top of page

செப்டம்பர்-September (01-12)




(01-செப்) *உலக கடித தினம்.* ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார். (01-செப்) *புலித்தேவர்.* இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் *'காத்தப்ப பூலித்தேவர்'* என்பதாகும். 'பூலித்தேவர்' என்னும் பெயர் 'புலித்தேவர்' என்று அழைக்கப்பட்டது. இந்திய விடுதலை வரலாற்றில் *'வெள்ளையனே வெளியேறு'* என்று முதல்முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. *அ.வரதநஞ்சைய பிள்ளை.* 1877ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழரசி குறவஞ்சி, கருணீக புராணம் போன்ற நூல்களின் ஆசிரியர் தமிழறிஞர் அ.வரதநஞ்சைய பிள்ளை பிறந்தார். தமிழுடன் தெலுங்கையும், வடமொழியையும் அறிந்த இவர் கவிபாடுவதில் வல்லவர். கரந்தைச் தமிழ்ச் சங்கத்தில் 'ஆசிரியர்' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர். கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொழுது ஞானியாரடிகள் தலைமையில் தமிழரசி குறவஞ்சியை அரங்கேற்றிய இவர் 1956ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------------- (02-செப்)*உலக தேங்காய் தினம்.* ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும். (02-செப்) *பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு* நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு 1853ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார். இவர் மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது *'ஆஸ்வால்டு நீர்த்தல் விதி'* எனப்படுகிறது. வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1909ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ (03-செப்) *கிரண் தேசாய்.* மிக இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் 1971ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பிறந்தார். இவரது முதல் நாவலான *'ஹூல்லபல்லு இன் தி கோவா ஆர்சர்ட்'* 1998ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நாவல் பெட்டி ட்ராஸ்க் விருதைப் பெற்றுள்ளது. இவருடைய அடுத்த நாவலான *'தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ்'* பல இலக்கிய திறனாய்வாளர்களின் பாராட்டினைப் பெற்றதுடன் 2006ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினையும் இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. *ஜேம்ஸ் சில்வெஸ்டர்.* 1814ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் சில்வெஸ்டர் லண்டனில் பிறந்தார். லண்டனிலுள்ள *'யூனிவர்சிடி காலேஜ்'* ஸில்வெஸ்டர் அறிவியல் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். சில்வெஸ்ட்டர் பதக்கம் பெற்ற இவர் 1897ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------------------------------- (04-செப்) *தாதாபாய் நௌரோஜி.* சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நௌரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார். இவர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளி விவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870ஆம் ஆண்டு சுட்டிக்காட்டினார். 'பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா' என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். தாதாபாய் நௌரோஜி 1917ஆம் ஆண்டு மறைந்தார். *ஜேக்குவிலைன் எவிட்.* 1958ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அமெரிக்க வானியற்பியலாளரான ஜேக்குவிலைன் எவிட் பிறந்தார். இவர் 1988ஆம் ஆண்டு பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் துறையில் அறிவியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். பின் இயற்பியல் பேராசிரியராக மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் மின்னணுவியல் துறை கதிர்வானியல் குழு ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளராக பணியாற்றினார். 1995ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுக்கான அரோல்டு யூகின் எட்கெர்டன் விருதும், 1995ஆம் ஆண்டின் கதிர்வானியல் பணிக்காக மரியா கோயபர்ட் மேயர் விருதும் பெற்றள்ளார். *பூபேந்திரநாத் தத்தர்.* 1880ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான பூபேந்திரநாத் தத்தர் பிறந்தார். ஜுகாந்தர் அமைப்பின் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். இவர் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இவரின் இல்லம் சுவாமி விவேகானந்தரின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு இராமகிருசுண இயக்கம் கிளையாக பல்வேறு மக்கள் நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர் 1961ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மறைந்தார். இவரை போற்றும் விதமாக இவரது பெயரில் கல்லூரி இயங்கி வருகிறது. -------------------------------------------------------------------------------------------------- (05-செப்) *ஆசிரியர் தினம்.* ஆசிரியர் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை நினைவுக்கூறும் விதமாக இத்தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. *உலக கருணை தினம்.* உலக கருணை தினம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும் இத்தினம் ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டது. (05-செப்) *வ.உ.சிதம்பரம்பிள்ளை.* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. அக்டோபர் 1906ஆம் ஆண்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரை தேவர் பதவி ஏற்றுக் கொண்டார். வ.உ.சி விடுதலை போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மறைந்தார். *டாக்டர் ராதாகிருஷ்ணன்.* நாட்டின் 2வது ஜனாதிபதியும், தத்துவமேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1923ஆம் ஆண்டு இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார். இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம், காந்தி. இவர் நாட்டின் முதல் குடியரசு துணைத்தலைவராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் 1975ஆம் ஆண்டு மறைந்தார்.


