top of page

(9-30) November
(09-நவ) *சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம்.* சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக சாதனைகளை தொகுத்து 1954ஆம் ஆண்டு முதன்முதலாக கின்னஸ் புத்தகம் வெளியிடப்பட்டது. முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இத்தினத்தின்போது கின்னஸ் சாதனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடப்படுகிறது. ---------------------------------------------------- *தேசிய சட்ட சேவைகள் தினம்.* சட்ட சேவைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி மாநில அதிகாரிகள் மூலம் கொண்டாடப்படுகிறது. சட்டக் கல்வி சார்ந்த முகாம்கள் நாட்டின் முக்கியமான தலைநகரங்களில் நடத்தப்படுகின்றன. ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்கள், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இயற்கை சீற்றத்தால் பாதித்தவர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உச்சநீதிமன்றம் 1995ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அன்று இலவச சட்ட சேவையை துவக்கியது. இளம் வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகளையும், அதன் தொடர்பான சட்டங்களையும் தெரிந்துகொள்ள இத்தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. -------------------------------------------- 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உத்தராஞ்சல், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மறைந்தார். (09-நவ) *முகமது இக்பால்.* கவிஞரும், மெய்யியல் அறிஞருமான சர் முகமது இக்பால் 1877ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள சியால்கோட்டில் பிறந்தார். இவர் சட்டம் பயிலும்போதே பல கவிதைகளைப் படைத்தார். இலக்கிய திறன்தான் இவரை உலகப்புகழ் பெற வைத்தது. இவர் எழுதிய 'சாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் 1947-ல் இந்திய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக ஒலித்தது. நவீனகால இஸ்லாமிய சிந்தனையாளர் எனப் போற்றப்பட்டார். இவரது முதல் கவிதை நூல் 1915-ல் வெளிவந்தது. கவிதைகள் தவிர சமூகம், கலாச்சாரம், மதம், அரசியல் தொடர்பாக உருது மற்றும் ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய உரைகள் பிரபலமானவை. உருது பேசும் மக்களால் *'கிழக்கின் கவிஞர்'* என்று குறிப்பிடப்பட்டார். பாகிஸ்தான் அரசு இவரை தேசியக் கவிஞராக அங்கீகரித்து, இவரது பிறந்த தினத்தை *'இக்பால் டே'* என்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற 'சாரே ஜஹான் ஸே அச்சா' பாடலை இயற்றிய மகத்தான படைப்பாளியான முகமது இக்பால் 1938ஆம் ஆண்டு மறைந்தார். *கவிக்கோ அப்துல் ரகுமான்.* 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தமிழ் கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்தார். இவர் தம் கல்லூரி படிப்பை முடித்தது, தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சில காலம் பணியாற்றினார். பின் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் சிற்றுரையாளராகவும், விரிவுரையாளராகவும், பேருரையாளராகவும், பேராசிரியராகவும் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். பின் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவர் பால்வீதி என்ற கவிதை தொகுப்பின் மூலம் அறிமுகமானார். அறிவுமதி கவிதைகள் இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர் 2017ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (10-நவ) *உலக அறிவியல் தினம்.* ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி அறிவியல் தினம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக கொண்டாடப்படுகிறது. நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தவும், அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். இத்தினத்தில், சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. 1970ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சோவியத்தின் லூனா 17 விண்கலம் சந்திரனுக்கு லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது. 2013ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தமிழக எழுத்தாளர், புஷ்பா தங்கதுரை மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (10-நவ) *மிக்கைல் கலாஸ்னிக்கோவ்.* ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாஸ்னிக்கோவ் 1919ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவரை கலாஸ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பார்கள். இவர் 1942ஆம் ஆண்டு முதல் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார். 1944ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து, வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை உருவாக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 1946ஆம் ஆண்டு தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். இதன் உச்சநிலையாக, 1947ஆம் ஆண்டு ஏகே-47 வகை தாக்குதல் துப்பாக்கியை உருவாக்கினார். இதன்பின் கலாஸ்னிக்கோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார். கலாஸ்னிக்கோவ் இருமுறை சோசியலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labourers) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார். *மார்ட்டின் லூதர்.* 1483ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் பிறந்தார். மார்ட்டின் லூதர் மதம் சார்ந்த இலக்கியங்களை ஆராய்ந்து படித்ததன் மூலம் இறையுணர்வு சார்ந்த நிலையையும், ஞானத்தையும் பெற்றார். 1533ஆம் ஆண்டு முதல் 1546ஆம் ஆண்டு வரை மார்ட்டின் லூதர் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையின் தலைவராக பணியாற்றினார். மார்ட்டின் லூதர் 1546ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (11-நவ) *நினைவுறுத்தும் தினம்.