top of page

செப்டம்பர்- September(13-19)



(13-செப்) *சர்வதேச சாக்லேட் தினம்.* உலகமெங்கும் சர்வதேச சாக்லேட் தினம்

13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மில்டன் எஸ்.ஹெர்ஷே என்பவர், 'கார்மெல் கேண்டி' சாக்லேட்டை கண்டுபிடித்தார். 1990ஆம் ஆண்டு அந்த சாக்லேட்டிற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது. இவருடைய பிறந்த நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம். தொடர்ந்து சாக்லேட் எடுத்துக் கொள்வதால் பக்கவாத பாதிப்பு 21 சதவீதமும், இருதயம் தொடர்பான நோயில் இருந்து 29 சதவீதமும், இருதய நோயால் உயிரிழப்பதில் இருந்து 45 சதவீதமும் பாதுகாப்பு கிடைக்கிறது என மருத்துவ ரீதியான ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. (13-செப்) *சையது முஜ்தபா அலி.* வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமான சையது முஜ்தபா அலி 1904ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் (தற்போது அசாமில் உள்ளது) பிறந்தார். வங்காள மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் பிரெஞ்ச், அரபி, பாரசீகம், உருது, இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் நிபுணராக திகழ்ந்தார். சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் பல கதைகளை எழுதினார். இவரது தனித்துவமான பாணியால் இக்கதைகள் மிகவும் பிரபலமடைந்தன. *'தேஷெ பிதேஷெ', 'ரம்ய ரசனா', 'பஞ்சதந்த்ரா'* ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும். இவர் ஆனந்த புரஸ்கார் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். கால, தேச, மத, மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படைப்பாளியான சையத் முஜ்தபா அலி 1974ஆம் ஆண்டு மறைந்தார். -------------------------------------------------------------------- (14-செப்) *சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்.* உலகம் முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம் (அ) சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும், பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். நமது பாரத நாடும் பழம் பெருமைமிக்க கலாச்சாரப் பண்புகளால் உலக அரங்கில் தலைசிறந்தே விளங்கி வருகிறது. இதை போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. *ஹிந்தி தினம்..* இந்திய அரசு ஹிந்தியை ஆட்சி மொழியாக, 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று ஏற்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தியை பரப்பும் வகையிலும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஹிந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. (14-செப்) *வில்லியம் பெண்டிங் பிரபு.* ♚ பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். ♚ இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1803ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார். ♚ இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை. ♚ வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வில்லியம் பெண்டிங் பிரபு 1839ஆம் ஆண்டு பிரான்சில் மறைந்தார். -------------------------------------------------------------------- (15-செப்) *உலக லிம்போமா விழிப்புணர்வு தினம்.* உலக லிம்போமா விழிப்புணர்வு தினம் (WLAD) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. லிம்போமா என்பது ஒரு வகை ரத்த புற்றுநோயாகும். லிம்போமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. *சர்வதேச மக்களாட்சி தினம்.* ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஆம் தேதியை அறிவித்தது. (15-செப்) *எம்.விஸ்வேஸ்வரய்யா* உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யாy 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட்டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர், மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க நீர்த்தேக்கத்தில் வெள்ளத்தடுப்பு அமைப்பு முறையை (Weir Water Floodgates) உருவாக்கினார். ஆங்கில அரசின் சர் பட்டமும், பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார். இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் 1962ஆம் ஆண்டு மறைந்தார். *சி.என்.அண்ணாதுரை.* தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய 'அறிஞர் அண்ணா' சி.என்.அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பிறகு தி.க.வில் இருந்து விலகி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக 1962ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில்க்கி இவரது திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரானார். இவரே மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார். அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969ஆம் ஆண்டு மறைந்தார். இவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. -------------------------------------------------------------------------- (16-செப்) *உலக ஓசோன் தினம்.* பூமிக்கு கவசம் போல இருக்கும் ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்தபோது அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1987ஆம் ஆண்டு ஓசோன் படலம் குறித்த சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. ஐ.நா.சபையானது, செப்டம்பர் 16ஆம் தேதியை உலக ஓசோன் தினம்ஃஉலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது. ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், நம்முடைய நடவடிக்கைகள் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். (16-செப்) *எம்.எஸ்.சுப்புலட்சுமி.* ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்தார். 1926ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் *'மரகத வடிவும் செங்கதிர் வேலும்'* என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு. இவருக்கு பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர் விருது, பத்ம விபூஷண், சங்கீத கலாசிகாமணி விருது, காளிதாஸ் சம்மன் விருது, பாரத ரத்னா மற்றும் மகசேசே பரிசு போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி சென்னையில் மறைந்தார். *ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி.* வைட்டமின் சி-யை கண்டுபிடித்தவரும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஹங்கேரி ஆராய்ச்சியாளருமான ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார். செல்கள்இ வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1937ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இறுதிவரை மனிதகுல நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1986ஆம் ஆண்டு மறைந்தார். ------------------------------------------------------------------------------------------- (17-செப்) *ஈ.வெ.இராமசாமி.* பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். *நரேந்திர மோடி.* இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார். ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார். பிறகு 1998ஆம் ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, விரைவில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றார். மீண்டும் 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். *உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்.* உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்துஇ நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும், தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003ஆம் ஆண்டு அறிவித்தது. *உலக மூங்கில் தினம்.* உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்சைடு) எடுத்துக்கொண்டுஇ அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். இயற்கை, இந்தியாவிற்கு கொடுத்த கொடை 'மூங்கில்'. இதை மத்திய அரசாங்கம் 'தேசிய மூங்கில் இயக்கம்' (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது. ---------------------------------------------------------------------------------------- (18-செப்) *சாமுவேல் ஜான்சன்.* ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். ஆங்கிலேய இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்கை வரலாற்றாளரும், இதழாசிரியரும் மற்றும் அகராதியியலாளரும் ஆவார். இவரது அகராதி 1755ஆம் ஆண்டில் வெளியானது. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகராதியாக விளங்கி வந்தது. இவர் 1784ஆம் ஆண்டு மறைந்தார். *சு.நெல்லையப்பர்.* 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி விடுதலை போராட்ட வீரர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் பரலி சு.நெல்லையப்பர் பிறந்தார். இவர் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர் என்னும் பன்முகம் கொண்டவர். இவர் 1908ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டு வரை அனைத்து சுகந்திரப்போராட்டத்திலும் கலந்துகொண்டார். அதனால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். பன்முகம் திறன் கொண்ட இவர் 1971ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி மறைந்தார். --------------------------------------------------------------------------- (19-செப்) *சுனிதா வில்லியம்ஸ்.* இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள யூக்ளிட் என்ற இடத்தில் பிறந்தார். 1987ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார். 2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவர் பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியை கத்தரித்தார். சர்தார் வல்லபாய் படேல் விஸ்வ பிரதீபா விருது, நேவி கமென்டேஷன் விருது, நேவி மற்றும் மரைன் கார்ப்ஸ் சாதனை விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார். *வில்லியம் கோல்டிங்.* இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள்ள நியூகி நகரில் பிறந்தார். இவர் பல கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல முறை நிராகரிக்கப்பட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதினார். இவர் லார்டு ஆஃப் தி ப்ளைஸ் என்ற நாவலை 1954ஆம் ஆண்டு எழுதினார். நன்மை, தீமை இரண்டுக்கும் இடையேயான மனிதனின் உள்முகப் போராட்டங்கள் குறித்த இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து, மாபெரும் வெற்றி பெற்றது. இவர் 'ரைட்ஸ் ஆஃப் பேஸேஜ்' நாவலுக்காக 1980ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றார். பல விருதுகள், கௌரவங்களைப் பெற்ற இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். 1988ஆம் ஆண்டு சர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம் என பலவிதமான வெற்றிப் படைப்புகளைத் தந்த வில்லியம் கோல்டிங் 1993ஆம் ஆண்டு மறைந்தார்.

7 views0 comments

Recent Posts

See All
bottom of page