top of page

(18 ஏப்ரல் -23 ஏப்ரல்)

(18-ஏப்) *உலக பாரம்பரிய தினம்*

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1982ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் தேதி சர்வதேச நினைவிடங்கள் தினமாக கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டே யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது.


*மகரிஷி கர்வே*


மகளிர் மேம்பாட்டுக்கு பாடுபட்ட மகரிஷி தோண்டு கேசவ் கர்வே 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் விதவைத் திருமணங்கள் நடத்துவதும், இதுகுறித்து பிரச்சாரம் செய்வதும் மட்டுமே அவர்களுக்கு நிரந்தர தீர்வாகாது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு கல்வி கற்பித்து, சொந்தக் காலில் நிற்க வைப்பது அவசியம் என தீர்மானித்து, இதற்காக அனாத் பாலிகாஷ்ரம் என்ற அமைப்பை தொடங்கினார்.

பெண்களுக்காக பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்தார். இவருடைய செயல்களுக்கு மகாத்மா காந்தியும் ஆதரவு அளித்து வந்தார். 1955ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார். 1958ஆம் ஆண்டு நூறாவது வயதில் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மகரிஷி கர்வே என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.


*ஜார்ஜ் ஹிட்சிங்ஸ்*

கீமோதெரபி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1905ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் என்ற பகுதியில் பிறந்தார்.

1944ஆம் ஆண்டு இவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2இ6-டைஅமினோப்யூரின் மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டைஅமினோ பைரிமிடின் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்து வந்தார்.

கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை அவருடைய குழு வெளியிட்டது. இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக அவர்களுடன் கூட்டாக 1988ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1998ஆம் ஆண்டு மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------

(19-ஏப்) *அஞ்சு பாபி ஜார்ஜ்*

இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரில் பிறந்தார்.

இவர் 2003ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் வென்ற முதல் இந்திய தடகள வீரர் ஆவார். 2003-04ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.

*முகேஷ் அம்பானி*

இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவரான முகேஷ் அம்பானி அவர்கள், 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.


'ரிலையன்ஸ்' என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்குள்ளது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார்.

அதுமட்டுமல்லாமல், இவர் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்குகிறார்.


*குஸ்டாவ் தியடோர் ஃபெச்னர்*

1801ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி உளவியற்பியலை உலகுக்கு தந்த குஸ்டாவ் தியடோர் ஃபெச்னர் ஜெர்மனியின் முஸ்காவ் நகருக்கு அருகே குரோப் ஸார்சன் என்ற ஊரில் பிறந்தார்.

நிறம், பார்வை குறித்து 1839-ல் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.

இவரது பார்வை குணமான பிறகு மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

'உணர்வின் தீவிரம் எண்கணிதத் தொடரில் (Arithmetic Progression) அதிகரித்தால், அதைத் தூண்டும் ஆற்றல் பெருக்குத் தொடரில் (Geometric Progression) அதிகரிக்க வேண்டும்' என்றார்.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக உலகப் புகழ்பெற்ற வெபர்-ஃபெச்னர் விதி (Weber-Fechner Law) பிறந்தது.

இயற்பியலிலும், வேதியியலிலும் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் நவம்பர் 18ஆம் நாள் 1887ஆம் ஆண்டு மறைந்தார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------

(20-ஏப்) *சிட்டி சுந்தரராஜன்*

தகவல் பெட்டகம் எனப் போற்றப்பட்ட 'சிட்டி' பெ.கோ.சுந்தரராஜன் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார்.

இவர் சிட்டி என்ற புனைப்பெயரில் நூல்களை எழுதினார். இது பெயருடன் நிரந்தரமாக இணைந்துவிட்டது. வ.ரா.(வ.ராமசாமி ஐயங்குயரர்), கு.ப.ரா.(கு.ப.ராஜகோபாலன்), புதுமைப்பித்தன் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

இவர் 1975ஆம் ஆண்டு ஆதியூர் அவதானி என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டார். ஏராளமான சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சன கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

வித்தியாசமான படைப்பாற்றல், நகைச்சுவை உணர்வு அமையப்பெற்ற சிறந்த இலக்கிய அறிஞரான சிட்டி 2006ஆம் ஆண்டு மறைந்தார்.

*பழனி சுப்பிரமணிய பிள்ளை*

1908ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தமிழக மிருதங்க கலைஞர் பழனி சுப்பிரமணிய பிள்ளை பிறந்தார்.