* நினைவுறுத்தும் தினம் நவம்பர் 11ஆம் தேதி பொதுநலவாயம் (Common Wealth of Nations) உறுப்பினர்களினால் கொண்டாடப்படுகிறது. இந்நாள் போரில் தன் உயிரை தியாகம் செய்த படைவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இத்தினத்தில் பொப்பி மலர்களை நினைவுக் குறியீடாக அணிந்துக் கொள்வார்கள். பொப்பிச் செடிகள், போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் அதிகமாக காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் வீரர்கள் சிந்திய இரத்தத்தின் நிறத்தை நினைவுப்படுத்துகிறது. முதலாம் உலகப்போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும், ஜெர்மானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இப்போர் நிறுத்தப்பட்டதையும், போரினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது. 1889ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தை பெற்றனர். 1966ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி நாசா ஜெமினி 12 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (11-நவ) *மௌலானா அபுல் கலாம் ஆசாத்.* இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தார். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இவர் 1947ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தார். கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை (IIT) 1951ஆம் ஆண்டு உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை 1953ஆம் ஆண்டு வடிவமைத்தார். இவர் சாகித்திய அகாடமியை உருவாக்க வழிவகுத்தார். இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என கனவு கண்டார். இவரது சாதனைகளை நினைவு கூறுவதற்காகவே இவரது பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உயிரோடு இருந்தபோது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்பொழுது பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார். 1992ஆம் ஆண்டு இவரின் மறைவிற்கு பிறகு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 1958ஆம் ஆண்டு மறைந்தார். *ஆச்சார்ய கிருபளானி.* இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆச்சார்ய கிருபளானி 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி. இவர் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். 1946ஆம் ஆண்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும், காங்கிரஸில் இருந்தும் விலகி, கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிறகு இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். சமூக, சுற்றுச்சூழல் நலன்களுக்காக பணியாற்றி வந்த இவர் 1982ஆம் ஆண்டு மறைந்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (12-நவ) *உலக நிமோனியா தினம்.* உலக நிமோனியா (நுரையீரல் அழற்சி) தினம் ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தோடு நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி முதலாவது உலக நிமோனியா தினத்தை கடைபிடித்தனர். பின்பு இத்தினம் 2010ஆம் ஆண்டு முதல் நவம்பர் 12ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. (12-நவ) *வல்லிக்கண்ணன்.* புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 1920ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி. இவர், தனது ஊர் பெயரில் உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன் ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. இவர் 70க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவரது 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலுக்காக 1978ஆம் ஆண்டு இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 'வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்' என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது. சுமார் 75 ஆண்டுகாலம் இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வல்லிக்கண்ணன் 2006ஆம் ஆண்டு மறைந்தார். *சலீம் அலி.* இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி 1896ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் மும்பை இயற்கை வரலாற்று கழக நிர்வாகி மில்லர்ட் என்பவரை சந்தித்து, அவரிடம் இருந்து பறவைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்துகொண்டார். பறவையியலில் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மனிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பினார். தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார். இவர் 'கேரளப் பறவைகள்' என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவர் பத்ம பூஷண், பத்ம விபூஷண் மட்டுமின்றி பல நாடுகளில் இருந்தும் பல்வேறு விருதுகள், சிறப்பு பட்டங்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுள்ளார். மக்கள் இவரை 'பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம்' என்றே அழைத்தனர். இவர் 1987ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (13-நவ) *உலக கருணை தினம்.* உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்தவும், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். (13-நவ) *பி.சுசீலா.* தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயநகரத்தில் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போது இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால், ஆந்திராவின் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். 1955ஆம் ஆண்டு இவர் பாடிய 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..', 'உன்னைக் கண் தேடுதே..' பாடல்களால் பிரபலமடைந்தார். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் இவர், சுமார் 25,000த்திற்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஐந்து முறை தேசிய விருதும் மற்றும் பத்து முறைக்கு மேல் மாநில விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷண்' விருதை 2008ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. இசைப் பணியாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் சுசீலா அவர்கள், தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி, கௌரவித்து வருகிறார். *ஹுவாங் சியான் புயான்.* 1899ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சீன வரலாற்றாளர் ஹுவாங் சியான் புயான் பிறந்தார். இவர் 1937ஆம் ஆண்டு ஜப்பானில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் 1953ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை குவாங்சி கற்பி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். மானிடவியலின் தந்தை எனப்படும் ஹுவாங் சியான் புயான் 1982ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------- (14-நவ) *உலக நீரிழிவு தினம்.* உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ஆம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டுறவு வார விழா : ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். 2015ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மறைந்தார். (14-நவ) *ஜவஹர்லால் நேரு.* சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார். இவர் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாள் இந்திய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். இவர் சிறந்த ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதிய ஆங்கில நூல்கள் 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா' மற்றும் 'க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி' ஆகியவை ஆகும். இவர் எழுதிய தமிழ் நூல்கள் உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு போன்றவை ஆகும். நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு முதல் மே 27, 1964ஆம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றினார். இவர் 1951ஆம் ஆண்டு, இந்திய திட்டக்குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கினார். 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது' என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். நேரு அவர்கள், 1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி மறைந்தார். *ராபர்ட் ஃபுல்டன்.* 1765ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நீராவிக் கப்பலை கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் ராபர்ட் ஃபுல்டன் பிறந்தார். இவருக்கு நீராவி இன்ஜின்களில் ஆர்வம் இருந்ததால் அதை படகுகளில் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ராபர்ட் ஃபுல்டன் 1800ஆம் ஆண்டு நெப்போலியன் போனபார்டின் அழைப்பை ஏற்று பாரிஸுக்கு சென்று நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தார். இதுதான் நடைமுறைக்கு வந்த முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இவர் உருவாக்கிய முதல் கப்பல் 'கிளர்மன்ட்', ஹட்சன் நதியில் வெள்ளோட்டத்திற்காக விடப்பட்டது. 1810ஆம் ஆண்டுக்குள் ஹட்சன், ராரிடன் நதிகளில் ராபர்ட் ஃபுல்டனின் 3 படகுகள் ஓடத் தொடங்கின. நீர்மூழ்கிக் கப்பல், நீராவி போர்க் கப்பல் ஆகியவற்றை வடிவமைத்த ராபர்ட் ஃபுல்டன் 1815ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்தார். இவரின் மறைவிற்கு பிறகு அமெரிக்காவில் பல இடங்களில் இவரது பளிங்குச் சிலையும், வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (15-நவ) *சானியா மிர்சா.* இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா 1986ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். சானியா மிர்சா தனது சிறு வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மற்றும் 2012ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் மகேஷ் பூபதியுடன் இணைந்தும், 2014ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரேசிலின் புருனோ சோரெஸ்வுடன் இணைந்தும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஏப்ரல் 2015ஆம் ஆண்டு பேமிலி கோப்பை டென்னிஸ் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து இரட்டையர் பட்டத்தை வென்றதை அடுத்து இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றார். இவருக்கு மத்திய அரசு 2016ஆம் ஆண்டு பத்மபூஷண் விருதை வழங்கி கௌரவித்தது. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (16-நவ) *சர்வதேச சகிப்புத்தன்மை தினம்.* சர்வதேச சகிப்புத்தன்மை தினம் நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமான யுனெஸ்கோ நிறுவனம் 1995ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது. இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1904ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஜான் பிளெமிங் வெற்றிடக் குழாயை கண்டுபிடித்தார். 1945ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (16-நவ) *ஜோஸ் டிசோஸா சரமாகூ.* இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ‌ போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் ஜோஸ் டிசோஸா சரமாகூ 1922ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி போர்ச்சுக்கல் நாட்டின் ரீபாட்டஜோ மாகாணத்திலுள்ள அசின்ஹாகா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முதல் நூலான 'லேண்ட் ஆஃப் சின்' 1947ஆம் ஆண்டு வெளியானது. 1950ஆம் ஆண்டின் இறுதியில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு பிரபல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர் 1966ஆம் ஆண்டு 'பாஸிபிள் போயம்ஸ்' என்ற கவிதை நூலை வெளியிட்டார். தொடர்ந்து, 'பிராபப்ளி ஜாய்', 'திஸ் வேர்ல்டு அண்ட் தி அதர்', 'டிராவலர்ஸ் பேக்கேஜ்' ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய 'பால்டாஸர் அண்ட் ப்ளிமுண்டா' என்ற நாவல் உலக அளவில், அங்கீகாரத்தையும், வாசகர்களையும் பெற்றுத் தந்தது. இந்த நாவலுக்கு போர்ச்சுக்கீசிய பென் கிளப் விருது கிடைத்தது. 