெளியிட்ட த்ரில்லர் இசை ஆல்பம்தான் உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. இவர் பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.
இவர் பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த பாப் நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை. அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக்கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம்.
இன்றளவும் பாப் இசையுலகின் ஈடு இணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு மறைந்தார்.
*கே.இராதாகிருஷ்ணன்.*
1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்திய அறிவியலாளர் கே.இராதாகிருஷ்ணன் கேரளாவில் பிறந்தார்.
இவர் நவம்பர் 2009ஆம் ஆண்டு மற்றும் டிசம்பர் 2014ஆம் ஆண்டுக்கு இடையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) தலைமை தாங்கினார்.
விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் மற்றும் இஸ்ரோவின் தலைவராகவும் இருந்தார்.
இவர் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தின் (INCOIS) இயக்குநராக, புவி அறிவியல் அமைச்சகத்தில் ஐந்து ஆண்டுகள் (2000-2005) பணிபுரிந்தார்.
கே.இராதாகிருஷ்ணன் இந்தியாவின் கௌரவ விருதான பத்ம பூசண் விருதை பெற்றள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
(29-ஆக) *சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்.*
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணு ஆயுதத்தை முதன்முதலாக 1945ஆம் ஆண்டில் வீசியது. அதன் பிறகு இதுவரை சுமார் 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இன்றைக்குள்ள அணு ஆயுதங்களை கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள் பற்றியும் அதன் பரவலைத் தடுக்க வலியுறுத்தியும் ஐ.நா. சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*தயான் சந்த்.*
*தேசிய விளையாட்டு தினம்.*
இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதற்கு இவரே முக்கியக் காரணம். இவர் ஹாக்கி விளையாடும் முறை இன்றளவிலும் வியக்க வைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இவர் 1948ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரை கௌரவிக்கும் விதமாக டெல்லி தேசிய மைதானத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்துள்ளது.
மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் 1979ஆம் ஆண்டு மறைந்தார்.
-----------------------------------------------------------------------------------
(30-ஆக) *ரூதர்ஃபோர்டு.*
நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நியூசிலாந்தில் பிறந்தார்.
இவர் யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் இல்லாமல் 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு ஆல்பா, பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். இவர் மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.
இவர் வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.
கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு 1908ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 1914ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நைட் விருது வழங்கப்பட்டது.
அணுக்கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்திற்கும் அடித்தளமாக விளங்குகின்றன. *'அணுக்கரு இயற்பியலின் தந்தை'* என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1937ஆம் ஆண்டு மறைந்தார்.
-------------------------------------------------------------------------------------------
(31-ஆக) *மரியா மாண்ட்டிசோரி.*
இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்விமுறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றை கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். இதன் மூலம் குழந்தைகள் பாடங்களை எளிதாகக் கற்றனர். இந்த முறை உலகெங்கும் பரவியது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இவருக்கு அழைப்பு விடுத்தார்கள். அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்விமுறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்விமுறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.
தனது புதிய கல்விமுறையின் அடிப்படையில் ரோம் நகரில் 1907ஆம் ஆண்டு முதல் வகுப்பைத் தொடங்கினார். இது மாண்ட்டிசோரி கல்விமுறை என பிரபலமடைந்தது. பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது. புதுமைக் கல்வித் திட்டத்திற்கான கோட்பாடுகளை 1897ஆம் ஆண்டு உருவாக்கினார்.
இவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மாண்ட்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார்.
இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்விமுறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மாண்ட்டிசோரி 1952ஆம் ஆண்டு மறைந்தார்.
(31-ஆக) *ஜஹாங்கீர்.*
♔ முகலாயப் பேரரசின் மன்னர் ஜஹாங்கீர் 1569ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்தார். ஜஹாங்கீர் அவரது ஆட்சிகாலத்தை அவர் கண்ட 'நீதியின்' முக்கியத்துவத்துடன் தொடங்குவதற்கு முடிவெடுத்தார்.
♔ அவரது தந்தையை போன்றே வெற்றிகளைப் பெறுவதன் மூலம் ஜஹாங்கீரும் முகலாயர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களை அதிகரித்தார். மீவார் ஆட்சியுடன் இருந்த நூற்றாண்டு கால பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததிற்கு ஜஹாங்கீரே பொறுப்பாவார்.
♔ அக்பர் வெற்றிகொள்ளத் தவறிய கங்கிரா கோட்டையை கைப்பற்றுவதற்கு ஜஹாங்கீர் எண்ணியிருந்தார். இதன் விளைவாக கோட்டை முற்றுகையிடப்பட்டது. 1620ஆம் ஆண்டு கோட்டை ஆட்சிக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
♔ 1627ஆம் ஆண்டு ஜஹாங்கீர் காஷ்மீரில் இருந்து வரும் வழியில் மறைந்தார். ஜஹாங்கீரின் அழகுவாய்ந்த சமாதி லாகூரின் ஷாதரா நிகழ்விடத்தில் அமைந்துள்ளது.