-------------------------------------------------------------------------------------------------------

(06-செப்) *ஜான் டால்டன்.* அணுக்கொள்கையின் தந்தை, ஜான் டால்டன் 1766ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பலவித நீர்மங்களின் ஆவியழுத்தத்தை கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை கண்டறிந்தார். இவர் மிகச்சிறிய பிளக்க முடியாத அடிப்படை பொருளுக்கு அணு என்று பெயரிட்டார். மேலும், அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டார். நவீன அணுக்கோட்பாட்டை உருவாக்கிய ஜான் டால்டன் 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மறைந்தார். *சரத் சந்திர போஸ்.* 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், வழக்கறிஞராகவும் விளங்கிய சரத் சந்திர போஸ் பிறந்தார். இவர் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஷின் அண்ணன் ஆவார். 1936ஆம் ஆண்டில் வங்கப் பிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவர் ஆனார். பின் 1936ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் உறுப்பினராக இருந்தார். சரத் சந்திர போஸ் ஜப்பானிய அரசுடன் தொடர்பு வைத்திருந்து, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக துரோகம் செய்ததாக குற்றம் சாற்றப்பட்டு 1941ஆம் ஆண்டில் டிசம்பர் 12ஆம் தேதி கைதானார். 1945ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப் பட்டார். பின் இவர் பிப்ரவரி 20ஆம் தேதி 1950ஆம் ஆண்டு மறைந்தார். *நார்மன் ஜோசப் உட்லேண்ட்.* 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பார்கோடை கண்டறிந்தவர்களுள் ஒருவரான நார்மன் ஜோசப் உட்லேண்ட், நியூ ஜெர்சியிலுள்ள அட்லாண்டிக் நகரத்தில் பிறந்தார். ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர், பார்கோடு கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார், அதற்காக இவர் அக்டோபர் 1952ஆம் ஆண்டில் காப்புரிமை பெற்றார். 1992ஆம் ஆண்டு பார்கோடு தொழில்நுட்பத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷிடம் இருந்து தேசிய தொழில்நுட்பப் பதக்கம் வழங்கப்பட்டது. 1998ஆம் ஆண்டில் அல்மா மேட்டர் டெக்சல் பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவப் பட்டம் பெற்ற இவர் டிசம்பர் 9ஆம் தேதி 2012ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------------------------------------------------- (07-செப்) *மம்முட்டி.* 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி மலையாள நடிகர் மம்முட்டி, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகே பிறந்தார். இவர் நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998ஆம் ஆண்டு பெற்றார். *கோபிநாத் கவிராஜ்.* சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1887ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தார். யோகியாக, தாந்த்ரீக ஞானியாக விளங்கிய இவர், படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார். 'விஷீத்த வாணி', 'அகண்ட மஹாயோக்', 'பாரதிய சன்ஸ்க்ருதி கீசாதனா', 'தாந்த்ரிக் சாஹித்ய' உட்பட பல நூல்களைப் படைத்தார். பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1934ஆம் ஆண்டு 'மகாமகோபாத்தியாய' விருது வழங்கி சிறப்பித்தது. பத்ம விபூஷண்இ சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. வேதம், பண்டைய இந்திய வரலாறு, புராணங்கள், இந்திய-ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சாஸ்திரங்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தார். தத்துவங்கள், மதங்கள் தொடர்பான 1இ500 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார். புத்தக அறிவு போதாது, அது சுய அறிதலோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுவார். தலைசிறந்த தத்துவ ஞானியான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1976ஆம் ஆண்டு மறைந்தார். --------------------------------------------------------------------------- (08-செப்) *தேசிய கண் தான தினம்.* இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய அரசு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. *உலக எழுத்தறிவு தினம்.* உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1965ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில்தான் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. தனி மனிதர்களுக்கும், பல்வேறு வகுப்பினருக்கும், சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்நாளின் குறிக்கோள் ஆகும். (08-செப்) *தேவன்.* பிரபல நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார். இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர் சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். இவர் வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ் என்று அசோகமித்திரன் இவரை குறிப்பிட்டுள்ளார். கால் நூற்றாண்டு காலத்து கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உலக விஷயங்களை யதார்த்தமான, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுத்திய தேவன் 1957ஆம் ஆண்டு மறைந்தார். *பூபேன் அசாரிகா.* 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இந்தியக் கவிஞரான பூபேன் அசாரிகா பிறந்தார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இசையமைப்பாளராக நாட்டுப்புற இசை கலந்த தற்கால இசையமைப்புக்காக அறியப்பட்டார். தனது தாய்மொழியான அசாமிய மொழி தவிர இந்தி, வங்காள மொழி எனப் பிற மொழிகளிலும் பாடியுள்ளார். பாரத ரத்னா, பத்ம பூசண், சங்கீத நாடக அகாடமி விருது பொன்ற விருதுகளை பெற்ற இவர் 2011ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மறைந்தார். ---------------------------------------------------------------------------------------- (09-செப்) *'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி.* புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான *'கல்கி'* ரா.கிருஷ்ணமூர்த்தி 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் பிறந்தார். இவர் எழுதிய பிரச்சார துண்டுகளை பார்த்த காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.எஸ்.