1980ஆம் ஆண்டில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள் என ஏராளமான படைப்புகளை எழுதினார். இவருடைய உலகப் புகழ்பெற்ற நாவலான 'பிளைண்ட்னஸ்' , 1995ஆம் ஆண்டு வெளிவந்தது. 1998ஆம் ஆண்டு இவர் இலக்கியத்திற்காக நோபல் பரிசை பெற்றார். ஜோஸ் டிசோஸா சரமாகூ 2010ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------ (17-நவ) *ஜெமினி கணேசன்.* தமிழ் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் 1920ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். கல்யாணப்பரிசு, வஞ்சிக்கோட்டை வாலிபன், களத்தூர் கண்ணம்மா போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகும். இவர் திரைப்படத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம ஸ்ரீ' விருது, கலைமாமணி விருது மற்றும் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். ஜெமினி கணேசன் அவர்கள், 2005ஆம் ஆண்டு மறைந்தார். *சி.இலக்குவனார்.* சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் 1909ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு கிராமத்தில் பிறந்தார். இவர் தமிழ் வளர்ச்சிக்காக 1962ஆம் ஆண்டு தமிழ் காப்புக்கழகத்தை தொடங்கினார். முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 1973ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------- (17-நவ) *சர்வதேச மாணவர்கள் தினம்.* சர்வதேச மாணவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. 1939ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி செக்கோசிலோவாக்கியாவின் (ஐரோப்பா) தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் மாணவர் தலைவர்கள் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவம், செக்கோசிலோவாக்கியா ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளை இந்நாள் நினைவூட்டி வருகிறது. இத்தினம் முதன்முதலில் 1941ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. *உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்.* உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் நவம்பர் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். எனவே, அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1928ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------------------------------- (18-நவ) *திருமலை கிருஷ்ணமாச்சாரியார்.* இந்தியாவின் தலைசிறந்த யோகா குருவாகவும், ஆயுர்வேத பண்டிதராகவும் திகழ்ந்த திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1888ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்தில் முச்சுகுண்டபுரம் என்ற இடத்தில் பிறந்தார். 16 வயதில் இவருடைய கனவில் இவரின் மூதாதையரும், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைசிறந்த யோகியுமான நாதமுனி தோன்றி, தமிழகத்தின் ஆழ்வார் திருநகருக்குச் செல்லுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அதை மேற்கொண்டு இவர் தமிழகம் வந்தார். இவர் 1916ஆம் ஆண்டு யோகேஷ்வரா ராமா மோகனிடம் கல்வி பெற கைலாய மலைக்குச் சென்றார். அங்கு ஏழரை ஆண்டுகள் யோகா பயிற்சிகளை ஆழமாகப் பயின்றார். 11 வருடங்கள் பனாரசில் தங்கியிருந்தார். மைசூர் மகாராஜாவின் உதவியுடன் யோகசாலா என்ற பிரத்யேக யோகா அமைப்பை 1933ஆம் ஆண்டு தொடங்கினார். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரைகள் மூலமாகவும், செயல்முறை விளக்கம் மூலமாகவும் யோகாவை வளர்த்தார். யோகா பயிற்சி, ஆயுர்வேதம் மூலமாக நோய்களை குணப்படுத்தினார். யோக மகரன்தா, யோகாசனகளு, யோக ரஹஸ்யா, யோகாவளி ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். யோகாஞ்சலிசாரம், எஃபக்ட் ஆஃப் யோகா பிராக்டீஸ் உள்ளிட்ட பல கட்டுரைகளையும், கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற யோகா குருவாகப் போற்றப்பட்ட திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார். *பதுகேஷ்வர் தத்.* இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத் 1910ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் பர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கந்தகோஷ் கிராமத்தில் பிறந்தார். இவர் 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி புது டில்லியில் மத்திய சட்டமன்றத்தில் பகத் சிங்குடன் சேர்ந்து இரண்டு குண்டுகளை வெடித்ததற்காக மிகவும் பிரபலமானார். இதற்காக கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு, தத் காசநோயால் பாதிக்கப்பட்டார். ஆயினும்கூட, அவர் மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று மீண்டும் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 1965ஆம் ஆண்டு மறைந்தார். *சங்கு சுப்பிரமணியம்.* சங்கு சுப்பிரமணியம் தமிழக எழுத்தாளரும், இதழாளரும், நடிகரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் ஆவார். இவர் 1905ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், தேரழுந்தூரில், மீனாட்சி, சுந்தரம் எனும் தம்பதியருக்குப் பிறந்தார். 'சுதந்திர சங்கு' என்ற காலணா இதழைத் தொடங்கி மக்களிடம் சுதந்திர தாகத்தைத் தூண்டியவர் சுப்பிரமணியம். இப்பத்திரிகையை நடத்தியதால் இவர் சங்கு சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார். சுதந்திர சங்கு என்ற இதழின் மூலமாக விடுதலை வேட்கையை விதைத்து, பல எழுத்தாளர்களை உருவாக்கி, காந்தியத்தையும் பக்தியையும் தம் எழுத்துகள் வழியாக மக்களிடம் கொண்டு சென்ற சங்கு சுப்பிரமணிய 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மறைந்தார். ----------------------------------------------------------------------------------------- (19-நவ) *சர்வதேச ஆண்கள் தினம்.* சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. *உலக கழிப்பறை தினம்.* உலக கழிப்பறை தினம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை 2013ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. 2008ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தமிழ் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகரான M. N.நம்பியார் மறைந்தார். ----------------------------------------------------------------------------- (19-நவ) *இந்திரா காந்தி.* இந்தியாவின் துணிச்சல்மிக்க பெண்மணி இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள் ஆவார். 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்றார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், மத்திய அணுசக்தி துறை அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய விண்வெளித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி மறைந்தார். *இராணி இலட்சுமிபாய்.* விடுதலைப் போராட்ட வீரர் ஜான்சி இராணி 1828ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வாரணாசியில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த இராணி இலட்சுமிபாய் 1858ஆம் ஆண்டு தனது 29ஆம் வயதில் மறைந்தார். ----------------------------------------------------------------------------------------- (21-நவ) *உலக தொலைக்காட்சி தினம்.* உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது. 1996ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கின் பரிந்துரையின்படி ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அறிவித்தது. அதன்படி 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி முதன்முறையாக உலக தொலைக்காட்சி தினம் கொண்டாடப்பட்டது. *உலக மீனவர்கள் தினம்.* கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் விவாதித்தனர். அப்போது உலகளவில் இணைந்து மீனவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன்பிடி தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. *உலக ஹலோ தினம்.* 1973ஆம் ஆண்டு எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கிடையே நடைபெற்ற போரினை முடிவுக்கு கொண்டு வந்தது. இத்தினத்தில் போர் முடிவுக்கு வந்ததையடுத்துஇ நவம்பர் 21ஆம் தேதி இரு நாடுகளும் ஹலோ சொல்லிக்கொண்டனர். ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உலக ஹலோ தினம் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1905 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆற்றலுக்கும், பொருண்மைக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார். 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கட ராமன் மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------ (21-நவ) *ஐசக் பாஷவிஸ் சிங்கர்.* இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐசக் பாஷவிஸ் சிங்கர் 1902ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி போலந்து நாட்டின் லியான்சின் கிராமத்தில் பிறந்தார். இவர் நியூயார்க்கில் 'தி பார்வர்டு' என்ற இட்டிஷ் மொழி பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். தனிமை உட்பட பல்வேறு காரணங்களால் மனச் சோர்வுக்கு ஆளானார். அப்போதுதான் 'லாஸ்ட் இன் அமெரிக்கா' என்ற நாவலுக்கான கரு உதயமானது. இவர் எழுதிய 'தி ஸ்லேவ்' நாவல் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. குழந்தைகளுக்காக இவர் எழுதிய நூல்கள் மிகவும் பிரசித்தம். 18 நாவல்கள்இ குழந்தைகளுக்கான 14 புத்தகங்கள், ஏராளமான நினைவுச் சித்திரங்கள், கட்டுரைகள், சுயசரிதைகள் எழுதியுள்ளார். இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முக்கிய நபராகத் திகழ்ந்தார். அந்த மொழியில்தான் நூல்களை எழுதியும், வெளியிட்டும் வந்தார். 1978ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் வென்றார். சொந்த வாழ்வில் துயரங்கள், விரக்தி, வறுமையோடு போராடினாலும் படைப்புத் திறனால் உலகப்புகழ் பெற்று வெற்றிகரமான எழுத்தாளராக உயர்ந்த ஐசக் பாஷவிஸ் சிங்கர் 1991ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------------------------------------- (22-நவ) *ஜல்காரிபாய்.* சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போஜ்லா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம்‚ வாள்வீச்சு உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஜான்சி ராணி லட்சுமிபாய் இவரது போர்த்திறன்‚ துணிச்சல் வீரத்தைக் கண்டு ஆச்சரியமடைந்து‚ ஜல்காரிபாயை தன் படையில் சேர்த்துக்கொண்டார். ஜான்சி கோட்டையின் மீது ஆங்கில அரசு பலமுறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் படையெடுப்புகளை ஜான்சி ராணியின் வீரப்படை முறியடித்தது. அதில் இவரது பங்கு முக்கியமானது. 1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின்போது‚ மிகப்பெரிய படையுடன் ஆங்கில அரசு ஜான்சியை முற்றுகையிட்டது. கல்பி என்ற இடத்தில்‚ மற்ற புரட்சிப் படைகளுடன் இணைவதாக திட்டமிட்டிருந்த ஜான்சி ராணிக்கு‚ பெரிய படையை எதிர்த்துப் போரிடுவது சவாலாக இருந்தது. ராணி வேடத்தில் தானே முன்னின்று போரிடுவதாக கூறிய ஜல்காரிபாய்‚ தந்திரமாக ராணியை கோட்டையில் இருந்து தப்ப வைத்தார். அதே நேரத்தில் ஜான்சி படைக்கு தலைமை வகித்து வீரத்துடன் போரிட்டார். ஆனால்‚ மாபெரும் படையை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளிடம் பிடிபட்டார். ஜான்சி ராணியை பிடித்துவிட்டதாக கூறிய ஆங்கில அரசு ஜல்காரிபாயிடம் 'உங்களை என்ன செய்வது?' என்று கேட்டனர். அதற்கு 'தூக்கிலிடுங்கள்' என்றார். பின்னர்‚ அவர் ராணி அல்ல என்ற உண்மையை அறிந்த ஆங்கில அரசு‚ அவரது வீரத்தையும்‚ விவேகத்தையும் பாராட்டி விடுதலை செய்தது. ஜல்காரிபாய் 1858ஆம் ஆண்டு ஜான்சி போரின்போது வீரமரணம் அடைந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன. ------------------------------------------------------------------------------------------------- (23-நவ) *புட்டபர்த்தி சாய்பாபா.