இவரது பெற்றோர் முத்தையா பிள்ளை-உண்ணாமலை அம்மாள் ஆவார். இவரின் தந்தை முத்தையா பிள்ளையும் ஒரு மிருதங்க இசைக் கலைஞர் என்பதால் அவரிடமிருந்து இசை கற்கத் தொடங்கினார்.

இவர் மே 27ஆம் தேதி 1962ஆம் ஆண்டு மறைந்தார்.

*ஹிட்லர்*

இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனுமான அடால்ஃப் ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற இடத்தில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்தார்.

இவர் மிக சிறந்த ஓவியர். உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். 1934ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.

பெயரைக் கேட்டாலே உலகமே நடுங்கும் ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என்று அழைக்கப்படும் இவர் 1945ஆம் ஆண்டு மறைந்தார்.

*பிலிப் பீனல்*


'நவீன மனநல மருத்துவத்தின் தந்தை' என போற்றப்படும் பிலிப் பீனல் 1745ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.

சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை. இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத இவர் 15 ஆண்டுகாலம் எழுத்தாளராக இருந்தார்.

பின்பு மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் மறைந்ததில் பாதிக்கப்பட்டு மனநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். அது பற்றிய குறிப்புகளை தொகுத்து 'மெமோர் ஆன் மேட்னஸ்' (Memoir on Madness) என்ற கட்டுரையை 1794ஆம் ஆண்டு வெளியிட்டார். தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப்புத்தகமாக உள்ளது.

மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்ட பிலிப் பீனல் 1826ஆம் ஆண்டு மறைந்தார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

(22-ஏப்) *உலக புவி தினம்*


புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் என்கிற அமெரிக்கர் கருதினார். எனவே அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார்.

1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி புவியைப் பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக புவி தினமாக மாறி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


*விளாதிமிர் லெனின்*

'லெனின்' என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ்.

இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார். மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கினார்.

1917ஆம் ஆண்டு மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் 1924ஆம் ஆண்டு மறைந்தார். இவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோலியம் என்று பெயர்.

*மோன்டால்சினி*

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

இத்தாலி அரசு 1938ஆம் ஆண்டு யூதர்களுக்கு மருத்துவத்தில் தடைவிதித்தது. இதனால், இவர் தனது அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டும் புரோட்டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய்இ அல்சீமர், மலட்டுத்தன்மை சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.

இவருக்கு நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்த கண்டுபிடிப்புக்காக 1986ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவருக்கு ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் தடை விதித்த அதே இத்தாலி அரசிடம்' 'நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்' என்ற பட்டத்தை பெற்ற ரீட்டா லெவி மோன்டால்சினி 2012ஆம் ஆண்டு மறைந்தார்.


*ஜெயமோகன்*

1962ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் பிறந்தார்.

இவர் தன்னை 'இந்தியத் தமிழ் மரபை நவீன காலக்கட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் ஜெயமோகன்' என அறியப்பட வேண்டும் என விரும்பினார்.

1978-ல் பள்ளிப்படிப்பு முடித்துஇ முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 2006ஆம் ஆண்டு வெளிவந்த கஸ்தூரி மான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம் ஆகும்.

2008ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார். 2012ஆம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான டீ.ஏ.ஷாஹித் விருது பெற்றார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(23-ஏப்) *உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்*

வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.


(23-ஏப்) *எஸ்.ஜானகி*


தென்றல் காற்று தேன் சொட்டுவது போல வசீகர குரல் கொண்ட புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.

சிறு வயதிலேயே பாடத் துவங்கிய இவர், நாதஸ்வர மேதை திரு.பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். அதன் பிறகு 1956ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஜானகி இரண்டாம் பரிசு பெற்றார். இப்பரிசினை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களின் கரங்களால் பெற்றார்.

1957ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் முதல் படத்தில் 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' மற்றும் 'மச்சானப் பார்த்திங்களா' போன்ற பாடல்கள், தமிழ்த் திரையிசையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதல்மரியாதை படத்தில் 'ராசாவே உன்னை நம்பி' என்பது முதல் துவங்கி தேசியவிருது பெற்றுத்தந்த 'இஞ்சி இடுப்பழகா' வரை உதாரணம் சொல்லலாம்.

ஜானகி ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் காதலன், உயிரே, ஜோடி, சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் பாடி இருக்கிறார். சங்கமம் படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 view0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page