ராஜன், 'நீ எழுத்துலகில் சாதிக்க வேண்டியவன்' என்றார். அவரது ஆலோசனைப்படி 'நவசக்தி' பத்திரிக்கையில் சேர்ந்தார். நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிக்கை தொடங்க விரும்பினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய நிதியுடன் 'கல்கி' பத்திரிக்கை தொடங்கப்பட்டது. இவரது படைப்பாற்றலால் பத்திரிக்கை விரைவிலேயே அபார வெற்றி பெற்றது. இவர் 35 சிறுகதை தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள் பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது 'பார்த்திபன் கனவு' தமிழின் முதல் சரித்திர நாவலாகும். அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான 'சிவகாமியின் சபதம்', சமூகப் புதினமான 'அலைஓசை' ஆகியவையும் பெரும் வரவேற்பை பெற்றன. 1951ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தை பெற்றுத்தந்தது. அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது. 'கல்கி' இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது. முன்னோடி பத்திரிக்கையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கல்கி 1954ஆம் ஆண்டு மறைந்தார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ---------------------------------------------------------------- (10-செப்) *உலக தற்கொலை தடுப்பு தினம்* உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது. கடந்த 2011ஆம் ஆண்டில் சுமார் 40 நாடுகள் உலக தற்கொலையை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கிறார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தற்கொலை செய்வதை தடுக்க அதை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால்தான் இந்த கொடிய நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும். *உலக முதலுதவி தினம்.* முதலுதவி பல உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று, உலக முதலுதவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் செப்டம்பர் 11ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. (10-செப்) *அ.நாராயணசாமி.* 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி நற்றிணைக்கு உரை எழுதிய தமிழறிஞர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூரில் பிறந்தார். இவர் 1899ஆம் ஆண்டு முதல் 1914ஆம் ஆண்டு வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். காளிதாசன் வடமொழியில் இயற்றிய பிரகசன என்னும் நாடக நூலை தமிழில் மொழிபெயர்த்தார். நாராயணசாமி நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் 1914ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி மறைந்தார். *சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ்.* 1839ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி அமெரிக்க தத்துவவாதி, கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானி சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ், கேம்பிரிட்ஜில் பிறந்தார். இவர் 'நடைமுறைவாதத்தின் தந்தை' (The Father of the Pragmatism) என்று அழைக்கப்படுகிறார். வேதியியலாளராக படித்து முப்பது வருடங்களாக விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார். இவர் ஏப்ரல் 19ஆம் தேதி 1914ஆம் ஆண்டு மறைந்தார். *குன்பெய் யோகோய்.* ஜப்பானிய வீடியோ விளையாட்டு வடிவமைப்பாளர், குன்பெய் யோகோய் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார். கேம் பாய் என்ற வீடியோ விளையாட்டு சாதனத்தை உருவாக்கியவர் இவர்தான். குன்பெய் யோகோய் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி மறைந்தார். 2003ஆம் ஆண்டு, யோகோய் மறைந்த பின்னர் சர்வதேச விளையாட்டு உறுப்பினர்கள் சங்கம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. ---------------------------------------------------------------------------------- (11-செப்) *வினோபா பாவே.* சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார். இவர் 'மகாராஷ்டிர தர்மா' என்ற மாத இதழை 1923ஆம் ஆண்டு தொடங்கினார். கதர் ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார். தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். *'பூதான்'* எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். எனவே, இவர் பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார். 'என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர்' என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும், தலைவர்களாலும் *'ஆச்சார்யா'* என்று போற்றப்பட்ட வினோபா பாவே 1982ஆம் ஆண்டு மறைந்தார். *இரோசி அமானோ.* LED விளக்கை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுள் ஒருவரான ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் இரோசி அமானோ 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அகசகி, சுச்சி நாகமுரா ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார். இந்த நோபல் பரிசானது திறன்மிக்க நீலநிற ஒளியுமிழி அல்லது ஒளியீரி (Diode) என்னும் குறைக்கடத்தி கருவியை கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டது. *ஓ ஹென்றி.* 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஆங்கில எழுத்தாளர் ஓ ஹென்றி, வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார். 1876ஆம் ஆண்டில் ஹென்றி தனது தொடக்கக் கல்வியை முடித்துக் கொண்டு, லிண்ட்சே தெரு உயர் பாடசாலையில் (Lindsey Street High'School) சேர்ந்தார். பின் ஆஸ்டினில் இசை மற்றும் நாடகக் குழுக்களில் இணைந்து பணியாற்றினார். சிறுகதைகள், பத்திரிகைகள் என பல எழுதிய இவர் 1910ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி மறைந்தார். ---------------------------------------------------------------------------------------------- (12-செப்) *சி.வை.தாமோதரம்பிள்ளை.* தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை 1832ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். 1895ஆம் ஆண்டு இவருக்கு அரசு 'ராவ் பகதூர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1901ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் தாமோதரம்பிள்ளை மறைந்தார். *ஐரீன் ஜோலியட் கியூரி.* செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளரான ஐரீன் ஜோலியட் கியூரி 1897ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பாரிஸில் பிறந்தார். இவரும், இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர். இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிடைத்தது. ஐரீன் ஜோலியட் கியூரி 1956ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பாரிஸில் மறைந்தார்.

1 view0 comments

Recent Posts

See All
bottom of page