* 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தார். தென்னிந்திய ஆன்மிக குருவான இவரது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள்‚ பாடசாலைகள்‚ உயர்கல்வி நிலையங்கள்‚ கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மறைந்தார். *சுரதா.* கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார். செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ஆம் ஆண்டு சந்தித்தார். பின்பு சிறிதுகாலம் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இவர் மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு 1944ஆம் ஆண்டு வசனம் எழுதினார். அமுதும் தேனும் எதற்கு‚ ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்பது போன்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது‚ கலைமாமணி விருது‚ தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது‚ மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் பரிசுகளை பெற்றுள்ளார். மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 2006ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------------------------- (24-நவ) *படிவளர்ச்சி தினம்.* படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியை குறிப்பதாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்பட்ட நாளை நினைவுக்கூறும் வகையில் படிவளர்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி சார்லஸ் டார்வின்‚ ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் (On the origin of Species) என்ற நூலை வெளியிட்டார். 1891ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஆங்கிலேய ராஜ தந்திரியும்‚ கவிஞருமான லிட்டன் பிரபு மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------------------- (24-நவ) *அருந்ததி ராய்.* இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். இவரது பல படைப்புகள் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம்‚ குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை‚ அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை குறிப்பிட்டுள்ளன. மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இவருடைய எழுத்துக்கள் மக்களுக்கு சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள்‚ அரசியல் கட்டுரைகள் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார். 1997ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்-க்கு (The God of Small Things) புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாடமி பரிசை இவர் மறுத்து விட்டார். 2004ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசைப் பெற்றுள்ளார். ---------------------------------------------------------------------------------------------------------------------- (25-நவ) *சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்.* உலகளவில் பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான‚ நியாயமான முடிவுகளை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை முடிவெடுத்தது. எனவே 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஐ.நா. சபை கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை சர்வதேச தினமாக பிரகடனம் செய்தது. 1964ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிரபல வயலின் இசை கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடு மறைந்தார். 2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமை புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைந்தார். ---------------------------------------------------------------------- (25-நவ) *கார்ல் பென்ஸ்.* கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து‚ கற்பனையில் கணக்கற்ற வரைபடங்களாக தீட்டினார். பின்பு இயந்திரங்களின் சுழற்சி நுணுக்கங்களை அறிந்துகொண்டு‚ நான்கு சக்கர வண்டியைத் தயாரித்தார். அது நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். கை சுழற்சியால் சிறிது தூரம் அது தானாகவே ஓடும்படி செய்தார். பின்பு இவரது மனைவி பெர்த்தா ரிங்கருடன் இணைந்து ஸ்பார்க் பிளக்‚ கார்பரேட்டர்‚ கிளச்‚ கியர் ஷாப்ட் போன்றவற்றை உருவாக்கி காப்புரிமை பெற்றார். இவர்கள் 2-ஸ்ட்ரோக் இன்ஜினை வடிவமைத்து 1879ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றனர். பென்ஸ் அண்ட் ஸீ நிறுவனம் 1883ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பென்ஸ் நிறுவனத்தின் மோட்டார் வேகன் 1885ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எரிபொருளால் இயங்கும் முதல் வாகனம் இது. 1886ஆம் ஆண்டு இவர் இந்த வாகனத்திற்கான காப்புரிமையைப் பெற்றார். இவர்கள் தயாரித்த இருவர் பயணிக்கும் 'விக்டோரியா' வாகனம் (1893)‚ முதல் சரக்கு வாகனம் (1895) ஆகியவை நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 4000 வாகனங்கள் விற்பனையுடன் உலகின் முதல்தர வாகன உற்பத்தியாளர் என்ற மதிப்பை 1903ஆம் ஆண்டு பென்ஸ் நிறுவனம் பெற்றது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு‚ டிஎம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு‚ 'மெர்சிடிஸ்-பென்ஸ்' என்ற புதிய வடிவம் பெற்றது. அதுவே வர்த்தகப் பெயராக நிலைத்து நின்றது. உலகம் முழுவதும் நம்மைச் சுற்ற வைத்த சாதனையாளர் கார்ல் பென்ஸ் 1929ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------- (26-நவ) *இந்திய அரசியல் சாசன தினம் .* இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதல்முறையாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும்‚ நினைவுக்கூறும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால்‚ அரசியல் சாசன தினம் துவங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. *உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்.* பருமனற்ற உடலே பாதுகாப்பானது மற்றும் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக இருப்பதை உடல் பருமன் என்கின்றனர். அதிகமான கொழுப்பு சேருவது உடல் நலத்திற்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாகும். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1983ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பேஸ்புக் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ் ஹக்ஸ் அமெரிக்காவில் பிறந்தார். 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார். [-------------------------------------------------------------------------------------------- (26-நவ) *எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன்.* சர்வதேச மருத்துவ அறிஞர் எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன் 1948ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஆஸ்திரேலியா‚ தாஸ்மானியா தீவின் ஹோபர்ட் என்ற இடத்தில் பிறந்தார். இவரும்‚ இவரது உதவியாளர் கரோல் டபிள்யு கிரைடர் என்பவரும் டி.என்.ஏ.விலிருக்கும் புதிய டெலோமியர்களை ஒன்றிணைத்து அவற்றின் நீள‚ அகலங்களைக் கட்டுப்படுத்தும் டெலோமெரிஸ் என்ற என்சைமை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர். இந்த அபாரமான கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள உயிரியலாளர்களுக்கு மரபணு செல்களின் சிக்கலான செயல்பாடுகளையும்‚ அவற்றை இரட்டிப்பாக்கும் தன்மையைப் புரிந்துகொள்ளவும் வழிவகுத்தது. நுண்ணுயிரியலுக்கான எல்லி லில்லி விருது 1988ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு தனது குழுவைச் சேர்ந்த கரோல் கிரெய்ட்டர்‚ ஜாக் சொஸ்டாக் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார். டெலோமியர்கள் மற்றும் புற்றுநோய் குறித்து இடைவிடாமல் உரையாற்றுவதிலும்‚ கருத்தரங்குகள் நடத்துவதிலும் ஈடுபாடு உடையவர். --------------------------------------------------------------------------------------------------------- (27-நவ) *புரூஸ் லீ.* உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும்‚ பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-வில் பிறந்தார். யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றார். இவர் தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சொந்தமாக ஒரு நூலகமே வைத்திருந்தார். சீன தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில்‚ தற்காப்பு பயிற்சிப் பள்ளியை தொடங்கினார். மேற்கத்திய மல்யுத்தம்‚ ஜூடோ‚ கராத்தே‚ குத்துச்சண்டையுடன் சில புதிய முறைகளையும் சேர்த்து புது வடிவிலான தற்காப்பு கலையை உருவாக்கினார். 'ஜீட் குன் டோ' என்ற கலை இவரால் பிரபலமடைந்தது. இவர் 1971ஆம் ஆண்டு 'தி பிக் பாஸ்' படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஆசிய கண்டத்தை அசத்தியது. சண்டைக் காட்சிகளில் இவரது வேகத்துடன் கேமராவின் வேகம் ஈடுகொடுக்க முடியாமல் 24 என்று இருந்த ஃபிரேம் அளவை 34-ஆக மாற்றிய ஹாலிவுட் வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது. நான்கு திரைப்படங்கள் மட்டுமே நடித்து‚ உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சாதனையாளரான புரூஸ் லீ 1973ஆம் ஆண்டு மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு வெளிவந்த 'என்டர் தி டிராகன்' படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகெங்கும் உள்ள இளைஞர்களை ஈர்த்த தனிமனிதன் இவராகத்தான் இருக்க முடியும். *சுரேஷ் ரெய்னா.* 1986ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா. இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பிரபலமானவர். இவர் ஒரு மிகச்சிறந்த இடது கை ஆட்டக்காரர். டி20 போட்டிகளில் இந்தியாவின் மிக இளம் வயது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர். ஒருநாள்‚ டெஸ்ட்‚ டி20 என மூன்று விதமான கிரிக்கெட்களிலும் செஞ்சுரி அடித்த முதல் இந்திய வீரர் ரெய்னா ஆவார். நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு 2011ஆம் ஆண்டு CEAT T20 சர்வதேச சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றார். ------------------------------------------------------------------------------------------------- (28-நவ) *ஜேம்ஸ் ஆலன்.* ஜேம்ஸ் ஆலன் (28 நவம்பர் 1864 - 24 சனவரி 1912) ஆங்கில தத்துவ எழுத்தாளர், சுய முன்னேற்றம் மற்றும் உத்வேகம் அளிக்கும் புத்தகங்கள் எழுதுவதில் வல்லவராக அறியப்படுபவர். 1903 ஆண்டு வெளிவந்து பெருமளவில் விற்றகப்பட்ட *"ஒரு மனிதனின் சிந்தனையில்"* என்ற புத்தகம் இவருக்கு பெருமையை தேடித் தந்தது. இப்புத்தகம் சுய முன்னேற்றம் சார்ந்து உத்வேகம் அளித்து பல எழுத்தாளர்களை ஊக்குவித்தது. இங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதியில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். தனது 15 ஆம் வயதில் தந்தையை இழந்ததனால் பள்ளிப் படிப்பை துறந்து வேலைக்கு சென்றார்.1893 ல் லண்டன் சென்று பத்திரிகை துறையில் பணியாற்றுகையில், எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1902 ல் *"வறுமையிலிருந்து பலத்திற்கு"* என்ற முதல் படைப்பை வெளியிட்டு அது முதற்கொண்டு பல நூல்களை எழுதினார், அதிலும் 1903 ல் எழுதிய "ஒரு மனிதனின் சிந்தனையில்" என்ற புத்தகத்தில் உத்வேக கருத்திகளினால் அப்புத்தகம் உலகம் முழுவதும் பிரபலமானது. அவர் தனது வாழ்க்கை அனுபவித்திலிருந்தே மனிதன் வாழத் தேவையான உண்மைகளை எழுதினார். 1912 ல் இறக்கும் வரை தொடர்ந்து எழுதி வந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------------- (29-நவ) *சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்.* சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் நவம்பர் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் போனது. எனவே பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டு இத்தினம் அறிவிக்கப்பட்டது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- (29-நவ) *என்.எஸ்.கிருஷ்ணன்.* தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார். இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி‚ கடலை மிட்டாய்‚ முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். இவர் பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார். இவர் பல நாடகங்களை எழுதி இயற்றியுள்ளார். இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதுள்ள ஈர்ப்பு இவருக்கு குறையவில்லை. இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் 'சதிலீலாவதி'. சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு‚ 'சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்' என்று தன்னடக்கத்துடன் கூறினார். குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு 'கலைவாணர்' பட்டம் வழங்கப்பட்டது. நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய கலைவாணர் 1957ஆம் ஆண்டு மறைந்தார். *தக்கர் பாபா.* தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த அம்ரித்லால் விதல்தாஸ் தக்கர் பாபா 1869ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி குஜராத் மாநிலம் பாவ்நகரில் பிறந்தார். இவர் ஷோலாப்பூர்‚ பாவ்நகர்‚ போர்பந்தர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு இவர் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் 1900ஆம் ஆண்டு உகாண்டா நாட்டுக்கு சென்றார். பின்பு தாயகம் திரும்பியதும்‚ சாங்லி நகரில் ரயில்வே தலைமைப் பொறியாளர் வேலை கிடைத்தது. அப்போது கோபாலகிருஷ்ண கோகலே மூலம் மகாத்மா காந்தியின் அறிமுகமும் கிடைத்தது. தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் விடிவெள்ளியாக இருந்து அவர்களது குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட‚ ஆதிவாசி மக்களுக்காக பாபா சேவையாற்றியதுபோல என்னால்கூட தொண்டு செய்ய முடியவில்லை. பாபாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் காந்திஜி. தீண்டாமையை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தக்கர் பாபா 1951ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------- (30-நவ) *கணினி பாதுகாப்பு தினம்...!.* கணினி பாதுகாப்பு தினம் 1988ஆம் ஆண்டில் தொடங்கியது. கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட‚ அவை பொதுவானதாகிவிட்டன. 1980களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும்‚ அரசாங்கத்திலும் தான் அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலமாக இருந்தது. இந்த நாட்களில்‚ ஸ்மார்ட் போன்கள்‚ டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. முன்பை விட தகவல்தொடர்பு எளிதாகவும்‚ திறமையாகவும் மாறிவிட்டாலும்‚ இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளன. உங்கள் ஆன்லைன் தரவைப் பாதுகாக்கவும்‚ பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒரு விடுமுறை கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே கணினி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1872ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி உலகின் முதலாவது அனைத்துலக கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும்‚ இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் மறைந்தார். 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜரால் மறைந்தார். 2013ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்க நடிகர் பால் வாக்கர் மறைந்தார். 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் மறைந்தார். ------------------------------------------------------------------------------------------------------------------- (30-நவ) *ஜெகதீஷ் சந்திர போஸ்.* தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில்‚ ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். லண்டனில் இருக்கும்போது லார்ட் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார். கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் ஜெகதீஷ் சந்திர போஸ் இயற்பியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2/3 பங்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள்‚ அவர்கள் முழு ஊதியத்தையும் வாங்க தகுதி அற்றவர்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் ஜெகதீஷ் சந்திர போஸின் அறிவுக்கூர்மையை பாராட்டி அவருக்கு முழு ஊதியமும் வழங்கப்பட்டது. நிலுவையில் இருந்த தொகையும் வழங்கப்பட்டது. இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து‚ மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். இவர் இயற்றிய நூல்கள் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-living) மற்றும் தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Machanism of Plants). ஜெகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியையும்‚ புகழையும் ஈட்டினார். இந்தியாவின் புகழை உலகெங்கும் மிளிரச் செய்த இவர் 1937ஆம் ஆண்டு மறைந்தார். *கே.ஆர்.விஜயா.* 1948ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி புகழ்பெற்ற நடிகை கே.ஆர்.விஜயா கேரளா மாநிலத்திலுள்ள திருச்சூரில் பிறந்தார். தமிழ்‚ கன்னடம்‚ மலையாளம்‚ தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்தது.

0 views0 comments

Recent Posts

See All

Comentarios


bottom of page